இரத்தினபுரி மகா சமன் தேவாலயச் சிற்பம்

இரத்தினபுரி மகா சமன் தேவாலயச் சிற்பம் என்பது, இலங்கையின் இரத்தினபுரியில் அமைந்துள்ள இந்து-பௌத்தக் கோயிலான மகா சமன் தேவாலயத்தில் உள்ள ஒரு புடைப்புச் சிற்பம். இது யாழ்ப்பாண இராச்சியத்தில் இடம்பெற்ற வரலாற்றுச் சம்பவம் ஒன்றைப் பதிவு செய்துள்ளது. இதன் கீழ் போர்த்துக்கேய மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்றும் உள்ளது. இச்சிற்பத்தில் வாளைத் தலைக்கு மேல் ஓங்கியபடி நிற்கும் ஒரு போர்த்துக்கேய வீரனின் உருவமும், அவன் காலுக்குக் கீழே விழுந்து கிடக்கும் இன்னொரு மனிதனின் உருவமும் காணப்படுகிறது.

இரத்தினபுரி மகா சமன் தேவாலயத்தில் உள்ள புடைப்புச் சிற்பம்

முன்னர், இது போர்த்துக்கேயருக்கும் கண்டி இராச்சியத்துக்கும் இடையிலான போரில் சிங்கள வீரன் ஒருவனைப் போர்த்துக்கேய வீரன் கொல்லும் ஒரு காட்சி எனக் கருதப்பட்டது ஆயினும். பிற்காலத்தில் கிடைத்த புதிய தகவல்களின் அடிப்படையில், 1590ல் போர்த்துக்கேயர் யாழ்ப்பாண இராச்சியத்துக்கு எதிராகப் படையெடுத்து அதனைக் கைப்பற்றிய போது யாழ்ப்பாண இளவரசன் ஒருவனைப் போர்த்துக்கேயத் தளபதி ஒருவன் காப்பாற்றும் ஒரு காட்சியே இது என உறுதிப்படுத்தப்பட்டது.

சிற்பம் குறிக்கும் சம்பவம்

தொகு

1870ல் தான் எழுதிய நூலில் வில்லியம் இசுக்கீன் என்பார் இந்தச் சிற்பம் பற்றிப் பின்வருமாறு விபரித்துள்ளார்.

"இதில் முழு அளவின் அரைப்பங்கு அளவு கொண்ட இரண்டு உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. தலை முதல் கால் வரை கவசமணிந்த போர்த்துக்கேயன் ஒருவனுக்கும், சிங்கள வீரன் ஒருவனுக்கும் இடையேயான சண்டையின் இறுதிக் கட்டத்தை இது காட்டுகிறது. சிங்கள வீரன் சண்டையில் தோல்வியுற்று விழுந்து கிடக்கிறான்; அவனது வாளும் கேடயமும் பக்கத்தில் கிடக்கின்றன; எதிரியின் காலில் மிதிபட்டபடி விழுந்த நிலையில் கிடக்கும் அவன் இன்னும் ஒரு தாக்குதலில் உயிர் இழக்கும் நிலையில் இருக்கிறான்."[1]

இதன் கீழே உள்ள கல்வெட்டுப் பற்றிக் குறிப்பிட்ட அவர், அது உரோம எழுத்துக்களும், சிங்கள எழுத்துக்களும் கலந்து எழுதப்பட்டு இருப்பதாகவும், கல்வெட்டு முழுமையாகப் படிக்க முடியாதவாறு அழிந்து இருப்பதாகவும் எழுதியுள்ளார். அதேவேளை, சிற்பத்தில் உள்ள போர்த்துக்கேய வீரனின் பெயர் "கோமஸ்" என்று வாசித்து அறிய முடிவதாகவும், கீழே கிடப்பவன் சிங்களவர்களின் பெரும் வீரனும், பல போர்த்துக்கேய வீரர்களைக் கொன்று அவர்களுக்குப் பெரும் தொல்லைகளைக் கொடுத்தவனுமான குருவிட்ட பண்டார என்பவன் என மக்கள் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.[2]

கல்வெட்டு வாசிப்பு

தொகு

இந்தச் சிற்பம் குறித்து ஆராய்ந்த டி. டபிள்யூ. பெர்கூசன் என்பார் இசுக்கீனின் குறிப்பில் இருந்த தவறுகள் பலவற்றை எடுத்துக்காட்டினார். கல்வெட்டு போர்த்துக்கேய மொழியில் எழுதப்பட்டது என்பதை அறிந்த அவர் முடிந்தவரை அதை வாசித்தறிய முற்பட்டார். கல்வெட்டு எழுத்துக்களைப் பின்வருமாறு அவர் அடையாளம் கண்டார்.[3]

COM • ESTA • RENDl • ESTE • HA 23 • ANNOS • QVE
ANDO • NA • INDIA • E • HA 15 • QVE • SIRVO • DE • CA
PITAO • E • TAOQVE§ • OS • REIS ... DE ... E • REI
DE • IAFANAPATAO • EV- SIMAO- PINHAO • VENCI

"இந்த வாளால் நான் இந்த மனிதனை வெற்றி கொண்டேன், இந்தியாவில் இருந்த 23 (?) ஆண்டுகளில் 15 (?) ஆண்டுகள் கப்பித்தானாக இருந்தேன்; (?) உடனேயே அரசர்கள் ...... மற்றும் யாழ்ப்பாண அரசன், சிமோ பிஞ்ஞாவோ ஆகிய நான் அவனை வெற்றி கொண்டேன்". என்பது பெர்கூசனின் ஆங்கில மொழிபெயர்ப்பின் பொருள். இதை அடிப்படையாகக் கொண்டு சிற்பத்தில் உள்ள போர்த்துக்கேய வீரன் சிமோ பிஞ்ஞாவோ (Simao Pinhao) என அடையாளம் கண்டார். அத்துடன், இந்நிகழ்வு யாழ்ப்பாண அரசனுடன் தொடர்பு உடையது என்னும் ஐயம் அவருக்கு இருந்தாலும், அந்நிகழ்வு எது என்றோ, தோல்வியுற்றது யார் என்றோ அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

குவெய்ரோசு பாதிரியாரின் குறிப்புகள்

தொகு

குவெய்ரோசு பாதிரியாரின் நூல் வெளிப்பட்ட பின்னரே இந்தப் புதிருக்கு விடை கிடைத்தது. 1590ம் ஆண்டு அந்தரே பூர்த்தாடோ தலைமையில் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தின் மீது தாக்குதல் தொடுத்தனர். இப்படை நடவடிக்கையில் சிமோவோ பிஞ்ஞாவோ ஒரு கப்பித்தானாக இணைந்திருந்தான். இந்தப் போரில் நல்லூருக்கு அருகில் இடம் பெற்ற சண்டை ஒன்றில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்று குறித்து குவைரோசு பாதிரியார் விளக்கியுள்ளார். இளம் அரசகுமாரனான எதிர்மன்னசிங்க குமாரன், தான் முன்னாள் அரசன் பெரியபிள்ளையின் மகன் எனக்கூறித் தன்னைக் கொல்ல வேண்டாம் எனக் கத்தினான். இதைக் கேட்ட சிமோவோ பிஞ்ஞாவோ அவனருகில் விரைந்து சென்று இளவரசனுக்கு முன்னே போய் நின்றுகொண்டான். எனினும் ஏற்கெனவே அவனுடைய காதணியைப் பறிப்பதற்காக இழுத்ததில் அவனது காது பிய்ந்திருந்தது. காலிலும் வயிற்றிலும் இரண்டு காயங்களுடன் அவன் நிலத்தில் வீழ்ந்துவிட்டான். பிஞ்ஞாவோ அவனைக் காப்பாற்றுவதற்காகத் தனது காலில் ஒன்றை அவனது உடல் மீது வைத்தான். இந்த இளவரசன் பின்னர் அந்தரே பூர்த்தாடோவிடம் ஒப்படைக்கப்பட்டான்.[4] அப்போதைய யாழ்ப்பாண அரசனைக் கொன்ற போர்த்துக்கேயர், காப்பாற்றப்பட்ட எதிர்மன்னசிங்க குமாரனை அரசனாக்கினர்.

மேற்படி குறிப்பில் காணும், இளவரசன் எதிர்மன்னசிங்க குமாரன், சிமோவோ பிஞ்ஞாவோவினால் காப்பாற்றப்படும் காட்சியே சமன் தேவாலயச் சிற்பத்தில் உள்ளது என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

குறிப்புகள்

தொகு
  1. Skeen, William., Adam's Peak, W. L. H. Skeen & Co., Colombo, 1870. p. 126.
  2. Skeen, William., 1870. p. 126.
  3. Ferguson, D. W., The Inscribed Mural Stone at the Maha Saman Devale, ratnapura, Journal of the Ceylon Branch of Royal Asiatic Society, Vol. XVI, No. 50, 1899, Colombo.
  4. De Queyroz, Fernao, The Temporal and Spiritual Conquest of Ceylon, Asian Educational Services, New Delhi, 1992. p. 452, 453.