உடப்பு காளியம்மன் கோயில்

உடப்பு காளியம்மன் கோயில் இலங்கையின் வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உடப்பு என்னும் ஊரில் அமைந்துள்ளது. வரலாற்று பின்புலத்தைச் கொண்ட இவ்வாலயம் பல அற்புதங்களையும் பல அதியங்களையும் கொண்டதாகும்.

வரலாறு தொகு

இவ்வாலயம் கிபி 1878 ஆம் ஆண்டு செங்கற்களால் கட்டப்பட்டு குடமுழக்குச் செய்யப்பட்டது. அதன் பின்னர் 1898 ஆம் ஆண்டில் இருபது ஆண்டுகளின் பின் பழைய விக்கிரகத்துக்குப் பதிலாக தற்போது இருக்கும் மூல விக்கிரகம் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டு பாலஸ்தானம் செய்யப்பட்டு முன்னேஸ்வரம் ஆலய குருக்களாக குமாரசாமி குருக்களால் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

அக்காலத்தில் இவ்வூர் மக்கள் கடற்றொழிலை தமது ஜீவனோபாயத் தொழிலாக மேற்கொண்டனர். வெள்ளிக்கிழமையிலும் தொழில் செய்து வந்தனர்.

1900ஆம் ஆண்டு காசியில் இருந்து வந்த கங்காதர சுவாமி வெள்ளிக்கிழமையிலும் இவ்வூர் மக்கள் தொழில் செய்வதை கண்டு மனம் நொந்தார். பின் மக்களெல்லாம் ஒன்றிணைந்து வெள்ளிக்கிழமையில் தொழில் புரிவதில்லை என சக்திய வாசகம் செய்தார்கள்.

அற்புதங்கள் தொகு

1850 ஆம் ஆண்டு கொடிய பேதிநோய் இங்கு பரவியது. மக்கள் ஊரை விட்டே ஓட முயற்சித்தார்கள். அவ்வமயம் இவ்வூரிலிருந்த காளி பக்தனான கொத்தக் கிழவன் என்பவருக்கு காளி உருவாகவே, மக்களை ஊரைவிட்டு நகர வேண்டாமென்றும், காளியின் கருணையினால் மக்கள் காப்பாற்றப்படுவார்கள் என்றும், காளிதேவிக்கு பச்சை ஓலையினால் குடில் கட்டி வேப்பிலை கும்பம் வைத்து கடல் நீரை எண்ணெயாக வார்த்து விளக்கெரிக்கும் படியும் கூறினாள். அவர்களும் அவ்விதமே செய்து தேவியை வழிபட்டனர். தேவிக்குப் பிரதிட்டை செய்து வேப்பிலை கும்பத்திலே பூத்துக்காய்த்ததாகவும், கடல் நீரில் விளக்கெரிந்ததாகவும் வழிவழியாக மக்கள் கூறுகின்றார்கள்[1].

சிறப்புகள் தொகு

இவ்வாலய விழாவில் கரகம் பாலித்தல் முக்கிய நிகழ்வாக இடம்பெறும். இவ்வுற்சவத்தில் ஏழாம் நாள் இரவு ‘அர்த்த இராத்திரிக்கரகம்’ என்றும் அழைப்பார்கள். ஒன்பதாம் நாள் உற்சவத்தில் காலையில் ஆலய பூசகர் தேவ உரு ஏறி அக்கினிக்குண்டலமேந்தி ஊர்வலம் நடைபெறும். இதை ‘பிச்சைக்கரகம்’ என்பார்கள்.

பத்தாம் நாள் வேள்வி விழா கொண்டாடப்படும். பொங்கல் வைத்து தத்தம் நேர்த்திக் கடன்களை செலுத்துவார்கள்.

மேற்கோள்கள் தொகு

  1. உடப்பு ஸ்ரீ காளியம்மன் ஆலயம் பரணிடப்பட்டது 2012-04-08 at the வந்தவழி இயந்திரம், உடப்பூர் வீரசொக்கன் எழுதியது, தினகரன், செப்டம்பர் 14,, 2009