இலக்கணக் கொத்து

(இலக்கண கொத்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலக்கணக் கொத்து ஒரு தமிழ் இலக்கண நூல். இது வடமொழி இலக்கண மரபைத் தழுவி எழுதப்பட்டது. பாண்டி நாட்டைச் சேர்ந்த சுவாமிநாத தேசிகர் என்பவர் இந்நூலை இயற்றினார். இவரே அதற்கு உரையும் எழுதியுள்ளார்[1]. சைவ மடாலயங்களில் தமிழிலக்கணப் பயிற்சிக்காகப் பயின்றுவந்த நூல்களில் இதுவும் ஒன்று. இது 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

அமைப்பு

தொகு

185 அடிகளைக் கொண்ட நீண்ட பாயிரம் உட்பட இந்நூலில் 131பாடல்கள் உள்ளன. வேற்றுமையியல், வினையியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களாக நூல் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் வேற்றுமையியலில் 52 பாடல்களும், வினையியல், ஒழிபியல் ஆகியவற்றில் முறையே 22, 45 பாடல்களும் உள்ளன. 31 அடிகளையுடைய இதன் சிறப்புப் பாயிரம் நேரிசை ஆசிரியப்பாவகையைச் சார்ந்தது[2].

நூற்கொள்கை

தொகு

வடமொழி இலக்கணமும் தமிழ் இலக்கணமும் ஒன்றே என நிறுவ முனையும் இந்நூல் தமிழ் மொழியைத் தாழ்த்தி வடமொழியை உயர்த்திப் பேசுகிறது. இந்நூலின் ஏழாவது நூற்பா, தமிழில் அளவில்லாத நூல்கள் இருந்தாலும் ஒன்றாவது தனித் தமிழில் இல்லை என்றும் ஐந்து எழுத்துக்களை மட்டுமே தனக்கெனக் கொண்ட தமிழ் ஒரு மொழி என்று சொல்வதற்கு அறிஞர்கள் வெட்கப்படுவர் என்றும் கூறுகிறது. அந்நூற்பா வருமாறு:


"தமிழ்நூற் களவிலை அவற்றுள்
ஒன்றேயாயினும் தனித்தமிழ் உண்டோ
அன்றியும் ஐந்தெழுத் தாலொரு பாடையென்
றறையவே நாணுவர் அறிவுடையோரே
ஆகையால் யானும் அதுவே அறிக
வடமொழி தமிழ்மொழி எனுமிரு மொழியினும்
இலக்கணம் ஒன்றே என்றே எண்ணுக" [3]


வடமொழி மரபுகளையும் அது சார்ந்த இலக்கியங்களையும் உயர்த்தும் இந்நூல், தமிழ் மரபையும் அது சார்ந்த இலக்கியங்களையும் தாழ்வாகப் பேசுகின்றது. நன்னூல், சின்னூல், அகப்பொருள், காரிகை, அலங்காரம் முதலிய இலக்கணங்களையும், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, இராமன்கதை, நளன்கதை, அரிச்சந்திரன்கதை முதலிய இலக்கியங்களையும் ஒரு பொருளாக எண்ணி வாழ்நாளைக் கழிப்பவர்கள், பாலை விரும்பாது வேறு பலவற்றை விரும்பும் பாற்கடலில் வாழும் மீனுக்கு ஒப்பானவர்கள் என்று இந்நூலின் 99 ஆம் பாடலுக்கான உரையில் கூறுகிறார் இதன் ஆசிரியர்[4]

பதிப்புகள்

தொகு

இலக்கணக் கொத்தை முதன் முதலில் பதிப்பித்தவர் யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர். இப்பதிப்பு 1866 ஆம் ஆண்டில் வெளிவந்தது. பின்னர் 1973 ஆம் ஆண்டில் தி. வே. கோபாலையர் இன்னொரு பதிப்பை வெளியிட்டார். [5].

குறிப்புகள்

தொகு
  1. இளங்குமரன், 2009. பக். 375.
  2. இளங்குமரன், 2009. பக். 376
  3. இலக்கணக் கொத்து, பாடல் 7 அடிகள் 25 - 31
  4. இளங்குமரன், 2009. பக். 378, 379
  5. அருள்முருகன், நா., 2010.

உசாத்துணைகள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்கணக்_கொத்து&oldid=3305205" இலிருந்து மீள்விக்கப்பட்டது