இராமச்சந்திரக் கவிராயர்

இராமச்சந்திரக் கவிராயர் என்பவர் 19-ஆவது நூற்றாண்டில் சென்னையில் வாழ்ந்த ஒரு புலவர். இவர் சிறந்த கவிஞராக விளங்கியதால் இவருக்குக் கவிச்சக்கரவர்த்தி, கவிராயர் எனப் பாராட்டப்பெற்றவர்[1]

இவர் இராச நல்லூரில் பிறந்தவர் என்றும், இராசு மரபினர் என்றும் சைவ சமயத்தைச் சேர்ந்தவர் என்றும் குறிப்புகள் உள்ளன.

இவர் சென்னைக் கல்விக் கழகத்தில் உறுப்பினராக விளங்கினார். அப்பொழுது ஆட்சியாளராக இருந்த எல்லீசு துரையுடன் நெருங்கிப்பழகினார்.

இவர் பல தனிப்பாடல்கள் பாடியுள்ளார். அவற்றில் பலவும் தனிச்செய்யுட் சிந்தாமணி என்ற நூலில் காணப்படுகின்றன. நடுவெழுத்தலங்காரம், சத்தபங்கி, நவபங்கி, முதலிய சித்திரக் கவிகள் பாடுவதில் இவர் மிக வல்லவராயிருந்தார்" என்கிறது வாழ்வியற் களஞ்சியம்.

இவை தவிர சகுந்தலை விலாசம், தாருக விலாசம், இரணிய வாசகப்பா, இரங்கூன் சண்டை நாடகம், குரவச் சக்கரவர்த்தி நாடகம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

இவர் எளிய சொற்களில் நகைச்சுவை பொருந்தப் பாடும் ஆற்றலும் பெற்றிருந்தார். இவர் சிறந்த நாடக ஆசிரியருமாவார்.

இவரது பாடல் ஓர் எடுத்துக்காட்டு தொகு

இவர் தனது பாடல் ஒன்றில் புல்லுக் கட்டு, நெல்லுக் கட்டு, 'பணக்கட்டு, சொல்லுக் கட்டு, மல்லுக்கட்டு என்று சொற்களை அடுக்குச் செல்வது இவரது தமிழ்நடைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

புல்லுக் கட்டும் விறகும் சுமந்தபேர் பூர்வ காலத்துப் புண்ணிய வசத்தினால்
நெல்லுக் கட்டும் பணக் கட்டும் கண்டபின் நீலக்கல்லில் கடுக்கனும் போடுவார்
சொல்லுக் கட்டும் புலவரைக் கண்டக் காற்றூறிப் பாய்ந்து கதவை அடைத்து எதிர்
மல்லுக் கட்டும் மடையரைப் பாடவோ மலைச் சாரலில் வாழ் பெரியம்மையே. (3)

[2]

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

  1. வாழ்வியற் களஞ்சியம், தொகுதி-4, தஞ்சைப் பல்கலைக்கழகம், (தஞ்சைப் பல்கலைக்கழக வெளியீடு 53-4), மறுபதிப்பு 2009 (முதற்பதிப்பு திருவள்ளுவரான்டு 2018, ஏப்பிரல் 1987)
  2. தனிப்பாடல் திரட்டு மூலம் பக்கம் 119-127