இலங்கைத் தமிழ் வழக்குச் சொல்
இலங்கைத் தமிழ் வழக்குச் சொல் என்பது, தமிழ் நாட்டில் வழக்கில் இல்லாத ஆனால் இலங்கைத் தமிழில் வழங்கும் சொற்களுள் ஒன்றைக் குறிக்கும். இத்தகைய சொற்கள், இலங்கையில் மட்டுமன்றி, இலங்கைத் தமிழர் புலம் பெயர்ந்து வாழும் கனடா, ஆசுத்திரேலியா போன்ற நாடுகளிலும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் கூட வழக்கில் உள்ளன. இலங்கையிலும், தமிழர் வாழும் எல்லாப் பகுதிகளிலும், ஒரே மாதிரியான தமிழ் வழக்கு இருப்பதாகக் கூற முடியாது. இலங்கைத் தமிழை யாழ்ப்பாணத் தமிழ், மட்டக்களப்புத் தமிழ், மலையகத் தமிழ் என்பது போல் பல வட்டார வழக்குகளாகப் பிரித்துப் பார்க்கும் வழக்கு உண்டு. இவ்வாறான வட்டார வழக்குகளுக்கு மட்டுமே உரிய பல்வேறு சிறப்புச் சொற்களும் உள்ளன. இச்சொற்கள் அவ்வப் பகுதி மக்களின் பேச்சு வழக்குகளிலும், நாட்டார் இலக்கிய வழக்குகளிலும் பயன்படுவதைக் காண முடியும்.
இலங்கைத் தமிழுக்கெனச் சிறப்பான வழக்குச் சொற்கள் இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக நீண்டகாலம் தமிழ் நாட்டில் இருந்து கடலால் பிரிக்கப்பட்டிருப்பது. வேறுபட்ட வரலாற்றுச் சூழல்கள், வேறுபட்ட அரசியல் சூழல், வேறுபட்ட வெளிப் பண்பாட்டுத் தாக்கங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இவை தவிரத் தற்காலத்தில் கலைச்சொல் உருவாக்கத்திலும் இலங்கை, தமிழ்நாட்டு அறிஞரிடையே போதிய ஒருங்கிணைப்பு இன்மை காரணமாகக் கலைச்சொற்களிலும் இலங்கை வழக்கு, தமிழ்நாட்டு வழக்கு என்ற வேறுபாடுகள் இருப்பதையும் காணமுடியும்.
அகரமுதலிகளில் இலங்கை வழக்குச் சொற்கள்
தொகுசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியும் (பேரகராதி), கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதியும் இலங்கை வழக்குச் சொற்களாகச் சில சொற்களை அடையாளப்படுத்திக் காட்டுகின்றன. பேரகராதி இச்சொற்களை யாழ்ப்பாண வழக்குச் சொற்கள் எனவே குறித்துள்ளது. பேரகராதியில், ஏறத்தாழ 2786 சொற்கள் யாழ்ப்பாண வழக்குச் சொற்களாகக் காட்டப்பட்டுள்ளன. கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் 1700 வரையான சொற்களே இலங்கை வழக்குச் சொற்கள் எனக் காட்டப்படுகின்றன.[1] பேரகராதி 1932க்கு முற்பட்ட காலத்து நிலைமைகளைத் தருகிறது. கிரியாவின் அகராதி 2008 ஆம் ஆண்டு நிலைமையைக் குறிக்கிறது. எனவே இந்த எண்ணிக்கை வேறுபாடு இடைப்பட்ட ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டுக் காலப்பகுதியில் ஏற்பட்ட வளர்ச்சியின் விளைவுகளைக் காட்டுவதாகக் கொள்ளலாம்.
குறிப்புகள்
தொகு- ↑ சுசீந்திரராசா, சு., 2011, பக். 1.
உசாத்துணைகள்
தொகு- சுசீந்திரராசா, சு., தமிழியல்சார் சிந்தனைத் துளிகள் - 2, சேமமடு பதிப்பகம், கொழும்பு, 2011.