உடனொளிர்தல்

உடனொளிர்தல் (Fluorescence) என்பது இருளில் அல்லது மின்காந்த அலையதிர்வில் பல்வண்ண ஒளிகாலுகிற, காணாக்குற்றலை ஏற்றுக் காணும் நீளலையாக்கி வெளியிடும் பண்புடைய செயல் ஆகும்.[1] சில பொருள்களின் மீது ஒளியானது (முக்கியமாகப் புற வூதா ஒளி) விழுகின்றபோது அப்பொருள்கள் தாமே ஒளியை வெளியில் விடத் தொடங்குகின்றன. அப்படி வெளியிடப்படும் ஒளி சாதாரணமாக அந்த ஒளிக்குக் காரணமாகிய தூண்டும் ஒளியின் நிறமல்லாத வேறு நிறம் கொண்டிருக்கும். இந்த நிகழ்ச்சிக்கு உடனொளிர்தல் அல்லது பின்னொளிர்தல் என்று பெயர். தூண்டும் ஒளி நின்றவுடனே அந்தப் பொருள் வெளிப்படுத்தும் ஒளியும் நின்றுபோகுமானால் அது உடனொளிர்தலாகும். தூண்டும் ஒளி நீக்கப்பட்ட பிறகும் சிறிது காலத் திற்கோ அல்லது நீண்ட காலத்திற்கோ ஒளி வெளியாகுமானால் அது பின்னொளிர்(Phosphorescence)தல் ஆகும். 1833-ல் சர் டேவிட் புரூஸ்ட்டர் உடனொளிர்தலை முதன் முதலாக விளக்கமாக விவரித்தார்.

இக்கோட்பாட்டில் இயங்கும் அணு அலைமாலை அளவி
புறஊதாக் கதிர்களால் உடனொளிரும் கனிமங்கள்

எடுத்துக்காட்டாக, குயினைன் சல்பேற் கரைசல் (Quinine sulphate solution ), சிங் சல்பைட் (ZnS ), சிங் காட்மியம் சல்பைட் (ZnCdS ), பேரியம் ஈய சல்பேற்று (BaPb SO4 ) போன்ற வேதிப்பொருட்கள் தம்மில் விழும் ஒரு குறிப்பிட்ட அலைநீளமுள்ள ஒளியினை ஏற்று, வேறொரு அலைநீளமுள்ள ஒளிக்கதிர்களை வெளிவிடும் நிகழ்வு, உடனொளிர்தல் ஆகும்.கதிரியலில் இப்படிப்பட்ட பொருட்கள் வலுவூட்டும் திரைகளில் (Intensifying Screen) பயன்படுகின்றன. இதனால் நோயாளி பெறும் கதிர் ஏற்பளவு கணிசமாகக் குறைகிறது. பொலோனாக் கல்' (Bologna Stone)' என்பது பேரியத்தின் சல்பைடு தாதுவாகும். அதிலே பின்னொளிர் தல் உண்டாவதை 1602ஆம் ஆண்டில் முதலில் கண்டுபிடித்தார்கள். பாஸ்வரத்தைக் காற்றில் வைத்தால் அது ஆக்சிகரணமடைவதால் ஒளிவிடுகிறது. ஆனால் பின்னொளிர்தலில் அம்மாதிரியான ரசாயன வினையொன்றும் நிகழ்வதில்லை.

உயிரி ஒளி தொகு

 
டேவிட்டு புரூசுடர், பச்சைய ஒளிர்வு

கடலில் வாழும் சில உயிர்கள் வெளிவிடும் ஒளியால் அலைகள் கரையிலே பலமாக மோதும்போது உண்டாகும். நுரையிலும் திவலைகளிலும் இரவு நேரங்களில் ஒருவகை ஒளி அழகாகத் தோன்றுகின்றது. அதுவும் பின்னொளிர் தலும் ஒன்றல்ல. இறந்துபோன சில மீன்களும். ஈரமான மரங்கள் முதலியவைகளும் வெளிவிடும் ஒளிக்கு ஒருவகையான ஒளிபொருந்திய பாக்டீரியா காரணமாகும். மின்மினிப் புழுவும் மின்மினிப் பூச்சியும் ஒளிவிடுகின்றன. தென் அமெரிக்காவில் அருமையாக ஒருவகை மின்மினிப்புழு காணப்படுகிறது. அதன் தலையில் சிவப்பு ஒளியும் பக்கங்களில் பச்சை ஒளியும் தோன்றுகின்றன. அதனால் அதை 'ரெயில் பாதைப் புழு' என்றும் கூறுவார்கள். இந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் பொதுப்படையாக உயிரி ஒளி என்று பெயர். இந்த நிகழ்ச்சியைப் பற்றி இன்னும் முழுவிளக்கம் தெரியவில்லை. ஆனால் உயிரிகளில் ஏற்படும் ஏதோ ஒருவகை உயிர்-வேதியியல் மாறுதல்களால் இது ஏற்படுகிறதென்று பொதுவாகக் கருதுகிறார்கள், உடனொளிர்தல் அல்லது பின்னொளிர்தலாகிய பௌதிக நிகழ்ச்சியில் எவ்வகையான மாறுபாடும் பொருளில் ஏற்படுவதில்லை.

பின்னொளிர் வின் தன்மையைக் கொண்டு உடனொளிர்தலுக்கும் பின்னொளிர்தலுக்கும் வேறுபாடு காண்பது இப்பொழுது சரியன்று என்று தெரிவதால், இக்காலத்தில் பின்னொளிர்தல் என்ற சொல்லானது பின்னொளிரிகள் (Phosphors) என்று கூறப்படும் சில படிகப் பொருள்களுக்கு மட்டும் வழங்குகின்றது. இந்தப் பொருள்களில் உலோக அசுத்தங்கள் சிற்றளவில் இருக்கின்றன. அவை அப்பொருள்களின் சட்டக அமைப்பை (Lattice structure) மாறுபடச்செய்து, அவற்றைப் பின்னொளிரும் பொருள்களாகச் செய்கின்றன.

வெப்பம் அல்லது அகச்சிவப்புக் கதிர்வீச்சு உடனொளிர்தலையும், பின்னொளிர்தலையும் அழித்துவிடுகிறது. பல பொருள்கள் நன்கு உடனொளிர்வனவாக இருக்கின்றன. கொயினாக்கரைசலின் மேற்பரப்பு மிகுந்த உடனொளிர்வுள்ளதாக இருக்கிறது. பச்சையம் (Chlorophyll) நல்ல சிவப்பு ஒளிவிடுகின்றது.

உயிரிலி ஒளி தொகு

 
உடனொளிரும் விளக்கு

யுரேனியம் கூட்டுக்களில் பல நன்கு உடனொளிர்வனவாக இருக்கின்றன. ஆனால் இயற்கைத் தாதுப்பொருள் களும், இரத்தினக் கற்களுமே அழகான உட னொளிர்தலுள்ளவை. ஒரு பொருள் நன்றாக உடனொளிர்தலுள்ளதாக இருக்க வேண்டுமானால் அதில் சிறிய அளவில் அசுத்தம் படர்ந்திருக்கவேண்டுமென்று கண்டிருக்கிறார்கள். டாக்டர் சி. வி. இராமன் தமது பெங்களூர் ஆராய்ச்சி நிலையத்தில் சேர்த்துவைத்துள்ள உடனொளிரும் இரத்தினங்களும் மற்றத் தாதுப் பொருள்களும் மிகப் புகழ் வாய்ந்தவை. உடனொளிர்தலில் உள்ள வேறுபாடுகளைக் கொண்டு உணவுப்பொருள்கள், மருந்துகள், இரசாயனப்பொருட்கள் முதலியவற்றிலுள்ள கலப்படத்தைக் கண்டு பிடித்து விடலாம். ஆடையில் பருத்தி நூலுக்கும் பட்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறியலாம். ஓர் ஓவியம் முதலில் தீட்டியதேதானா அல்லது போலிப்பிரதியா என்பதையும் கண்டுபிடிக்கலாம். இருட்டிலே எளிதில் காண்பதற்காகப் பல பொருள்களில் ஒளிரும் வர்ணத்தைப் பூசுவதுண்டு. உடனொளிரும் குழாய் விளக்குக்கள் (Fluorescent tube lights) இக்காலத்தில் பெருகி வருகின்றன. அவைகளில் உள்ள பாதரச ஆவியின் மூலமாக மின்சாரம் பாய்வதால் அங்குப் புறஊதாக் கதிர்கள் உண்டாகின்றன. அக்கதிர்கள் குழாய்களின் உட்புறத்தில் தடவப்பட்டுள்ள சில குறிப்பிட்ட ஒளிரிகளில் பட்டு அவற்றை ஒளிவிடச் செய்கின்றன. எக்ஸ்கதிர் உடனொளிர் மானியில் உடனொளிர் திரைகளைப் பயன்படுத்தி, உடம்பின் உட்பாகத்தில் உள்ள உறுப்புக்களைக் கண்டு ஆராய்கிறார்கள்.

மேற்கோள்கள் தொகு

ஆதாரங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உடனொளிர்தல்&oldid=2866562" இலிருந்து மீள்விக்கப்பட்டது