மட்பாண்டம்

களிமண்ணிலிருந்து பொருட்களை உருவாக்கும் கைவினை

மட்பாண்டம் என்பது களிமண் வகைகளை கொண்டு மனிதர்கள் தங்கள் தேவைகளுக்கு பயன் படுத்தும் பொருட்களின் வகை ஆகும்

இந்தியாவின் பெங்களூரில் வேலைசெய்யும் குயவர் ஒருவர்
சூளையிலிட்டுச் சுடப்படாத மட்பாண்டங்கள் உலர்வதற்காக வைக்கப்பட்டுள்ளன.
பானை செய்தல்
preparation of pots in srikakulam town
மட்பாண்டம்

மட்பாண்டம் என்பது பொதுவாக மண்ணால் செய்யப்படும் பொருட்களைக் குறிக்கும். மிகப் பழங்காலத்திலேயே மட்பாண்டங்களைச் செய்யும் நுட்பங்கள் கண்டறியப்பட்டன. மட்பாண்டங்கள் செய்வது உலகின் பல பகுதிகளிலும் மிகவும் பழமை வாய்ந்த தொழிலாக இருந்து வருகிறது. இத் தொழில் தமிழில் குயத்தொழில் என்றும், மட்பாண்டம் செய்பவர்கள் கிராமத்தில் "குயவர்" என்றும் வேளார் என்றும் உடையார் என்றும் செட்டியார் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

நீர், தூர்வையாகபட்ட மண் சேர்த்துக் குழைக்கப்பட்ட களி மண்ணை வேண்டிய உருவத்தில் செய்து, அதனை சூளையில் இட்டு உயர்ந்த வெப்பநிலைக்குச் சூடாக்கி மட்பாண்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு சூடாக்குவதன் மூலம், களிமண் இறுகுதல், பலம் கூடுதல், வடிவம் உறுதியாதல் போன்ற நிரந்தரமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. மட்பாண்டங்கள் செய்வதற்குப் பயன்படும் களிமண் இடத்துக்கு இடம் வேறுபாடாக அமைவதால், அவ்விடங்களில் செய்யப்படும் மட்பாண்டங்களும் தனித்துவமான இயல்புகளைக் கொண்டவையாக அமைகின்றன. சில குறிப்பிட்ட தேவைகளுக்காகக் களி மண்ணுடன் வேறுசில கனிமங்களையும் சேர்ப்பது உண்டு.

வரலாறு தொகு

மட்பாண்ட வரலாற்றின் பெரிய பகுதியானது வரலாற்றுக்கு முந்தைய, எழுத்தறிவுக்கு முந்தைய தொல்பழங்காலக் கலாச்சாரத்தைச் சார்ந்ததாக உள்ளது. எனவே, இந்த வரலாற்றின் பெரும்பகுதி தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கப் பெற்ற கலைப்படைப்புகளின் வாயிலாகவே பெறப்படுகிறது. மட்பாண்டத்தின் ஆயுள் மிகவும் நீடித்தது என்பதால், மட்பாண்டங்கள், ஓட்டுச்சில்லுகள் ஆகியவை பல்லாயிரம் ஆண்டுகளாக தப்பிப்பிழைத்து தொல்லியல் ஆராய்ச்சி நடைபெறும் தளங்களில் கிடைக்கப்பெறுகின்றன.

மட்பாண்டக் கலை அல்லது மட்பாண்டத் தொழில் கலாச்சாரத்தின் பகுதியாக மாறுவதற்கு முன்பு, பல நிலைகள் பொதுவாக சந்திக்கப்பட்டிருக்க வேண்டும். அவை,

 • முதலில், மட்பாண்டம் செய்வதற்கு பொருத்தமான களிமண் கிடைக்க வேண்டும். ஆரம்ப மட்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வுக்களங்கள், ஒழுங்காக வடிவமைக்கப்படவும், சுடுவதற்கும் ஏதுவான, உடனடியாக கிடைக்கக்கூடிய களிமண் மூலங்களை கொண்டிருக்கும் இடங்களுக்கு அருகாமையில் உள்ளவையாக உள்ளன. பலவிதமான களிமண் வகைகளை சீனா கொண்டிருந்துள்ளதால், மட்பாண்டத்தொழில் அல்லது கலையில் முன்னோடியாகத் திகழும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்துள்ளது. சீனா மட்டுமல்லாது வேறு பல நாடுகளும் பல்வேறு களிமண் வகைகளின் பெரிய படிவுகளைக் கொண்டுள்ளன.
 • இரண்டாவதாக, கச்சா களிமண்ணிலிருந்து சுட்டாங்கல் வரை உருமாற்றம் செய்யப்படும் வெப்பநிலையை உருவாக்குதற்கு வாய்ப்பிருந்திருக்க வேண்டும். மட்பாண்டங்கள் சுடப்படுவதற்கு ஏற்ற வெப்பநிலையை நம்பகமான முறையில் உருவாக்கும் முறைகள் கலாச்சார வளர்ச்சியின் பிற்காலம் வரையிலும் உருவாக்கப்பட்டதாக அறியப்படவில்லை.
 • மூன்றாவதாக, களிமண் மட்பாண்டங்களைத் தயாரிக்கவும், வடிவமைக்கவும், சூளையில் சுட்டு பக்குவப்படுத்தவும் போதுமான நேரம் கிடைத்திருக்க வேண்டும். தீயைக் கட்டுப்படுத்துவதற்கு மனிதர்கள் அறிந்த பிறகும் கூட நிலையான இருப்பிடத்தில் வாழும் நிலையைப் பெறும் வரை மனிதர்கள் மட்பாண்டம் உருவாக்குவதை அறிந்திருக்கவில்லை. மனிதர்கள் விவசாயம் செய்தலில் நிபுணத்துவம் பெற்று நிரந்தரமான குடியேற்றங்களுக்கு வழிவகுத்த பின்னரே மட்பாண்டம் உருவாக்கப்பட்டது என்று கருத வாய்ப்பிருக்கிறது. இருப்பினும், பழங்காலத்திலேயே அறியப்பட்ட மட்பாண்டமானது சீனாவிலிருந்து கி.மு.20,000 க்கு முன்னதாக, அதாவது விவசாயமெல்லாம் அறியப்படுவதற்கு முன்னதாகவே இருந்திருக்கலாம் என்பதைக் காட்டுகிறது.
 • நான்காவது, அதன் உற்பத்திக்கான அவசியம் இருந்திருந்தால் மட்டுமே மட்பாண்டங்களைத் தயாரிப்பதற்கான வளங்களைக் குறித்து நியாயப்படுத்த முடியும்.[1]

மூலப்பொருட்கள் தொகு

களிமண்ணில் காணப்படும் முதன்மை கனிமமானது வெண்களிமண் அல்லது காவோளினைட்(Kaolinite) ஆகும்; களிமண்ணானது, பொதுவாக 40% அலுமினிய ஆக்சைடு, 46% சிலிக்கான் ஆக்சைடு, மற்றும் 14% நீர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது என பொதுவாக குறிக்கப்படலாம். இரண்டு வகையான களிமண் இயற்கையில் காணப்படுகின்றன. அவை முதனிலை மற்றும் இரண்டாம் நிலைக் களிமண் எனப்படுகின்றன. முதன்மைக் களிமண்ணானது, அது பெறப்பட்ட பாறையின் இடத்திலேயே தான் காணப்படுகிறது. இது ஓடும் நீர் அல்லது பனிப்பாறைகளால் கொண்டு செல்லப்படவில்லையாதலால், வேறுவிதமான வண்டல் படிவுகளுடன் கலந்திருக்கவில்லை. முதன்மை களிமண்ணாது கனமானதும், அடர்த்தியானதும் மற்றும் தூய்மையானதும் ஆகும். இரண்டாம் நிலை அல்லது வண்டல் களிமண், இலகுவான வண்டல் வடிவில் உருவாகிறது, அது நீரில் மூழ்கி, சேமித்து வைக்கப்படுகிறது. இந்த இரண்டாம் வகையான களிமண், வண்டல் கலவையானது, முதன்மை களிமண்ணை விட நுண்ணியதாகவும், இலேசானதாகவும் இருக்கிறது. மாறுபட்ட சேர்க்கைப் பொருட்கள் களிமண்ணுக்கு வெவ்வேறு பண்புகளை கொடுக்கின்றன.[2] மட்பாண்டத் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் வெவ்வேறு வகையான களிமண்ணின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.[3]

 • வெண்களிமன் அல்லது காவோளினைட்: சீனாவில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டு வந்ததால், இது சில நேரங்களில் சீனக் களிமண் என அழைக்கப்படுகிறது. பீங்கான் தயாரிப்பில் இது பயன்படுத்தப்படுகிறது.
 • பந்து களிமண்: மிகச் சிறந்த நெகிழ்வுத்தன்மை கொண்ட, நல்ல நுண்ணிய துகள்களாலான, வண்டல் களிமண், இது சில கரிமப்பொருட்களைக் கொண்டிருக்கலாம். பீங்கான் தயாரிப்பின் போது அதன் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும் பொருட்டு சிறிய அளவில் சேர்க்கப்படுகிறது.
 • தீக்களிமண்: இவ்வகைக் களிமண் வெண்களிமண்ணைக் காட்டிலும் சற்று குறைவான சதவீதத்தில் இளக்கிகளைக் கொண்டிருக்கிறது, ஆனால் வழக்கமான மற்றும் போதுமான அளவிலான நெகிழ்வுத்தன்மையைக் கொண்டதாக உள்ளது. இவ்வகைக் களிமண் வெப்பம் தாங்கவல்லதாக இருப்பதுடன் மற்ற வகைக்களிமண்ணுடன் இணைந்து அந்தக் களிமண்ணின் வெப்பம் தாங்கு திறனை அதிகரிப்பதாகவும் இருக்கிறது.
 • மாக்கல் பாண்டக் களிமண்: இவ்வகைக் களிமண் மாக்கல் வகைப்பாண்டங்களை உருவாக்கப் பொருத்தமானதாகும். இந்தக் களிமண்ணின் பண்புகள் தீக்களிமண்ணின் பண்புகளுக்கும், பந்துக் களிமண்ணின் பண்புகளுக்கும் இடைப்பட்டதாக அமைந்துள்ளன. இவ்வகைக் களிமண் பந்துக் களிமண்ணைப் போன்று நுண்ணிய துகள்களாகவும், தீக்களிமண்ணைப் போன்று வெப்பம் தாங்கவல்லவையாகவும் காணப்படுகின்றது.
 • பொதுவான சிவப்பு களிமண் மற்றும் சேல் களிமண் ஆகியவை தாவர மற்றும் ஃபெர்ரிக் ஆக்சைடு அசுத்தங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும், இவை செங்கல் தயாரிக்க பயனுள்ளதாக இருக்கும், ஆனால், சிறப்பு நிபந்தைனகளுக்குட்பட்டு ஒரு குறிப்பிட்ட சில படிவுகள் மட்டுமே மட்பாண்டங்கள் செய்வதற்கு உகந்தவையாக உள்ளன. தவிர, பொதுவாக, இத்தகைய களிமண் மட்பாண்டங்கள் தயாரிப்பிற்கு உகந்தவையல்ல.[4]
 • பென்டோனைட் வகைக் களிமண் மிகுந்த நெகிழ்வுத்தன்மை கொண்டதாகும். இவ்வகைக் களிமண் மற்ற வகைக் களிமண்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க சேர்க்கப்படுகிறது.

உற்பத்தியின் படிநிலைகள் தொகு

மட்பாண்டங்களை உருவாக்கும் போது களிமண் பாண்டங்கள் மாறுபட்ட இயற்பியல் பண்புகளைப் பெறுகிறது.

 • பச்சை மட்பாண்டங்கள் என்பவை சுடப்பாடத பொருட்களைக் குறிக்கிறது. போதுமான ஈரப்பதத்துடன் உள்ள இந்த நிலையில் பொருட்கள் மிகுந்த நெகிழ்வுத் தன்மை கொண்டவையாக உள்ளன. (அதாவது, மென்மையாகவும், வளையும் தன்மை கொண்டவையாகவும், உருமாற்றம் செய்யப்படக்கூடியவையாகவும் உள்ளன)
 • தோல்-வன்மை என்பது களிமண்ணால் செய்யப்பட்ட பகுதி உலர்த்தப்பட்ட பொருளின் நிலையைக் குறிக்கும். இந்த நிலையில், களிமண்ணால் செய்யப்பட்ட பொருளானது தோராயமாக, 15% ஈரப்பதத்தைக் கொண்டதாக காணப்படும். இத்தகைய நிலையில் காணப்படும் களிமண் பொருட்கள் மிகவும் உறுதி வாய்ந்தவையாகவும், மிகச்சிறிதளவு மட்டுமே வளையத்தக்கதாகவும் காணப்படும். செவ்வியதாக்கல் மற்றும் கைப்பிடி சேர்த்தல் போன்றவை தோல்-வன்மை நிலையிலேயே நிகழ்த்தப்படுகின்றன.
 • மிகவும் உலர்ந்த (சுட்கிய) நிலை என்பது ஈரப்பதமானது 0% அல்லது அதற்கு மிக அருகாமையிலான நிலையை அடைந்த நிலையைக் குறிக்கிறது. இந்த நிலையிலுள்ள மட்பாண்டங்கள் இளஞ்சிவப்பான பழுப்பு நிலையை அடையும் பொருட்டு சூளையில் இட்டு சுடத்தக்கவையாகும்.
 • சுட்ட களிமண் என்பது [5][6] பொருளானது விரும்பிய வடிவத்திற்கு கொண்டு வரப்பட்ட பிறகு முதல் முறையாக சூளையில் இட்டு சுடப்பட்ட நிலையைக் குறிக்கிறது. சுட்ட களி அல்லது ரொட்டியளவுக்கு சுட்ட நிலையைக் குறிக்கிறது. இவ்வாறு சூளையிலிட்டுச் சுடுவது என்பது களிமண்ணால் செய்யப்பட்ட பொருளை பல வழிகளில் மாற்றுகிறது. களிமண்ணால் ஆக்கப்பட்ட பொருளில் உள்ள கனிமப் பகுதிப்பொருட்கள் வேதிய மாற்றத்திற்குட்பட்டு பொருளின் நிறத்தை மாற்றுகின்றன.
 • மெருகிட்ட அல்லது பளிங்கூட்டப்பட்ட சுட்ட களிமண் என்பது மட்பாண்டம் உருவாக்குதலில் இறுதி நிலையாகும். ஒரு வகையான சுட்டாங்கல் மெருகானது சுட்ட களி மட்பாண்டம் மீது பூசப்படுகிறது. மேலும், மட்பாண்டமானது பலவேறு வகைகளில் அலங்கரிக்கப்படுகிறது. இவ்வாறு கிடைக்கும் மட்பாண்டத்தின் நிலையே மெருகிட்ட சுட்ட களிமண் என்ற நிலையாகும். பளிங்கூட்டப் பயன்படும் மெருகு சுடப்படும் போது உருகி பாண்டத்தோடு நன்கு ஒட்டிக்கொள்கிறது. இவ்வாறான மெருகிட்டு சுடுதல் பாண்டத்தை மேலும் கடினமாக்குகிறது.

வடிவமைக்கும் முறைகள் தொகு

மட்பாண்டங்கள் பலவிதமான முறைகளைப் பயன்படுத்தி வடிவமைக்கப்படுகின்றன. அவற்றில் சில:

 • கைகளால் வடிவமைத்தல் : இது தொடக்ககால முறையாகும். களிமண் பாண்டங்கள் களிமண் சுருள்களிலிருந்து வடிவமைக்கப்படுகின்றன. களிமண்ணின் தட்டையான அடுக்குகளை இணைத்தல் அல்லது களிமண் திட பந்துகளைப் பிசைந்து பிணைத்தல் அல்லது இந்த இரண்டு முறைகளையும் சேர்த்து பயன்படுத்தி களிமண் பாண்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு கைகளால் உருவாக்கப்பட்ட பாத்திரங்களின் பாகங்கள் பெரும்பாலும் களிமண் மற்றும் நீர் சேர்ந்த தொங்கல் கலவைகளைக் கொண்டு சீட்டு எனும் துணைக்கருவியின் உதவியுடன் ஒன்றிணைக்கப்படுகின்றன. களிமண்ணால் ஆக்கப்பட்ட பாண்டமானது சூளையிலிட்டு சுடுவதற்கு முன்னரோ அல்லது சுடப்பட்ட பின்னரோ அலங்கரிக்கப்படலாம்.
 • குயவரின் சக்கரம் : "வீசுதல்" என்று அழைக்கப்படும் ஒரு செயல்முறையில், களிமண்ணானது ஒரு சுழல் மேடையின் நடுவில் சக்கரத்தலை என்ற பகுதியில் வைக்கப்படும். பானை செய்பவர் இச்சக்கரத்தை ஒரு குச்சியின் மூலம் தனது கால்களில் உள்ள விசையைப் பயன்படுத்தியோ அல்லது மின் மோட்டாரைப் பயன்படுத்தியோ தேவைப்படும் வேகத்தில் சுழற்றுவார். இந்தச் செயல்முறையின் போது, சக்கரம் சுழலச் சுழல, மெல்லிய களிமண்ணின் திடக்கோளம் அழுத்தப்பட்டு, பிதுக்கப்பட்டு, மென்மையாக மேல்நோக்கியும், வெளிநோக்கியும் இழுக்கப்பட்டு ஒரு வெற்றிடக்கலனாக வடிவமைக்கப்படுகிறது. முதல் படிநிலையானது, சீரற்ற களிமண் பந்தை சமச்சீரான சுழற்சியைப் பயன்படுத்தி கீழ்நோக்கியும், உள்நோக்கியும் அழுத்துவது களிமண்ணை மையத்திற்குக் கொணரும் செயலாகும். இது மிக முக்கியமான அதிகத் திறன் தேவைப்படுகின்ற படிநிலையாகும்.திறப்பு ஏற்படுத்துவது (திடமான களிமண் பந்திலிருந்து மையத்தில் திறப்பு கொண்ட ஒரு வெற்றுக் கோளத்தை உருவாக்குவது), தளப்படுத்துதல் (தட்டையான வட்ட வடிவ அடிப்புறத்தை பானையின் உட்புறத்தில் உருவாக்குதல்) எறிதல் அல்லது இழுத்தல் (பானையின் உட்புறமிருந்து பானையின் சுவர்களை ஒரே அளவிலான தடிமனில் பரவிவிடுதல் மற்றும் செவ்வியதாக்கல் (தேவையற்ற அல்லது அதிகப்படியான களிமண்ணை நீக்கி தேவைப்படும் வடிவத்தைத் துல்லியமாக்குவது). ஏற்றுக்கொள்ளக்கூடிய தரநிலைகளுடன் மண்பாண்டங்களை உருவாக்குவதற்கு குயவரின் சக்கரத்தில் எறிதல் செயல்முறையைக் கையாள குறிப்பிடத்தக்க திறன் மற்றும் அனுபவம் தேவைப்படுகிறது. அவ்வாறான அனுபவமும், திறனும் இருக்கும் நேர்வில் உருவாக்கப்படும் பாண்டங்கள் உயர் கலை நேர்த்தியுடனும் அமையும்.[7]

பல விதமான மட்பாண்டங்கள் தொகு

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

 1. William K. Barnett and John W. Hoopes, The Emergence of Pottery: Technology and Innovation in Ancient Society, Smithsonian Institution Press, 1995, p. 19
 2. "Pottery". How products are made. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2017.
 3. Ruth M. Home, 'Ceramics for the Potter', Chas. A. Bennett Co., 1952
 4. Home, 1952, p. 16
 5. "The Fast Firing Of Biscuit Earthenware Hollow-Ware In a Single-Layer Tunnel Kiln." Salt D.L. Holmes W.H RP737. Ceram Research.
 6. "New And Latest Biscuit Firing Technology". Porzellanfabriken Christian Seltmann GmbH. Ceram.Forum Int./Ber.DKG 87, No.1/2, p.E33-E34, E36. 2010
 7. "Whitewares: Production, Testing And Quality Control." W.Ryan & C.Radford. Pergamon Press. 1987
"https://ta.wikipedia.org/w/index.php?title=மட்பாண்டம்&oldid=3936856" இலிருந்து மீள்விக்கப்பட்டது