இலட்சுமி கோவில், ஆஸ்லாந்து, மாசசூசெட்ஸ்
அருள்மிகு இலட்சுமி கோவில் அமெரிக்க நாட்டில், மாசசூசெட்ஸ் மாநிலத்தின் ஆஸ்லாந்து நகரில் அமைந்துள்ளது. இது நியூ இங்கிலாந்து இந்து கோவில். (ஆங்கிலம்: New England Hindu Temple, Inc., NEHTI) என்றும் அழைக்கப்படுகிறது. மாசசூசெட்ஸ் மாநிலத்தின் நியூ இங்கிலாந்து பகுதியில் அமைந்துள்ள பாரம்பரிய மிக்க முதல் இந்து கோவில் ஆகும்.[1] 1990ஆம் ஆண்டு இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புரோகிதர்களால் இந்தக் கோவிலின் குடமுழக்கு நிகழ்த்தப்பட்டது. பின்னர், 2005 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் கோவில் விரிவுபடுத்தப்பட்டது. இந்துக்கள் இலட்சுமியை செழுமையின் தெய்வமாக கருதுகின்றனர். எனவே இலட்சுமி இக்கோவிலின் மூலவராக திகழ்கிறார்.[2]
அருள்மிகு இலட்சுமி கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | அமெரிக்கா |
மாநிலம்: | மாசசூசெட்ஸ் |
அமைவு: | 117 வேவர்லி தெரு, ஆஸ்லாந்து, மாசசூசெட்ஸ், 01721 |
ஆள்கூறுகள்: | 42°16′7.3308″N 71°26′34.32″W / 42.268703000°N 71.4428667°W |
கோயில் தகவல்கள் | |
கட்டடக் கலைஞர்: | கணபதி ஸ்தபதி |
இணையதளம்: | https://srilakshmi.org/ |
வரலாறு
தொகு19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தெற்காசியர்கள் அமெரிக்காவிற்கு குடிபெயரத் தொடங்கினாலும், 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை அவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வரவில்லை..[3] 1978 ஆம் ஆண்டில், பாஸ்டன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இந்து இந்தியக் குடியேறிய குடும்பங்களின் ஒரு சிறிய குழு ஒன்று சேர்ந்து பிரார்த்தனை மற்றும் வழிபாடுகளை நடத்தத் தொடங்கினர்.[4][5] இக்குழுவினர் ஒரு முறையான அமைப்பை உருவாக்கினர். இது நியூ இங்கிலாந்து இந்து கோயில் (ஆங்கிலம்: New England Hindu Temple, Inc.). என்று பெயர் பெற்றது. மாசசூசெட்ஸ் மாநிலத்தின் மெல்ரோஸ் நகரில் உள்ள நைட்ஸ் ஆஃப் கொலம்பஸ் ஹாலில் (ஆங்கிலம்: Knights of Columbus Hall) வாராந்திர ஆன்மீகக் கூட்டங்களை இக்குழுவினர் ஏற்பாடு செய்யத் தொடங்கினர்.[1][4][5][6]
வாராந்திர வழிபாட்டுக் கூட்டங்களில் பங்கேற்ற அன்பர்கள், தங்களுடைய நிரந்தர வழிபாட்டுக்கான கோவில் ஒன்றின் தேவையை உணர்ந்தனர். நியூ இங்கிலாந்தில் பாரம்பரிய இந்து கோவில் கட்டும் நோக்கில் இக்குழுவின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் உறுதிப்பணமாக $101 வழங்கினர்.[1][4][5][6] 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி, மெல்ரோஸ், மாசசூசெட்ஸில், கமிட்டி ஒரு கோவிலைக் கட்டும் திட்டத்தை அறிவித்தது.[1][4][5]
நியூ இங்கிலாந்து இந்து கோவில் குழுவினர், 1981 ஆம் ஆண்டில், ஆஸ்லாந்தில் உள்ள வேவர்லி தெருவில் ஒரு கோவிலை கட்டுவதற்காக 12 ஏக்கர் நிலத்தை வாங்கினர்.[2][4][5]
தமிழ்நாட்டின் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை நிறுவனத்தைச் சேர்ந்த கட்டிடக் கலைஞரான கணபதி (சிற்பி), இந்து மத ஆகம (வாஸ்து) நூல்களின்படி கோயிலுக்கான வடிவமைப்புகளை உருவாக்கினார்.[1][2][4] ஏற்கனவே ஸ்தபதி அமெரிக்கா முழுவதும் ஏராளமான இந்து கோவில்களை உருவாக்குவதற்கு வேண்டிய பணிகளை மேற்கொண்டுள்ளார்.[2]
ஜூன் 19, 1984 ஆம் தேதியன்று, கோவில் கட்டப்படும் நிலத்தை புனிதப்படுத்துவதற்கான இந்து சமய சடங்குகளுடன் கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நிறைவடைந்தது.[2][4][5]
இதற்கிடையில், ஜூன் 1985 இல், கோவில் குழுவினர், இந்தியாவில் செயல்படும் திருமலை-திருப்பதி தேவஸ்தானங்கள் (TTD), என்னும் தனியார் அறக்கட்டளையிடம் கடனுக்காக விண்ணப்பித்தனர்.[4][5] இந்த அறக்கட்டளை உலகம் முழுதும் உள்ள இந்துக் கோவில்களுக்கு நிதி மற்றும் பல உதவிகளை செய்து வருகிறது. இந்த அறக்கட்டளை, விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு, நியூ இங்கிலாந்து இந்து கோயிலுக்கு தேவையான நிதியை கடனாக வழங்கியது.[4][5]
1986 ஆம் ஆண்டு, வெளிப்புற பூச்சு வேலைகள் முடிவடைந்தன. கோவிலின் உட்புறம் கட்டிடப்பணிகள் நடந்து கொண்டிருந்த போதிலும், கோவிலுக்கான முதற்கட்ட குடமுழுக்கு நடத்தப்பட்டது.[2][4] உட்புற கட்டிடப்பணிகள் முழுமையடையாமல் இருக்கும் வரை, நீதம் கிராம மன்றத்தில் (ஆங்கிலம்: Needham Village Club) வாராந்திர வழிபாடு நடத்தப்பட்டது.[4][5] 1989 ஆம் ஆண்டு வாக்கில், முழு கோவிலின் கட்டுமானம் நிறைவடைந்தது. மே 1990 ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நான்கு நாட்கள் விமரிசையாக நடைபெற்றது.[2] செழுமையுடன் தொடர்புடைய இந்து தெய்வமான இலட்சுமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் என்பதால், இது பொதுவாக அருள்மிகு இலட்சுமி கோவில் என்று அழைக்கப்படுகிறது.[2]
குடமுழுக்கு விழா நிகழ்வுகள்
தொகு1986 செப்டம்பரில், கோயிலின் வெளிப்புறச் சுவர்கள் கட்டி முடிக்கப்பட்ட பிறகு முதல் குடமுழுக்கு நடைபெற்றது.[2][4]
மே 1990 இல், முழுமையாக முடிக்கப்பட்ட கோவிலுக்கான குடமுழுக்கு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.[2] ஒரு வார குடமுழுக்கு விழா நிகழ்வுகள் கணபதி பூசையுடன் தொடங்கியது. கணபதி தடைகளை நீக்குபவர் என்பது இந்து சமய நம்பிக்கை என்பதால், கணபதியை வணங்கி விழாவினை தொடங்குவது வைதிக மரபு.[7]
இந்தியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த இந்துப் புரோகிதர்கள் இந்து இறை சக்தியை அழைத்து உருவேற்றும் (ஆங்கிலம்: Āvāhana (சமஸ்கிருதம்: आवाहन). சடங்குகளைச் செய்தனர்.[2] இந்தியாவின் கங்கை, மற்றும் அமெரிக்காவின் மிசிசிப்பி, மிசோரி மற்றும் கொலராடோ ஆகிய நதிகளிலிருந்து குடமுழுக்கிற்காக புனித நீர் எடுத்து வரப்பட்டது. வார இறுதியில், பெரிய கலசங்களில் நிரப்பிய புனித நீரை யாகசாலையிலிருந்து பூரோகிதர்கள் தங்கள் தலைகளில் சுமந்தவாறு கோவிலை வலம் வந்த பின்னர், கோபுரம் மற்றும் விமான கலசங்களில் ஊற்றினர்.[2] அதே சமயத்தில், கோவிலில் பிரதிட்டை செய்யப்பட்ட தெய்வச் சிலைகளை புனிதப்படுத்துவதற்காக புரோகிதர்கள் புனித நீர் மற்றும் பால் ஊற்றி நீராட்டு செய்வித்தனர். பின்னர் ஆடை அணிவிக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தெய்வங்களுக்கு அருச்சனை செய்வித்து, தீபம் காட்டி, பூசை செய்யப்பட்டது.[2] இதன் பின்னர் பக்தர்கள் மற்றும் இறை அன்பர்கள் புதிதாகப் பிரதிட்டை செய்யப்பட்ட தெய்வங்களை முதன்முதலாக கண்குளிர தரிசித்து வணங்கினர்.[2]
தெய்வ சன்னதிகள்
தொகுகோவிலின் நிர்வாகிகள், அமெரிக்கா தங்கள் வாழ்க்கையில் நல்வாய்ப்பையும் மகிழ்ச்சியையும் கொண்டு வந்ததாக நம்பினர். எனவே, செழுமையின் தெய்வமான இலட்சுமி, இக்கோவிலின் மூலவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
இக்கோவிலில் மகாகணபதி, வெங்கடேஸ்வரர், நடராசர் - சிவகாமி அம்மன், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், ஹரிஹரபுத்ரன், நவகிரகங்கள் மற்றும் கருடன் ஆகிய துணை தெய்வங்களுக்கு தனித்தனியே சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.[4][5][8]
கோவில் பூசைகள்
தொகுதினசரி பூசைகள்
தொகுகோவிலில் உள்ள தெய்வங்களுக்கான தினசரி வழிப்பாட்டு சடங்குகள் நாள்தோறும் அர்ச்சகர்களால் நடத்தப்படுகின்றன.
நாள்தோறும் நடைபெறும் பூசைகள் இவை: வெங்கடேஸ்வர சுப்ரபாதம், நவக்கிரக அபிசேகம், சுப்பிரமணிய அபிசேகம், விநாயகர் அபிசேகம், சிவன் (ஆத்மலிங்க) அபிசேகம், இலக்ஷ்மி ஆரத்தி மற்றும் ஏகாந்த சேவை.[4][5][8]
வார பூசைகள்
தொகுவாரம் முழுவதும் பல்வேறு பூசைகள் நடைபெறுகின்றன.
ஒவ்வொரு திங்கட்கிழமையும் ருத்ர அபிஷேகம் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமைதோறும் லலிதா சஹஸ்ரநாம குங்கும அர்ச்சனை நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமையன்று, மஹாலட்சுமி அபிசேகம் மற்றும் மஹாலக்ஷ்மி சஹஸ்ரநாம அர்ச்சனை ஆகிய இரண்டும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு சனிக்கிழமையன்றும், சுப்ரபாதம், வெங்கடேஸ்வர அபிஷேகம், அலங்காரம் நடபெறுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.[4][5][8]
கோவில் விரிவாக்கம்
தொகு2005 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முதல் விரிவாக்கத்தைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு, கோவில் வசதிகளை மேம்படுத்துவதற்காக, 16,000 சதுர அடி பரப்பளவில் விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டது.[6][9] இரண்டாவது விரிவாக்கம் முடிந்ததும், கோயில் புதுப்பித்தல் குடமுழுக்கு நடைபெற்றது.[9][10]
விரிவாக்கத் திட்டத்தின் மூலம் கிடைத்த கோவிலுக்கான வசதிகள் இவை: புதிய கலையரங்கம் (ஆங்கிலம்: Auditorium), ஆட்சிக் குழு அறை (ஆங்கிலம்: Board Room), நூலகம், வணிக சமையலறை (ஆங்கிலம்: Commercial kitchen) மற்றும் பக்தர்கள், பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான உணவருந்தும் கூடம் ஆகியவை ஆகும்.[9][10]
எதிர்கொண்ட வெறுக்கத்தக்க குற்றங்கள் மற்றும் விசமத்தனங்கள்
தொகு2003 ஆம் ஆண்டு நிகழ்ந்த பகைமை, வெறுப்பு குற்றம்
தொகு31 அக்டோபர் 2003 ஆம் தேதியன்று இரவில், 17 வயது ஆண் ஒருவர், வண்ண சேற்றினைத் தெளித்த, டிஷ்யூ தாளை (ஆங்கிலம்: Tissue paper) கோவிலின் சொத்தின் மீது வீசினார்.[6][11][12][13]
நவம்பர் 2003 இல், காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒரு விசமி, ஒரு வழிபாட்டுத் தலத்தை அழித்தது அல்லது அச்சுறுத்தியது, $5,000 மதிப்புள்ள சேதத்தை ஏற்படுத்தியது, $250 க்கும் அதிகமான சொத்துக்களை தீங்கிழைக்கும் வகையில் அழித்தது, குறியிட்டது மற்றும் சிவில் உரிமை மீறல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளானான்.[6][13]
2007 இல் விசமத்தனம்
தொகுஜூலை மற்றும் ஆகஸ்ட் 2007 இல் நடந்த சம்பவங்களுக்குப் பிறகு, கோயிலின் வாகன நிறுத்துமிடத்தில் மொலோடோவ் காக்டெய்ல் வகை சாதனங்களை வீசியதாக ஆறு இளைஞர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.[14][15] இந்த விசமச் செயலால் கோயிலின் சொத்துக்களுக்கு $12,000-க்கும் அதிகமாக மதிக்கத்தக்க சேதம் ஏற்பட்டது.[14][15]
இந்தச் செயல்கள், கோவிலை நோக்கி நிகழ்த்தப்பட்ட காழ்ப்புணர்வுக் குற்றங்கள் அல்ல, மாறாக, அங்கொன்று இங்கொன்றாய் நிகழ்த்தப்பட்ட நாசவேலைச் செயல்கள் என்று காவல்துறையும் கோயில் அதிகாரிகளும் தீர்மானித்தனர்.[14][15]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Riess, Jana (2002). The Spiritual traveler : Boston and New England : a guide to sacred sites and peaceful places. New Jersey: HiddenSpring. pp. 127-129. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-58768-008-4.
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 Eck, Diana (1998). Darsan. Delhi: Motilal Banarsidass Publishers. pp. 85–92. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-3266-4.
- ↑ Lyons, Kelly. "South Asians". Global Boston.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 4.11 4.12 4.13 4.14 "Sri Lakshmi Temple".
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ 5.00 5.01 5.02 5.03 5.04 5.05 5.06 5.07 5.08 5.09 5.10 5.11 "Sri Lakshmi Temple , Ashland". Temple Purohit.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 Eck, Diana. "Sri Lakshmi Temple (The New England Hindu Temple, Inc.)". The Pluralism Project Harvard University.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ Brown, Robert (1991). Ganesh: studies of an Asian God. Albany, N.Y.: State University of New York. p. 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7914-0656-3.
- ↑ 8.0 8.1 8.2 "Ashland Sri Lakshmi Temple Timings, Services". Temples in India info.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ 9.0 9.1 9.2 Vijayaraghavan, Ravi. "Sri Lakshmi Temple Kumbabhishekam: a Few Reflections". Lokvani.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ 10.0 10.1 Roy, Anamika. "Ashland Hindu temple expansion underway". MetroWest Daily News. https://www.metrowestdailynews.com/article/20150629/NEWS/150626741.
- ↑ "Officers Investigate Vandalism of Hindu Temple in Ashland, MA". Harvard University Pluralism Project. https://hwpi.harvard.edu/pluralismarchive/news/officers-investigate-vandalism-hindu-temple-ashland-ma.
- ↑ McDonald, Matt. "Teen charged with painting epithets at Hindu temple". The Boston Globe. http://archive.boston.com/news/local/articles/2003/11/30/teen_charged_with_painting_epithets_at_hindu_temple/.
- ↑ 13.0 13.1 "Ashland Teen Faces Decade in Prison for Defacing Hindu Temple". Harvard University Pluralism Project. https://hwpi.harvard.edu/pluralismarchive/news/ashland-teen-faces-decade-prison-defacing-hindu-temple?page=2.
- ↑ 14.0 14.1 14.2 Kocian, Lisa. "A hidden temple grows in Ashland". The Boston Globe. http://archive.boston.com/news/local/articles/2007/10/14/a_hidden_temple_grows_in_ashland/.
- ↑ 15.0 15.1 15.2 MacCormack, Craig. "Police charge six in temple lot vandalism". MetroWest Daily News. https://www.metrowestdailynews.com/article/20070831/NEWS/308319863.