இரவுக் காவல் (ஓவியம்)

இரவுக் காவல் (Night Watch) என்பது, ஒல்லாந்த ஓவியர் ராம்பிராண்ட் வான் ரீன் (Rembrandt van Rijn) என்பவரால் வரையப்பட்ட புகழ் பெற்ற ஓவியம் ஆகும். இது தற்போது நெதர்லாந்தின் தலைநகர் அம்சுடர்டாமில் உள்ள "ரீக்சுமியூசியம்" என்னும் அரச அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்த அருங்காட்சியகத்தில் உள்ள ஓவியங்களில் மிகவும் புகழ் பெற்ற ஓவியம் இதுவே. அத்துடன் உலகின் மிகவும் புகழ் பெற்ற ஓவியங்களில் ஒன்றாகவும் இது மதிக்கப்படுகின்றது.

இரவுக் காவல் (De Nachtwacht)
ஓவியர்ரெம்பிராண்ட்
ஆண்டு1642
வகைஎண்ணெய்வண்ண ஓவியம்
இடம்ரீக்சு அருங்காட்சியகம், அம்சுட்டர்டாம்

முக்கிய அம்சங்கள்

தொகு

இவ்வோவியத்தின் புகழுக்கு மூன்று விடயங்கள் முக்கியமான காரணங்களாகக் கூறப்படுகின்றன. ஒன்று, இதன் அளவு. இரண்டாவது, ஒளியையும் நிழலையும் ஓவியத்தில் கையாண்டிருக்கும் விதம். மூன்றாவது, நிலையான படம் என்பதற்குப் புறம்பாக இதில் காணப்படும் இயக்க உணர்வு. மிகவும் பெரிய ஓவியமான இதன் அளவு 363 சமீ x 437 சமீ (11 அடி 10 அங். x 14 அடி 4 அங்.).


இந்த ஓவியம் 1642 ஆம் ஆண்டில், ஒல்லாந்தரின் பொற்காலம் என்று சொல்லப்படும் ஒரு காலப் பகுதியில் வரைந்து முடிக்கப்பட்டது. இவ்வோவியத்தின் பெயர் வரக் காரணமான நகர் காவலர் பிரிவை அதன் தலைவரான பிராண்சு பானிங் கோக், லெப்டினன்ட் வில்லெம் வான் ரூய்ட்டென்பர்க் என்போர் வெளியே நடத்திச் செல்வதை இவ்வோவியம் காட்டுகிறது. ஒளியையும் நிழலையும் திறமையாகப் பயன்படுத்தி ஓவியத்தில் காணும் முக்கியமான பாத்திரங்கள் மீது ஓவியர் பார்ப்போரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ஓவியத்தில் செய்யப்பட்ட மாறுதல்கள்

தொகு
 
1715 ஆம் ஆண்டில் உண்மையான ஓவியத்திலிருந்து அகற்றப்பட்ட பகுதிகளைக் காட்டும் அதன் 17 ஆம் நூற்றாண்டுப் பிரதி

இவ்வோவியம் வரையப்பட்டதற்குப் பிற்பட்ட காலத்தின் பெரும் பகுதியிலும் இதன் மீது சற்று மங்கல் நிறமான "வார்னிசு" எனப்படும் ஒளிபுகவிடும் பூச்சு பூசப்பட்டிருந்தது. இதனால், இப்படத்தில் காணப்படுவது ஒரு இரவுக் காட்சி என்பது போன்ற பிழையான தோற்றம் இருந்துவந்தது. 1940 ஆம் ஆண்டில் இப் பூச்சு அகற்றப்பட்டது.

1715 ஆம் ஆண்டில் இது அதன் முன்னைய இடத்திலிருந்து அம்சுட்டர்டாம் நகர மண்டபத்துக்கு இடம் மாற்றப்பட்டபோது இதன் நான்கு பக்கங்களிலும் இருந்து பகுதிகள் வெட்டி அகற்றப்பட்டன. புதிய இடத்தில் இரண்டு தூண்களுக்கு இடையில் பொருந்துமாறு அதன் அளவைக் குறைப்பதற்காக இவ்வாறு செய்திருக்கலாம் எனக் கருதுகின்றனர். 19 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இவ்வாறு செய்வது வழமையாக இருந்தது. இதனால் ஓவியத்தின் வலப் பக்கத்தில் இருந்த இரண்டு மனித உருவங்களும்; மேற்புறத்தில் வளைவின் மேற்பகுதி, கைப்பிடிச்சுவர், படிக்கட்டின் விளிம்பு என்பனவும் அகற்றப்பட்டன. கைப்பிடிச் சுவரும், படிக்கட்டும், ஓவியத்துக்கு முன்னோக்கிய இயக்க உணர்வைக் கொடுப்பதற்காக ஓவியரால் பயன்படுத்தப்பட்டவை. இப்போது இலண்டன் தேசிய ஓவியக் கூடத்தில் உள்ள இவ்வோவியத்தின் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரதி ஒன்று இவ்வோவியத்தின் பழைய நிலையைக் காட்டுகிறது.

வரைதல் பணி

தொகு

இந்த ஓவியத்தைக் குடிமக்கள் காவல் படையின் தலைவரும் அதன் 17 உறுப்பினர்களும் சேர்ந்து வரைவித்தனர். எனினும், ஓவியத்தின் பின்னணியில் படைத் தலைவர் தவிர்ந்த 18 பெயர்கள் உள்ளன. ஓவித்தில் காணப்படும் தோற்கருவி வாசிப்பவர் காவற்படையைச் சேராதவர். ஊதியம் கொடுத்துப் பணிக்கு அமர்த்தப்பட்டவர். இதனால் பணம் எதுவும் கொடுக்காமல் இலவசமாகவே ஓவியத்தில் இடம் பெற்றார். ஓவியத்தில் மொத்தமாக 34 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த ஓவியத்தை வரைந்த ரெம்பிரான்டுக்கு 1,600 கில்டர்கள் பணம் வழங்கப்பட்டது. அக்காலத்தில் இது ஒரு பெரிய தொகை. அக்காலத்தில் வெவ்வேறு ஓவியர்களால் ஆயுதப் படையினரை மையப்படுத்தி வரையப்பட்ட ஏழு ஓவியங்களுள் இதுவும் ஒன்று.

வரவேற்பு

தொகு

பொதுமக்களிடம் போதிய வரவேற்பின்மை காரணமாக, இதன் புகழ் சரியத் தொடங்கியது. கே.எல்.எம் என்ற ஒரு விளம்பர நிறுவனமானது 1967ம் ஆண்டு, இரவுக்காவல் ஓவியத்தை மையப்படுத்தி ஓவியம் ஒன்றை வரைந்தது. அதில், இரவுக்காவல் என்ற ஒப்பற்ற ஓவியத்தை வரைந்த ரெம்பிராண்ட் என்பவர், ஓவியத்திற்காக தான் வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலையில் கடைசி வரை வாழ்ந்தார் என சித்தரித்தது. ஆனால் ரெம்பிராண்டின் வாழ்க்கையில், அவரது ஓவியத்தை விமர்சித்ததாக எந்த ஒரு பதிவும் காணப்படவில்லை. இந்த ஓவியத்தினால் அவருக்கு பெரும் சரிவு ஏற்படுத்தினாலும், அவர் உபயோகப்படுத்திய வண்ணக்கூறுகள் யாவும் பிற ஓவியர்களால் பின்பற்றப்பட்டது. 1640க்குப் பின்னர், பளிச்சென்ற நிறங்கள் மற்றும் தெய்வீகமான முறையில் வரையப்படும் ஓவியங்களையே அதிகமானோர் விரும்பினர்.

காழ்ப்புணர்ச்சிகள்

தொகு

1911ம் ஆண்டு சனவரி மாதம் 13ம் நாள் ஒரு மனிதன், தச்சரின் கத்தியைக் கொண்டு ஓவியத்தை கிழித்தெறிந்தான்.
1975ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் நாள், வேலையிழந்த பள்ளி ஆசிரியர் ஒருவரால் ரொட்டியை வெட்டும் கத்தியால் குறுக்கும் நெடுக்குமாக கிழிக்கப்பட்டது. இதனை சரி செய்ய நான்கு ஆண்டுகளாயிற்று.ஆனாலும் ஓவியத்தில், ஒட்டுப்போட்ட அடையாளங்கள் தெரியவே செய்தன.
1990ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் நாள் ஒரு மனிதன், ஒரு புட்டியில் மறைத்து கொண்டு வந்த அமிலத்தை ஓவியத்தின் மீது தெளித்தான். காவலர்கள் உடனடியாக வந்து ஓவியத்தின் மீது தண்ணீரை தெளித்தனர். அமிலமானது, ஓவியத்தின் வெளிப்புறத்தை மட்டும் பாதித்திருந்ததால், அதை சுலபமாக மீட்டெடுத்தனர்[1] .

காட்சிப்படுத்துதல்

தொகு

அக்டோபர் 26ம் தேதி 2011ம் ஆண்டன்று, ரீச்சு அருங்காட்சியகத்திலுள்ள இந்த ஓவியத்திற்கு புதிய ஒளிகாலும் இருமுனையம் விளக்குகள் பொருத்தப்பட்டது. புதிய தொழில்நுட்பத்தின் மூலம், ஓவியத்தின் நுணுக்கங்கள் தெளிவாக வெளிப்பட்டது. பிலிப்ஸ் லைட்டிங் என்பவர் மூலம் உருவாக்கப்பட்ட ஆக்கத்தை, அருங்காட்சியக இயக்குனர் விம் பிஜ்பெஸ், தலைவர் பிலிப்ஸ் மற்றும் நிர்வாக இயக்குனர் ப்ரான்ஸ் வேன் ஹூடன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்[2].

மற்ற பிரதிமைகள்

தொகு
 
இரவுக்காவல் ஓவியத்தின் காட்சியை விளக்கும் சிற்பங்கள்
  • இரசியக் கலைஞர் அலெக்சாண்டர் தாராத்திநாவ் என்பவர், இரவுக்காவல் ஓவியத்தின் பிரதியை வெண்கலத்தால் உருவாக்கி 2006 முதல் 2009 வரை ஆம்ஸ்டர்டாமின் ரெம்பிராண்ட்பிளைன் சதுக்கத்தில் காட்சிப்படுத்தினார்.
  • இந்த ஓவியத்தின் முழு அளவிலான பிரதியை நியூயார்க்கிலுள்ள, கனாஜோயரி கலைக்கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
  • பிரித்தானிய பதிப்பகத்தின் முன் அட்டையில் இரவுக்காவல் ஓவியத்தை அச்சிட்டு கவுரவப்படுத்தினர்.

சான்றுகள்

தொகு
  1. "Rembrandt's 'Night Watch' Painting Vandalized". Los Angeles Times. அசோசியேட்டட் பிரெசு (LATimes.com). 6 April 1990. http://articles.latimes.com/1990-04-06/news/mn-973_1_night-watch. பார்த்த நாள்: 2013-02-19. 
  2. Philips(26 October 2011). "Philips sheds new light on Night Watch". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2013-02-19.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவுக்_காவல்_(ஓவியம்)&oldid=3354268" இலிருந்து மீள்விக்கப்பட்டது