ஓவியக்கலை என்பது, வரைதல், கூட்டமைத்தல் (composition) மற்றும் பிற அழகியல் சார்ந்த செயற்பாடுகளையும் உள்ளடக்கி, கடதாசி, துணி, மரம், கண்ணாடி, காங்கிறீட்டு போன்ற ஊடகங்களில், நிறப்பூச்சுகளைப் பயன்படுத்தி, வரைபவரின் வெளிப்பாட்டு மற்றும் கருத்தியல் நோக்கங்களை வெளிக்கொணரும் ஒரு கலை ஆகும்.

மோனா லிசா ஓவியம் இத்தாலிய ஓவியர் லியொனார்டோ டா வின்சியால் வரையப்பட்ட உலகப்புகழ் பெற்ற கலைநயமிக்க ஓவியங்களில் ஒன்றாகும்.

ஓவியக்கலை, பல்வேறு ஆக்கத்திறன்களை, உள்வாங்குவதற்கும், ஆவணப்படுத்துவதற்கும், வெளிப்படுத்துவதற்குமான ஒரு வழிமுறை ஆகும். ஓவியங்கள், இயற்கையானவையாகவோ, ஒரு பொருளைப்போல வரையப்பட்டவையாகவோ, நிழற்படத்தை ஒத்தவையாகவோ, பண்பியல் (abstract) தன்மை கொண்டனவாகவோ இருக்கலாம். அத்துடன் இவை ஒரு செய்தியை விளக்கும் உள்ளடக்கம் கொண்டவையாக, குறியீட்டுத் தன்மை கொண்டனவாக, உணர்ச்சி பூர்வமானவையாக அல்லது அரசியல் சார்ந்தவையாகக்கூட இருக்கக்கூடும். ஓவிய வரலாற்றின் பெரும்பகுதியில் ஆன்மீகம் சார்ந்த எண்ணக்கருக்களும், அழகூட்டல்களும் முதன்மை பெறுகின்றன. இத்தகைய ஓவியங்கள் மட்பாண்டங்களில் வரையப்பட்ட புராணக் கதைக் காட்சிகளிலிருந்து, வழிபாட்டுக்குரிய கட்டிடங்களில், சுவர்களையும், மேல் விதானங்களையும் அழகூட்டும் சமயம் சார்ந்த, பெரிய ஓவியங்கள் வரை வேறுபடுகின்றன.

மேல்நோக்கு

தொகு

வெளியில் இருக்கும் ஒவ்வொரு புள்ளியும் வெவ்வேறு ஒளிச் செறிவைக் கொண்டுள்ளது. இந்த ஒளிச் செறிவு வேறுபாடுகளை ஓர் ஊடகத்தில் கொண்டுவருவதன் மூலமே ஓவியம் வரையப்படுகிறது. இந்த ஒளிச்செறிவுகளைக் கறுப்பு, வெள்ளை ஆகிய நிறங்களாலும் அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட பலவிதமான சாம்பல் நிறச் சாயைகளாலும் காட்டலாம். நடைமுறையில், பல்வேறு ஒளிச் செறிவுகளைக் கொண்ட மேற்பரப்புக்களை உரிய இடங்களில் ஆக்குவதன் மூலம் ஓவியர்களால் வடிவங்களை உருவாக்க முடியும்; ஒரே செறிவுகளைக் கொண்ட நிறங்களை மட்டும் பயன்படுத்துவதன் மூலம் குறியீட்டு வடிவங்களையே காட்ட முடியும். ஆகவே, ஓவியத்தின் அடிப்படை வழிமுறை, வடிவவியல் உருவங்கள், குறியீடுகள் போன்ற கருத்தியல் வழிமுறைகளில் இருந்தும் வேறுபட்டது ஆகும். எடுத்துக்காட்டாக, ஓர் ஓவியர், ஒரு வெண்ணிறச் சுவரை ஒவ்வொரு புள்ளியிலும் வெவ்வேறான ஒளிச் செறிவுகளைக் கொண்ட ஒன்றாகப் பார்க்கிறார். இது அயலிலுள்ள பொருள்களினால் ஏற்படும் நிழல்கள், தெறிப்பு ஒளி என்பனவற்றால் ஏற்படுகிறது. ஆனால் கருத்தியல் அடிப்படையில் இருட்டிலும் கூட வெண்ணிறச் சுவர், வெண்ணிறச் சுவரே. தொழில்நுட்ப வரைதலில் காணும் கோடு ஒன்றின் தடிப்பும் கருத்தியல் அடிப்படையிலானதே. இது ஒரு பொருளின் கருத்தியல் வெளி விளிம்புகளைக் குறிக்கிறது. இது ஓவியர்கள் பயன்படுத்தும் புலன் காட்சிச் சட்டகத்திலும் (perceptual frame) வேறானதொரு சட்டகத்தில் அமைந்தது ஆகும்.

இசைக்குச் சுருதியும் தாளமும் போல, நிறமும், நிறத்தொனியும் ஓவியத்துக்கு அடிப்படை ஆகும். நிறம் மிகுந்த தற்சார்பு (subjective) கொண்டது. பண்பாட்டுக்குப் பண்பாடு வேறுபட்டாலும் கூட, இவை கவனிக்கத்தக்க உளவியல் தாக்கங்களை ஏற்படுத்த வல்லவை. சில பண்பாடுகளில் கறுப்பு துக்கத்துக்கு உரியது. வேறு சில பண்பாடுகளில் வெள்ளை நிறமே துக்கத்தைக் குறிக்கிறது.

ஓவிய ஊடகங்கள்

தொகு

பல்வேறு வகையான வண்ணப்பூச்சுகள் ஓவியம் வரைவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக வண்ணப்பூச்சுகளை தேர்ந்தெடுப்பதற்கு அதன் பாகுத்தன்மை, கரைதிறன், வண்ணப்பூச்சின் இயல்புகள் போன்றவற்றுடன் உலரும் நேரம் ஆகிய கூறுகள் கணக்கிடப்படுகின்றன.

எண்ணெய் ஓவியம்

தொகு
 
Honoré Daumier (1808–79), ஓவியர் சட்டத்தில் இருக்கும் எண்ணெயில் தூரிகையினால் ஏற்படும் பார்வைக்குத் தெரியும் வரிகள் உள்ளன

எண்ணெய் ஓவியம் என்பது நிறமிகளைக் கொண்டு தீட்டிப் பின் ஒருவகை நெய் அல்லது எண்ணெய் கொண்டு காயவைக்கும் ஒரு வகை ஓவியமாகும். ஆளிவிதை எண்ணெய் பொதுவாகப் பயன்படுத்தப்படும் எண்ணெய் ஆகும். இந்த எண்ணெய் ஆரம்பகால நவீன ஐரோப்பாவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. கசகசா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவை பொதுவாக இவ்வகை ஓவியங்களுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் ஆகும். இவ்வகை எண்ணெய்களை தேவதாரு (pine) மரத்தின் பிசின்கள் (resins) அல்லது அதிலிருந்து பெறப்படும் சாம்பிராணி (frankincense) குங்கிலியம் போன்றவற்றைச் சேர்த்து கொதிக்க வைத்து நெய்வனங்கள் (varnishes) தயாரிக்கப்படுகின்றன. அவை ஓவியத்திற்கு மெருகூட்டவும் பளபளப்பாக்கவும் பயன்படும் பொருளாகும். பயன்படுத்தப்படும் எண்ணெயை பொறுத்துக் காயும் நேரம், பழுப்படையும் தன்மை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும். வெவ்வேறு வித விளைவுகளை ஏற்படுத்தவும், வெவ்வேறு நிறமிகளைப் பயன்படுத்தவும், ஒன்றிற்கும் மேற்பட்ட எண்ணெய்களை ஒரே ஓவியத்தில் ஓவியர்கள் பயன்படுத்துவதும் உண்டு.

முதன்முதலில் எண்ணெய் ஓவியம் புத்தமத ஓவியங்களைத் தீட்ட, இந்திய ஓவியர்களாலும் சீனத்து ஓவியர்களாலும் மேற்கு ஆப்கானிசுத்தான் பகுதியில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கும் பத்தாம் நூற்றாண்டுக்கும் இடையில் பயன்படுத்தப் பட்டிருக்கலாம்.[1]. ஆனால் பதினைந்தாம் நூற்றாண்டு காலப் பகுதி வரை எண்ணெய் ஓவியங்கள் பெரிதும் புகழ் பெறவில்லை.

அதன் பிறகு முக்கியத்துவம் உணரப்பட்டது

வண்ணக்கோல்

தொகு
 
வண்ணக்கோல்

வண்ணக்கோல் என்பது வண்ண நிறமித் தூள்கள் மற்றும் ஒட்டும் பொருளாலான குச்சி வடிவிலான ஓவிய ஊடகமாகும். எண்ணெய் வண்ணப்பூச்சுகள் உட்பட அனைத்து நிற கலை ஊடகங்களின் பூச்சுகளைப் போலவே ஓவியங்களில் பயன்படுத்தப்படும் நிறங்களை சமப்படுத்தவும், மங்கலான குறைந்த செறிவு பகுதிகளை காட்டவும் இவை பயன்படுத்தப்படுகின்றன.வண்ணக்கோல் பூச்சுகளின் விளைவு வேறு எந்தவொரு ஓவிய செயல்முறையையும் விட இயற்கையான உலர்ந்த நிறமிகளுடன் நெருக்கமாக ஒத்து இருக்கிறது[2].

செயற்கை வண்ணக் கூழ்மங்கள்

தொகு
 
Ray Burggraf என்பவரால், 1998 இல், மரத்தில் செய்யப்பட்ட காட்டு வளைவு (Jungle Arc) என அழைக்கப்பட்ட வண்ணக்கூழ்ம ஓவியம்

செயற்கை வண்ணக் கூழ்மமானது விரைவாக உலரக்கூடிய வண்ண நிறமிகளைக் கொண்ட கூழ்ம வடிவிலான வண்ணமாகும். தண்ணீர் கொண்டு நீர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது ஆனால் காய்ந்த பின் எவ்வளவு தண்ணீர் , இந்தச் செயற்கை வண்ணக் கூழ்மத்துடன் அல்லது பசையுடன் சேர்க்கப்பட்டதோ அதைப்பொருத்து தண்ணீர் உட்புகா வண்ணம் நீர்த்தடைப் (water-resistant) பண்பைப் பெற்றுவிடுகிறது. முடிக்கப்பட்ட அக்ரலிக் ஓவியம் ஒரு நீர்வண்ணம் அல்லது எண்ணெய் ஓவியத்தைப் போல மற்ற ஊடகங்களைப் போலவோ அல்லது அதன் சொந்த தனித்துவமான சிறப்பியல்புகளுடன் கூடியதாகவோ இருக்கலாம்.எண்ணெய் ஓவியத்திற்கும் செயற்கை கூழ்ம ஓவியத்திற்கும் உள்ள நடைமுறை வேறுபாடு அதன் உலருதல் செயல்முறைக்கு எடுத்துக்கொள்ளும் கால அளவாகும்.

 
J.M.W.Turner என்பவரால், 1802 இல், நீர்வண்ணம் கொண்டு தீட்டப்பட்ட, இயற்கை நிலப்படம் ஒன்றைக் காட்டும் வண்ண ஓவியம் - நீர்வர்ண ஓவியம்

நீர்வர்ணம்

தொகு

நீர் வர்ணம் என்பது நீரைக் கரைப்பானாகக் பயன்படுத்தி வண்ணம் தீட்டப்படும் ஒருவகை வண்ண நிறமிகளடங்கிய ஊடகமாகும். மிகவும் பாரம்பரியமாக நீர் வர்ண ஓவியங்கள் காகிதங்களில் தீட்டப்படுகின்றன.அதுமட்டுமல்லாமல் ஓலை, மரப்பட்டை காதிதங்கள், தோல்கள், செயற்கைத் துணிகள் போன்ற பொருட்களும் நீர் வர்ண ஓவியம் வரையப் பயன்படுத்தப்படுகின்றன.கிழக்காசியாவில் நீர் வண்ண ஓவியங்களைத் தூரிகை ஓவியங்கள் அல்லது உருட்டோவியங்கள் என்றும் கூறுகின்றனர். சீன, கொரிய மற்றும் சப்பான் நாடுகளில் கருப்பு மற்றும் பழுப்பு நிற நீர் வண்ண ஓவியங்கள் மிகப்பெரும் செல்வாக்கோடு இன்றும் திகழ்கின்றன. இந்தியா, எத்தியோப்பியா நாடுகளிலும் இவ்வகை ஓவியங்கள் பாரம்பரியமாகக் வரையப்பட்டு வருகின்றன.

சுதை ஓவியம்

தொகு
 
சிகிரியா சுவரோவியங்கள் - சுதை ஓவியம்
 
19 ஆம் நூற்றாண்டில் தீட்டப்பட்ட நடனமாடும் பெண்களின் ஓவியம்[3] - சுதை ஓவியம்

ஒரு வகைச் சுண்ணாம்பினால் தீட்டப்படும் ஓவியம் சுதை ஓவியம் எனப்படுகிறது. இவ்வகை ஓவியங்கள் சுவர்கள், உட்கூரைகள் போன்ற நிரந்தரமான கட்டமைப்புக்கள் மீது தீட்டப்படுகிறது. இலங்கையில் தம்புள்ள என்னும் இடத்தில் உள்ள சிகிரியா குன்றில் மேலேறும் வழிகளில் உள்ள பாறைச் சுவர்களில் இவ்வகை ஓவியங்கள் உள்ளன.[4] அதேபோல் இந்தியாவில் உள்ள அஜந்தா குகைகளும் இவ்வகையான ஓவியங்களைக் கொண்டுள்ளன.[5]

மை ஓவியங்கள் (Ink Painting)

தொகு
 
Sesshū Tōyō வால் 1486 இல் உருவாக்கப்பட்ட, நான்கு பருவ காலங்களையும் காட்டக்கூடிய மை ஓவியம்

சில நிறமிகள் (en:pigment) மற்றும் சாயங்கள் போன்றவற்றாலான திரவம் கொண்டு ஒரு படிமம், எழுத்துவடிவம், வடிவமைப்பு என்பவற்றைத் தீட்டலே மை ஓவியம் எனப்படுகிறது. இவை எழுதுகோல், தூரிகை, இறகு எழுதுகோல் போன்றவை கொண்டு செய்யப்படலாம். மையானது நிறமி, சாயம், பிசின், உராய்வுநீக்கி (Lubricant), இரு திரவ/திரவ அல்லது திண்ம/திரவ பதார்த்தங்களுக்கிடையில் மேற்பரப்பு இழுவிசையைக் குறைக்கும் பரப்பியங்கி (en:Surfactant), உடனொளிர்தல் போன்ற பல்வேறு வகைப் பதார்த்தங்களைக் கொண்ட சிக்கலான கரைப்பானைக் கொண்டிருக்கும். இவை மையின் காவியாகத் தொழிற்படுவதுடன், மைக்குரிய அளவான பதம், நிறம், அசைவுத்தன்மை, தடிமன், மற்றும் உலர்கையில் அதற்குரிய சரியான தோற்றம் என்பவற்றைக் கொடுக்க உதவும்.

பூச்சு ஓவியங்கள் (Enamel painting)

தொகு

நீரில் கரையும் எண்ணெய் ஓவியங்கள் (Water miscible oil painting)

தொகு

சூடான மெழுகு ஓவியங்கள்(Hot wax painting)

தொகு
 
Martina Loos என்பவரால் 2009 இல் செய்யப்பட்ட சூடான மெழுகு ஓவியம்

நிறமிகள் கலக்கப்பட்ட சூடாக்கப்பட்ட தேனீ மெழுகு பயன்படுத்தப்படும். ஒரு பசைபோலத் தயாரிக்கப்பட்டு, மரம், கன்வஸ் துணி போன்ற பொருட்களில் ஓவியம் தீட்டப்படும். தேனீ மெழுகு தவிர்ந்த வேறுசில பிசின் அல்லது மெழுகு போன்ற பதார்த்தங்களும் பயன்படுத்தப்படும். ஆளி (செடி) விதையிலிருந்து பெறப்படும் எண்ணெய் போன்ற பதார்த்தமும் இங்கு பயன்படுத்தப்படும். விசேட தூரிகைகள், உலோகக் கருவிகள் இங்கு ஓவியத்தைச் சரியாக்கப் பயன்படுத்தப்படும்.

ஓவிய வகைகள்

தொகு

உடல் ஓவியம்:

தொகு
 
வண்ணத்துப்பூச்சி ஓவியத்தினை மார்பில் வரைந்திருக்கும் இளம்பெண்மணி - உடல் ஓவியம்

உடலில் வர்ணங்களை பூசி ஓவியமாக வரைவது உடல் ஓவியமாகும். இந்த வகையான ஓவியங்கள் பெரும்பாலும் தற்காலிகமானவைகளாக வரையப்பெறுகின்றன. விழாக்கள், நிகழ்வுகளுக்காக வரையப்பெறும் உடல் ஓவியங்கள், அந்நிகழ்வு முடிந்ததும் அழிக்கப்பட்டுவிடுகின்றன. முகத்தில் வர்ணங்களால் வரைந்து கொள்பவை, முக ஓவியமாகும்.

இந்த வகையான உடல் ஓவியங்கள், தற்காலிமான பச்சைக்குத்துதலுடனும், மருதாணியைப் பயன்படுத்துவதுடனும் ஒப்பிடப்படுகின்றன.

கேலிச் சித்திரம்:

தொகு

கேலிச் சித்திரங்கள் என்பவை, அரசியல் நிகழ்வு, சமயம், சமூகம் போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த கருத்துகளை நகைச்சுவையாக விளக்கும் ஓவியங்களாகும். இவை பெரும்பாலும் எளிய கோட்டோவியமாக வரையப்பெறுகின்றன. கருத்துப் படங்களைப் போன்ற தீர்க்கமான கருத்துகளை விளக்கியும் இவ்வாறான கேலிச் சித்திரங்கள் வரையப்பெறுகின்றன.

காபி ஓவியம்:

தொகு

காபி பொடியைக் கொண்டு வரையப்படும் நவீன ஓவிய வகையைச் சார்ந்த ஓவியமாகும். இந்த ஓவியங்கள் காபி பொடியை தண்ணீர்கள் கலந்து வரையப்படுகின்றன. இவ்வாறு வரைந்த ஓவியங்களில் மீது வார்னிஸ் அடித்து பாதுகாகப்படுகின்றன.

துணி ஓவியம்:

தொகு

அனைத்துவகையான துணிகளைக் கொண்டு துணி ஓவியம் வரையப்பெறுகிறது. இவ்வகை ஓவியத்தில் ஜெய்ப்பூர் கற்கள், ஜரிகை நூல்கள் போன்றவையும் இணைத்து அழகு சேர்க்கப்படுகிறது.

கண்ணாடி ஓவியம்:

தொகு

கண்ணாடியில் வரைவதற்கேற்ற எழுதுபொருளினால் ஓவியத்தின் கோட்டோவியத்தினை வரைந்தபிறகு வண்ணம் சேர்த்து தயாரிக்கப்படுகின்ற ஓவியமாகும். தற்போது, முப்பரிமாண ஓவியங்களும் மூன்று கண்ணாடிகளைக் கொண்டு அமைக்கப்பெறுகின்றன. இவ்வகையான முப்பரிமாண ஓவியங்களில் தொலைவிலுள்ள பொருள்கள் முன்புற கண்ணாடியிலும், நடுவில் உள்ள பொருள்கள் நடுக்கண்ணாடியிலும், மீதக் காட்சிகள் முதல் கண்ணாடியிலும் வரையப்படுகின்றன.

குகை ஓவியம்:

தொகு
 
ஒரு வேடுவன் அல்லது போர்வீரன்.

சுண்ணாம்பு, மரப்பிசின் மற்றும் மூலிகைகள் கொண்டு குகைகளிலுள்ள பாறைகளில் வரையப்படும் ஓவியங்கள் குகை ஓவியமாகும். இந்த வகையான ஓவியங்கள் பழங்கால மக்களின் வாழ்வியல் முறைகளை அறிய பயன்படுகின்றன.[6]

மேலுள்ள வகைகள் மட்டுமின்றி, நீர் வண்ண ஓவியம், பேஸ்டல் ஓவியம், தைல வண்ண ஓவியம் என பலவகையான ஓவிய முறைகள் உள்ளன.

சமயங்களில் ஓவியம்

தொகு

இந்து ஓவியம்

தொகு

சங்க காலத்தில் இறந்த போர் வீரனுக்காக நடுகல்லில் சித்திரம் தீட்டும் மரபு காணப்பட்டது. விஷ்ணு தர்மோத்திரம், தக்கண சித்திரம், சித்திரலட்சணம் முதலான இந்து சமய நூல்களில் ஓவியங்களைப் பற்றி குறிப்புகள் உள்ளன. இந்துக் கோவில்களில் பச்சிலைகளைக் கொண்டு ஓவியம் தீட்டும் வழக்கம் இருந்துள்ளது. சித்தன்னவாசல், தஞ்சைப் பெரிய கோவில் ஆகிய இடங்களில் இந்தவகையான ஓவியங்கள் இன்றும் காணக்கிடைக்கின்றன.

இந்துக் கோவில்கள் சிலவற்றில் சித்திரக்கூடம் அமைக்கப்பெற்றுள்ளன. இவைகளில் ஓவியங்கள் மிகவும் நேர்த்தியாக வரையப்பெறுகின்றன. இத்துடன் பல கோவில்களின் மேற்பரப்பில் இறைவனின் மேன்மையைப் போற்றும் ஓவியங்களும், தலவரலாறுகள் வரையப்பெறுகின்றன.

தமிழர் ஓவியக்கலை

தொகு

ஒவ்வு என்னும் வினையடியாகப் பிறந்த ஓவு, ஓவம், ஓவியம் என்னும் இம்மூன்று சொற்களும் சித்திரத்தையே குறிக்கின்றன. 'ஓவியனுள்ளத் துள்ளியது வியப்போன்' எனக்கூறும் மணிமேகலைச் செய்யுள் வரியிலிருந்து தமிழக ஓவியர்கள் புறக்கண் கண்டதை அகக்கண் கொண்டு நோக்கி, அதை அகத்தினின் தீட்டி பின்னர் பிற ஊடகங்களில் வரைந்தனர் என்பது புலனாகிறது.

நிறம் தீட்டாமல் வரையும் ஓவியத்துக்கு புனையா ஓவியம் (Outline drawing) என்று பெயர். 'புனையா ஓவியம் கடுப்ப' என நெடுநல்வாடை குறிப்பிடுகிறது. ஓவியத் தொழிலுக்கு 'வட்டிகைச் செய்தி' என்னும் பெயரும் உண்டு. வட்டிகை என்றால் துகிலிகை (brush).

தமிழ்நாட்டில் ஓவியங்களாக இன்று காண்பவற்றுள் மிகப் பழைமைமிக்கவை பல்லவர் காலத்து ஓவியங்களே.

ஓவியம் பற்றிய செய்யுள் செய்திகள்

தொகு
'ஓவியர் தம் பாவையினோ டொப்பரிய நங்கை' - சிந்தாமணி
'ஓவியப் பாவை யொப்பாள்' - சிந்தாமணி
'ஓவியத்து எழுத ஒண்ணா, உருவத்தாய்' - கம்பராமாயணம்
'கூட்டினான் மணிபல தெளித்துக் கொண்டவன் தீட்டினான் கிழிமிசைத் திலகவள் நுதல்' - சிந்தாமணி
'ஓவுறழ் நெடுஞ்சுவர்' - பதிற்றுப்பத்து
'ஓவியத்துறை கைபோய ஒருவனை' - நைடதம்
'ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன்' - மணிமேகலை

இவற்றையும் பார்க்கவும்

தொகு

ஆதாரம்

தொகு
  1. Barry, Carolyn. "Earliest Oil Paintings Found in Famed Afghan Caves". National Geographic Society. பார்க்கப்பட்ட நாள் 7 January 2013.
  2. Mayer, Ralph. The Artist's Handbook of Materials and Techniques. Viking Adult; 5th revised and updated edition, 1991. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-670-83701-6
  3. Detail from this painting in the V&A
  4. "Sigiriya". பார்க்கப்பட்ட நாள் 10 சூன் 2017.
  5. "The Caves of Ajanta". Khan Academy. பார்க்கப்பட்ட நாள் 10 சூன் 2017.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-06-02. பார்க்கப்பட்ட நாள் 2013-06-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓவியக்_கலை&oldid=3816396" இலிருந்து மீள்விக்கப்பட்டது