இருள் (dark) அல்லது இருள்மை (darkness) எனப்படுவது ஒளிர்வு (bright) அல்லது ஒளிர்மை (brightness) கொண்ட நிலைக்கு முரண்பாடான எதிர்ப்பதமாகவும், கண்ணுக்குப் புலப்படக்கூடிய ஒளி அற்ற நிலையாகவும் இருக்கின்றது. நிறவெளியில் இது கறுப்பு நிறத்தைக் காட்டுகிறது. ஒளியற்ற சூழலில் கண்ணிலுள்ள உயிரணுக்கள் தூண்டப்படுவதில்லை. அதனால் ஒளிவாங்கும் உயிரணுக்களால் பொருட்களிலிருந்து பெறப்படும் அலைநீளம், அதிர்வெண் போன்றவற்றை வேறுபடுத்தி அறிய முடியாது போகின்றது. இதனால் நிறமற்ற தன்மை அல்லது கறுப்பு நிறம் தோன்றுகிறது[1].

செடியொன்றின் ஒரு பகுதியில் ஒளி பட்டுத் தெறிப்பதையும், அப்படி தெறிக்காதவிடத்தில் இருள் இருப்பதையும் காணலாம்

இருள் என்பது அறிவியல்துறையில் நேரடியான பொருளையும், கவிதை, ஓவியக் கலை போன்ற கலாச்சாரம் தொடர்பான விடயங்களில் தமக்கேயுரிய பொருட்களையும் காட்டி நிற்கும்.

அறிவியல்

தொகு
 
ஒளியியற்கண்மாயம் கட்டம் Aயும், கட்டம் Bயும் உண்மையில் ஒரே நிறத்தைக் கொண்டவையாக இருப்பினும், அவற்றின்மேல் பட்டுத் தெறிக்கும் ஒளிக்கதிர்களின் வேறுபட்ட அளவினால், நமது கண்களுக்கு வேறுபட்ட நிறத்தோற்றத்தைக் காட்டுகின்றன. இது ஒளியியற்கண்மாயம் அல்லது கட்புலன் திரிபுக்காட்சி எனப்படும்.

இருண்ட பொருட்கள் ஒளியன்களை (Photons) தமக்குள் உறிஞ்சிக் கொள்வதனால், ஏனைய பொருட்களைவிட தெளிவற்றவையாக அல்லது மங்கியவையாகத் தோற்றமளிக்கும். உதாரணமாக கறுப்புப் பொருள் ஒன்று ஒளிக்கதிர்களிலுள்ள ஒளியன்களை தெறிக்கச் செய்யாமல் தமக்குள் உறிஞ்சி விடுவதனால், இருண்டவையாகத் தோன்றும் அதேவேளையில், வெள்ளை நிறப் பொருளானது, கண்ணுக்குப் புலப்படக் கூடிய ஒளிக்கதிர்களை தெறிக்கச் செய்வதனால் ஒளிர்மை நிறைந்ததாகத் தோற்றமளிக்கும்[2].
இருப்பினும் ஒளியானது ஒரு குறிப்பிட்ட எல்லக்குட்பட்டே உறிஞ்சப்பட முடியும். ஒளி போன்ற ஆற்றல்கள் உருவாக்கப்படவோ, அழிக்கப்படவோ முடியாதவை. ஓர் ஆற்றலை இன்னோர் ஆற்றலாக மாற்றப்படவே முடியும். அனேகமாக பொருட்களால் உறிஞ்சப்படும் கண்ணுக்குப் புலனாகும் ஒளியானது, மீண்டும் பொருட்களில் இருந்து அகச்சிவப்புக் கதிர்களாக வெளியேற்றப்படும்[3]. எனவே எந்த ஒரு பொருளும் இருண்டதாகத் தோற்றம் கொடுப்பினும், மனிதக் கண்களுக்குத் தெரிய முடியாத குறிப்பிட்ட ஒளிர்மை நிலையைக் கொண்டதாகவே இருக்கும். இதனால் இருள் என்பது ஒரு சார்பான நிலை மட்டுமே என அறியலாம்.
இருண்ட இடங்களில் ஒளிப்பற்றாக்குறை இருப்பதனால் பொருட்கள் கண்களுக்குத் தெளிவாகத் தெரிவதில்லை. ஒளிக்கும், இருளுக்கும் மாற்றி மாற்றி வெளிப்படுத்தப் படுவதனால், இருளுக்கான பல இசைவாக்க கூர்ப்பு இயல்புகள் தோன்றின. மனிதன் போன்ற முதுகெலும்பிகள் இருண்ட பகுதியினுள் செல்கையில், அவற்றின் விழித்திரைப் படலம் விரிவடைந்து, அதிகளவு ஒளிக்கதிர்களை உட்செல்ல அனுமதித்து இரவுப் பார்வைக்குத் தயாராக்கும்.

கலாச்சாரம்

தொகு

அனேகமான கலாச்சாரங்களில் இருண்ட ஆடைகள் அணிவது துக்கத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. சமயம் தொடர்பான கருத்துக்களிலும் இருளானது தீவினையைக் குறிக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கவிதை

தொகு

இருளானது கவிதைத்துவமாக சொல்லப்படும்போது நிழல், தீவினை, மன அழுத்தம் என்பவற்றைக் குறிக்கும். இலக்கியங்களில் இருள் என்ற சொல் ஓர் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வில்லியம் சேக்சுபியர் சாத்தான் என்னும் ஒரு கதாபாத்திரத்துக்கு 'இருளின் இளவரசன்' எனப் பெயரிடுகிறார்[4].

ஓவியம்

தொகு

ஒளியை தீர்க்கமாகக் காட்டுவதற்காகவும், ஒளியுடன் முரண்பட்டு தெரிவதற்காகவும் ஓவியத்தில் இருண்ட பகுதிகள் பயன்படுத்தப்படுகின்றன. நிறங்கள் கலக்கப்பட்டு கறுப்பு நிறம் பெறப்படும்.

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.newworldencyclopedia.org/entry/Cone_cell http://www.newworldencyclopedia.org/entry/Rod_cell
  2. Mantese, Lucymarie (March 2000). Photon-Driven Localization: How Materials Really Absorb Light. American Physical Society. http://adsabs.harvard.edu/abs/2000APS..MAR.E2001M. பார்த்த நாள்: 2007-01-21. 
  3. Dr. Denise Smith (powerpoint). Exploring the Electromagnetic Spectrum: The Herschel Experiment. Space Telescope Science Institute இம் மூலத்தில் இருந்து 2007-02-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070206175002/http://www.tufts.edu/as/wright_center/work_con_lec/astro_wkshp_res/boston_herschel.ppt. பார்த்த நாள்: 2007-01-21. 
  4. Shakespeare, William. "The Complete Works". The Tech, MIT. Archived from the original on 2012-09-05. பார்க்கப்பட்ட நாள் 2010-11-02.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருள்&oldid=3995817" இலிருந்து மீள்விக்கப்பட்டது