இலங்கை கொண்டைக் குயில்
இலங்கை கொண்டைக் குயில் (ceylon pied crested cuckoo) (உயிரியல் பெயர் Clamator jacobinus jacobinus) என்பது சுடலைக் குயிலின் மூன்று கிளையினங்களில் ஒன்றாகும்.[1] இது தென் இந்தியா, இலங்கை, தென் மியான்மர் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.
விளக்கம்
தொகுமைனா அளவில் இருக்கும் இலங்கை கொண்டைக் குயிலானது நீண்ட வாலுடன் சுமார் 33 செ. மீட்டர் நீளம் இருக்கும். இதன் அலகு கருப்புகவும், விழிப்படலம் பழுப்பு நிறத்திலும், கால்கள் ஈய நிறத்திலும், விரல்கள் கறுப்பாகவும் இருக்கும். தலையில் உள்ள கொண்டை உள்ளிட்ட உடலின் மேற்பகுதி முழுக்க கறுப்பாக இருக்கும். உடலின் கீழ்ப்பகுதி முழுக்க வெண்மையாக இருக்கும். இறக்கைகளில் வட்டமான வெள்ளைப் பட்டையும், வால் இறகைகளில் வட்டமான வெள்ளைப் பட்டையும், வால் இறகுகளின் முனையின் மேற்பகுதியின் வெண்மையும் பறக்கும்போது தெளிவாகத் தெரியும். ஆண் பெண் பறவைகள் ஒன்றுபோல இருக்கும்.[2]
பரவலும் வாழிடமும்
தொகுஇப்பறவை தென்னிந்தியா, இலங்கை, தென் மியான்மர் ஆகிய புகுதிகளில் காணப்படுகிறது. ஆந்திராவின் வட பகுதி தவிர தென்னிந்தியா முழுவதும் மழைக்காலத்தில் பரவலாகவும், கோடைக் காலத்தில் ஆங்காங்கேயும் காண இயலும். மலைகளில் 2000 மீட்டர் உயரம்வரை காணப்படுகிறது.[2]
நடத்தை
தொகுமரக்கிளைகளிடையேயும், புதர்களிடையேயும், பெரும்பாலும் தனித்து புழு பூச்சிகளைப் பிடித்துத் தின்றபடி திரியும். தரையில் ஓடியாடி இரை தேடுவதும் உண்டு. புதருக்கு புதர் தாவிப் பறக்கும். அப்போது எளிதாக அடையாளம் காண இயலும். இது கம்பளிப் பூச்சிகள், சிறு வண்டுகள், எறும்புகள், நத்தைகள், கரையான்கள் போன்றவற்றை பிடித்து உண்ணும்.[2]
பீஇயு பீஇயு.. பீ இயு, பீ ஈஇ... பீ இயு, பீஇயு என ஒலி எழுப்பும். பறக்கும் போது இதன் குரலைக் கேட்க இயலும்.
இனப்பெருக்கம்
தொகுஇவை ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. கூடு கட்டாத இவை தவிட்டுக் குருவி,[3] பூங்குருவி முதலிய பறவைகளின் கூட்டில் ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் இடும். எந்தப் பறவையின் கூட்டில் முட்டை இடுகின்றதோ அந்தப் பறவையின் முட்டை நிறத்தையும் உருவையும் ஒத்ததாக இருக்கும்படி முட்டை இடும் ஆற்றல் கொண்டது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Gill, Frank; Donsker, David, eds. (2019). "Turacos, bustards, cuckoos, mesites, sandgrouse". World Bird List Version 9.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 26 June 2019.
- ↑ 2.0 2.1 2.2 2.3 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. pp. 236–238.
- ↑ "பறவைகள்: நம்பிக்கைகளும் உண்மையும்". Hindu Tamil Thisai. 2020-02-15. பார்க்கப்பட்ட நாள் 2023-08-22.