உடையார்கோயில்

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர்-நாகப்பட்டினம் சாலையில் தஞ்சாவூரிலிருந்து 18 கிமீ தொலைவில் காவிரி வடவாறு தென்கரையில் உடையார்கோயில் அமைந்துள்ளது.

நுழைவாயில்

பேரேரி தொகு

கோயில் முன் அமைந்துள்ள பேரேரி ஒரு காலத்தில் தீவு போல் சுற்றிலும் அமைய நடுவில் சிவன் கோயில் அமைந்திருந்தது. பின்னர் போக்குவரத்து வசதிக்காக இடது பக்கம் மட்டும் மண் கொண்டு மூடப்பட்டு தற்போது கோயிலின் மூன்று புறமும் பெரிய ஏரி காணப்படுகிறது. இவ்விதம் நீர் நிலையின் நடுவில் இக்கோயில் அமைந்திருப்பது ஒரு தனிச்சிறப்பாகும்.[1] கோயிலின் எதிரில் தற்போது ஒரு குளம் உள்ளது. மூன்று புறம் ஏரி தற்போது காணப்படவில்லை. ஏரி சுருங்கி தற்போது குளமாக மாறியிருக்கலாம்.

அமைப்பு தொகு

மூன்று பிரகாரங்களுடன் இக்கோயில் உள்ளது. கருவறையைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் வரிசையாக முக்குருணி அரிசி விநாயகர், பிரம்மபுரீஸ்வரர், ஆனந்தபுரீஸ்வரர், காசி விஸ்வநாதர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், வேதபுரீஸ்வரர், சதுர்வேதபுரீஸ்வரர், பூலோகநாதர், கஜலட்சுமி ஆகியோர் உள்ளனர். பிரதான விநாயகர் சன்னதி தனியாக உள்ளது. அச்சன்னதியில் அனுராதா க்ரமன சரஸ்வதி உள்ளார். கருவறையின் பின்புறம் முறையே விநாயகர், தெட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. அருகில் கோயிலின் தலவிருட்சமான களாச்செடி உள்ளது. முன்மண்டபத்தில் பள்ளியறை உள்ளது. அதனைத் தொடரந்து பைரவர், திருமறைக்கோயில், சேக்கிழார், ஞானசம்பந்தர், அப்பர், சுந்தர், மாணிக்கவாசகர், அனுமார், சூரியன், சந்திரன் காணப்படுகின்றனர். இங்கு நவக்கிரகச் சன்னதியும் உள்ளது.

இறைவன், இறைவி தொகு

இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் கரவந்தீஸ்வரர் எனப்படுகிறார். [1] இவர் திருக்களாவுடையார் என்றும் அழைக்கப்படுகிறார். கருவறையின் முன்புறம் வலது புறம் ஆட்கொண்டாரும், இடது புறம் உய்யக்கொண்டாரும் உள்ளனர். கருவறையின் முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளன. கோயிலின் இடது புறம் அம்மன் சன்னதி உள்ளது. அங்குள்ள இறைவி தர்மவல்லி என்றழைக்கப்படுகிறார். அம்மன் சன்னதி அருகே நர்த்தன விநாயகர் உள்ளார்.

கல்வெட்டு தொகு

இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் காலத்தால் முந்தியது முதலாம் இராசேந்திரனின் 31ஆம் ஆட்சியாண்டு (கி.பி.1045) கல்வெட்டாகும். இம்மன்னனின் கல்வெட்டில் ‘நம்மூர் திரிபுவன மாதேவிப் பேரேரி உள்ளால் எழுந்தருளியிருந்த திருக்கிளாஉடையார்மகாதேவர் கோயிலில்‘ என்று குறிப்பிடுவதிலிருந்து ஏரியின் நடுவில் இக்கோயில் அமைந்திருந்தது என்பதும், ஏரியின் பெயர் திரிபுவன மாதேவிப் பேரேரி என்றும் அறியமுடிகிறது. [1]

அருகேயுள்ள கோயில் தொகு

இவ்வூரில் வெங்கடாஜலபதி கோயில் என்ற பெருமாள் கோயில் உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 ச.பரணன், பேரேரியின் நடுவில் ஒரு சிவன் கோயில், மகாமகம் 2004 சிறப்பு மலர்

படத்தொகுப்பு தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Udayar Kovil
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடையார்கோயில்&oldid=2254293" இலிருந்து மீள்விக்கப்பட்டது