இலங்கையின் வெந்நீரூற்றுக்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
புவியின் பல்வேறு பகுதிகளில் வெந்நீரூற்றுக்கள் காணப்படுகின்றன. இலங்கையும் இவ்வாறான வெந்நீரூற்றுக்களைக் கொண்டுள்ளன.
இலங்கையிலுள்ள வெந்நீரூற்றுக்கள்
தொகு- கீரிமலை (யாழ்குடா நாடு)
- ரத்திகிரிய (மதவாச்சி)
- கன்னியா (திருகோணமலை)
- கல்வௌ (வெலிகந்த)
- கபுரெல்ல
- மகசியம்பலாகம (மகா ஓயா)
- மரங்கல மஹவ (மகா ஓயா)
- கிவுலேகம (ஜயந்திவௌ – திருக்கோவில்)
- மஹபலஸ்ஸ (மதுனாகல அம்பலாந்தோட்டை)
இவை தவிர அட்டபொதவில் உள்ள கற்றபோ எனும் இடத்திலும் வெந்நீரூற்றுக்கள் உள்ளன. அத்தோடு இங்கினியாகலையில் சேனநாயக்க சமுத்திரத்தின் கீழ் அமிழ்ந்து போன நிலப்பகுதியிலும் இப்படியான வெந்நீரூற்றொன்று இருந்ததாகக் கருதப்படுகின்றது.
வரலாற்றுத் தரவுகள்
தொகு- 1798 ல் ரொபட் பர்சிவல் எனும் வைத்தியர் இலங்கை பற்றி எழுதிய நூலில் கன்னியாவிலுள்ள 7 வெந்நீரூற்றுக்கள் பற்றியும் எழுதியுள்ளார். அக்காலத்தில் அவ்வூற்றுக்களின் வெப்பநிலை 98பாகை பரனைட்டு முதல் 106 பாகை பரனைட்டு வரை (36.6 பாகை செல்சியசு – 41.38 பாகை செல்சியசு இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி எமது வெந்நீரூற்றுக்களின் வெப்பநிலை 42 பாகை செல்சியசு முதல் 55 பாகை செல்சியசு வரை வேறுபடுவதாக அறியப்பட்டுள்ளது.
- 1816 – 1820 காலப்பகுதியில் தாம் கண்ட இலங்கையைப் பற்றி ஜோன்டேவி என்பவர் எழுதிய நூலில் கன்னியாவிலுள்ள சில வெந்நீர்க்கிணறுகளில் மீன்கள் வாழ்ந்ததைக் கண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு கிணற்றுக்குக் கிணறு நீரின் வெப்பநிலை வேறுபட்டுக் காணப்படுவதால் அவை ஒரே ஊற்றிலிருந்து தோன்றியவை அல்ல என அவர் அனுமானித்துக் கூறியுள்ளார்.
கிழக்கில் வெந்நீரூற்றுக்கள்
தொகுஇலங்கையின் வெந்நீரூற்றுக்களில் பெரும்பாலானவை கிழக்கு மாகாணத்திலேயே காணப்படுகின்றன. எரிமலைகளின் தொழிற்பாடு காரணமாகவே வெந்நீரூற்றுக்கள் தோன்றுவதாகக் கருதப்படுகின்றது. கிழக்கில் வெந்நீரூற்றுக்கள் காணப்படும் பகுதிகளுக்கு அண்மையில் டொலரைற்று (Dolerrite) எனும் தீப்பாறை வகை காணப்படுகிறது. எரிமலை வெடிப்புக்கின் விளைவாகவே இவ்வகைத் தீப்பாறைகள் உருவாகின்றன. எனவே மிக முந்திய காலத்தில் இப்பிரதேசங்களில் எரிமலைத் தொழிற்பாடுகள் நிகழ்ந்துள்ளனவா எனச் சந்தேகிக்கப்படுகின்றது. இந்த டொலரைற்றுப் பாறைகள் சுமார் 135 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றியிருக்கலாம் என தெரிய வருகின்றது. என்றாலும் வரலாற்றுக்குட்பட்ட காலத்தில் இலங்கையில் எரிமலை வெடிப்புக்கள் நிகழ்ந்துள்ளதற்கான சான்றுகள் எதுவுமில்லை. எனவே இலங்கையில் வெந்நீரூற்றுக்கள் தோன்றுவதற்கு எரிமலைத் தொழிற்பாடு காரணமாக இருந்திருக்காது எனத் தோன்றுகின்றது.
கதிர்த் தொழிற்பாடு
தொகுபாறைகளிலுள்ள கதிர்த் தொழிற்பாட்டு மூலகங்களின் கதிர்வீச்சல் காரணமாகச் சூழவுள்ள நீர் சூடேறக்கூடும். மகாஓய, அம்லாந்தோட்டை போன்ற பிரதேசங்களில் யுரேனியம் தாதுப் பொருட்கள் இருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ள போதிலும் வெந்நீரூற்றுக்களைச் சூழவுள்ள கதிர் வீசலுக்குரிய அறிகுறிகள் எதுவும் இதுவரை புலப்படவில்லை. எனவே இலங்கையில் வெந்நீரூற்றுக்கள் தோன்றுவதற்கு கதிர்த் தொழிற்பாடுடைய மூலகங்கள் காரணம் எனக் கருத முடியாது.
உயர்ந்த வெப்பநிலை
தொகுபுவியோட்டினுள் இருக்கும் நீர் பல்வேறு அசைவுகளுக்கு உட்படுகின்றது. இவ்வசைவுகள் காரணமாக நீரின் மீது ஏற்படும் அமுக்கம் மிக அதிகமானதாகும். அத்தோடு புவியின் உட்பகுதியில் காணப்படும் உயர்ந்த வெப்பநிலையும் சேர்ந்து வெந்நீரூற்றுக்கள் தோன்றக் காரணமாக அமையலாம். புவியின் உட்பகுதியை நோக்கிச் செல்லும் ஒவ்வொரு 200 மீற்றருக்கும் வெப்பநிலை 9 பாகை செல்சியசினால் அதிகரிக்கின்றது. இதன்படி பார்த்தால் புவியில் 25 கிலோமீற்றர் ஆழத்தில் வெப்பநிலை 1150 பாகை செல்சியசு அளவு இருக்கக்கூடும். இத்தகைய உயர் வெப்பநிலை காரணமாகப் புவியின் ஆழத்திலிருந்து வரும் நீரூற்றுக்களின் வெப்பநிலையும் உயர்ந்ததாகக் காணப்படலாம். இலங்கையிலுள்ள வெந்நீரூற்றுக்கள் இவ்வாறே தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
தொடர்புடைய இணைப்புகள்
தொகுஆதாரம்
தொகு- அரும்பு - பொது அறிவுச் சஞ்சிகை - இதழ்: 09
- Bryan, T. Scott (1995). The geysers of Yellowstone. Niwot, Colorado: University Press of Colorado. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87081-365-X