ஈராக்கின் வரலாறு
உலக நாகரிக வரலாற்றில் ஈராக்கின் வரலாறு மிக முக்கியமானது. நவீன ஈராக் நாட்டின் ஆட்சிப் பகுதி 1920 ஆம் ஆண்டில் வரையறுக்கப்பட்டது. இது பண்டைய பபிலோனியாவோடு பொருந்தும் கீழ் மெசொப்பொத்தேமியாவை மையமாகக் கொண்டது. ஆனால், இதற்குள் மேல் மெசொப்பொத்தேமியா, கீழ் மெசொப்பொத்தேமியா, சிரியப் பாலைவனம், அரேபியப் பாலைவனம் ஆகியவற்றின் பகுதிகளும் அடங்கியுள்ளன. இப்பகுதியின் வரலாறு உலகின் மிகப் பழைய எழுத்துமுறை, இலக்கியம், அறிவியல்கள், கணிதம், சட்டம், மெய்யியல்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இதனாலேயே இப்பகுதி பொதுவாக "நாகரிகத்தின் தொட்டில்" என அழைக்கப்படுகின்றது.
பரந்த வளம் பொருந்திய பிரதேசத்தின் ஒரு பகுதியாக, மெசொப்பொத்தேமியாவே புதிய கற்காலத்தில் மிகப் பழைய நாகரிகத் தோற்றத்தின் களமாக விளங்கியது. அத்துடன் இது பண்டைக்கால அண்மைக் கிழக்கின் குறிப்பிடத்தக்க அளவு பகுதியை உள்ளடக்கியதாக வெங்கலக்காலம், இரும்புக்காலம் (சுமேரியா, அக்காடியா, பபிலோனியா, அசிரியா) ஆகிய காலப்பகுதிகள் முழுவதும் இருந்தது.[1] புதுப் பபிலோனியப் பேரரசு வீழ்ச்சியடைந்த பின்னர் மெசொப்பொத்தேமியா முதலில் பாரசீக ஆட்சியின் கீழும் பின்னர் கிரேக்க ஆட்சியின் கீழும் வந்தது. மூன்றாம் நூற்றாண்டில் மீண்டும் இப்பகுதி பாரசீகரின் (சசனிட்) கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது, முந்தியிருந்த மக்கள் அரேபியர்களினால் இடம்பெயர்க்கப்பட்டனர். இப்பகுதியின் அரபு மொழிப் பெயர் அல்-இராக் இக்காலப் பகுதியைச் சேர்ந்தது.[2] 7 ஆம் நூற்றாண்டில் சசனிட் பேரரசு இசுலாமியப் படையெடுப்புக்களால் அழிக்கப்பட்டது. சசானிட் பேரரசின் இடத்தில் ரசீதுன் கலீபகம் உருவானது. 9 ஆம் நூற்றாண்டில் அப்பாசிட் கலீபகக் காலத்தில் பாக்தாத் இசுலாமியப் பொற்காலத்தின் மையமாக உருவானது. புவேகிட், செல்யுக் படையெடுப்புக்களால், 10 ஆம் நூற்றாண்டில் பாக்தாத்தின் விரைவான வளர்ச்சியில் தேக்கம் ஏற்பட்டது. ஆனாலும், 1258 இன் மங்கோலியரின் படையெடுப்பு வரை பாக்தாத் முக்கிய மையமாகவே விளங்கியது. இதன் பின்னர் ஈராக் துருக்கிய-மங்கோலிய இல்கானகத்தின் ஒரு மாகாணமாக ஆனதுடன், அதன் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. இல்க்கானகம் சிதைவடைந்த பின்னர், 16 ஆம் நூற்றாண்டில் ஓட்டோமான் பேரரசுக்குள் கொண்டுவரப்படும் வரை சலைரிட்டுகள், காரா கொயுன்லுக்கள் போன்றோரினால் ஆளப்பட்டது. இடையிடையே ஈரானிய சஃபாவிட், மம்லுக் ஆட்சிகளுக்கும் இப்பகுதி உட்பட்டது.
முதலாம் உலகப் போருடன் ஓட்டோமான் பேரரசின் ஆட்சி முற்றுப்பெற்றது. 1933 இல் ஈராக் இராச்சியம் உருவாக்கப்படும் வரை பிரித்தானியப் பேரரசே ஈராக்கை நிர்வாகம் செய்துவந்தது. 1958 இல் ஒரு சதிப் புரட்சியைத் தொடர்ந்து ஒரு குடியரசு உருவாக்கப்பட்டது. சதான் உசேன் 1979 முதல் 2003 வரை ஈராக்கை ஆட்சி செய்தார். இக்காலத்திலேயே ஈரான்-ஈராக் போரும், வளைகுடாப் போரும் இடம்பெற்றன. 2003 இன் ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பின் முடிவில் சதாம் உசேன் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். 2011 இல் அமெரிக்க இராணுவம் ஈராக்கில் இருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், நிலைமை மோசமானது. 2015 அளவில் ஈராக் நடைமுறையில் பிரிந்த ஒஉர் நாடாகவே இருந்தது. நடுப் பகுதியும் தெற்குப் பகுதியும் அரசாங்கக் கட்டுப்பாட்டுக்குள் இருக்க, வட மேற்கில் குர்திசுத்தான் பிரதேச அரசும், மேற்குப் பகுதியில் ஈராக்குக்கும் லேவன்டுக்குமான இசுலாமிய அரசும் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளன.
வரலாற்றுக்கு முந்திய காலம்
தொகு1957 - 1961 காலப் பகுதியில், சானிதார் குகையில் கொலம்பியாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ரால்ஃப் சொலெக்கியும் அவரது குழுவினரும் ஆய்வு செய்தனர். அங்கே பல்வேறு வயதுகளையும், காப்பு நிலைமைகளையும், முழுமைத் தன்மைகளையும் கொண்ட 9 நியண்டர்தால் மனிதரின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை இற்றைக்கு 60,000 தொடக்கம் 80,000 ஆண்டுகளுக்கு முந்தியவை.
மேற்கோள்கள்
தொகு- ↑ Hart, Ron Duncan (2007), A Phoenix Rising, World Arts Press, p. 33, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9777514-1-9 Elsheshtawy, Yasser (2004), Planning Middle Eastern Cities, Routledge, p. 60, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-30400-9 "Baghdad's Treasure: Lost To The Ages". Time. 28 April 2003 இம் மூலத்தில் இருந்து 27 ஆகஸ்ட் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130827042402/http://www.time.com/time/magazine/article/0,9171,1004726,00.html. பார்த்த நாள்: 4 May 2010.
- ↑
Concise Encyclopedia Of World History. 2007. p. 33.
{{cite book}}
:|work=
ignored (help)