இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் பதினெட்டாவது திருத்தம்

(இலங்கை அரசியலமைப்பின் 18ஆவது சீர்திருத்தம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் பதினெட்டாவது திருத்தம் (Eighteenth Amendment (18) to the Constitution of Sri Lanka) என்பது இலங்கை சனாதிபதியின் நிறைவேற்றதிகாரங்களை மேலும் அதிகரிக்கும் பொருட்டு மகிந்த ராசபக்சவின் தலைமையிலான அரசினால் 2010 செப்டெம்பர் 9 அன்று இலங்கை நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத்திற்கு நிறைவேற்றப்பட்ட ஒரு திருத்தச் சட்டம் ஆகும்.

இந்த அரசியல் சீர்திருத்தம் மூலம் அரச அதிபர் தேர்தலில் இரண்டு முறை மட்டுமே ஒருவர் போட்டியிடாலாம் என்ற நிலை நீக்கப்பட்டு ஒருவர் எத்தனை தடவையும் போட்டியிடும் அனுமதி வழங்கப்படும். இதேவேளை சுயாதீன ஆணைக்குழுக்கள் இந்ந திருத்தம் மூலம் அரச அதிபரின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது. மேலும் தேர்தல் ஆணையாளரின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படுவதுடன் அரச சொத்துக்களை தேர்த்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் உரிமையையும் தேர்தல் ஆணையாளர் இழக்கின்றார். தேர்தல் காலங்களில் தனியார் ஊடங்கள் செயற்படுவதற்கான விசேட கட்டுப்பாட்டு முறையும் இந்த அரசியலமைப்பு சீர்திருத்தம் மூலம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது[1].

இலங்கையின் தற்போதைய அதிபர் மகிந்த இராசபக்ச எதிர் கட்சி சிறந்த ஒரு வேட்பாளரை தேர்தலில் நிறுத்தும் வரை தான் தொடர்ந்தும் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்[2].

மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு

தொகு

இந்த அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவை பெற்றால் மட்டும் போதும் என்றும் பொது சன வாக்கெடுப்பு தேவையில்லை என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்தது. ஆயினும் ஏற்கனவே மகிந்த இராசபக்ச தலமையிலான அரசிற்கு மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிலரும் தமது ஆதரவை சீர்திருத்தத்திற்கு வழங்கினர்[3].

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உட்பட தமிழ் தேசியக்கூட்டமைபு, மக்கள் விடுதலை முன்ணனி போன்றவை தமது எதிர்ப்பை இந்த சீர்திருத்தத்திற்கு தெரிவித்துள்ளனர்.

9 செப்டெம்பர், 2010 இல் இலங்கைப் நாடாளுமன்றத்தில் இந்த அரசியல் சீர்த்திருத்தம் 161 ஆதரவு வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. 17 எதிர் வாக்குகள் இந்த சீர்திருத்தத்திற்கு எதிராக செலுத்தப்பட்டது[4]. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இந்த வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் வெளிநடப்புச் செய்தது.

எதிர்ப்பு

தொகு

இந்த அரசியல் அமைப்பிற்கு பிரதான எதிர்கட்டசி உட்பட பல கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆயினும் இலங்கை அதிபர் மகிந்த இராசபக்சவின் ஆதரவாளர்கள் சீர்த்திருத்தம் நிறைவேறிய தினம் பட்டாசு கொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கொங் கொங்கை தளமாகக் கொண்டுள்ள மனித உரிமைகள் நிறுவனம் ஒன்று இந்த அரசியல் சீர்திருத்தம் மூலம் இலங்கையின் சுதந்திரமான சனநாயகம் முடிவிற்கு வரும் என்று கவலை வெளியிட்டுள்ளது[5].

உசாத்துணை

தொகு
  1. 18ஆவது சீர்திருத்தம் (ஆங்கில மொழியில்)
  2. தமிழ் மிரர் 9 ஆகஸ்ட், 2010
  3. Two more switch (ஆங்கில மொழியில்)
  4. 18ஆவது சீர்திருத்தம் நிறைவேற்றம்
  5. "Top S. Lanka court backs president's third-term bid (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2010-09-09. பார்க்கப்பட்ட நாள் 2010-09-09.