உபபீடம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்தியாவின், சிற்பநூல்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட மரபுவழிக் கட்டிடங்களில் நிலத்துக்கு மேல் அமைகின்ற முதல் உறுப்பு உபபீடம் ஆகும். ஆரம்பகாலக் கட்டிடங்களில் அதிட்டானம் என்று அழைக்கப்படும் தாங்குதளமே கட்டிடத்தின் அடித்தளமாக இருந்தது. பிற்காலத்தில் இத் தாங்குதளத்தின் கீழ் உபபீடம் என்னும் உறுப்பு அமைக்கும் வழக்கம் ஏற்பட்டது. தாங்குதளத்துக்கு வலுவூட்டவும், கட்டிடத்தை உயர்த்திக் காட்டுவதற்குமாகவே உபபீடங்கள் அமைக்கப்படுகின்றன என்று சிற்பநூல்கள் கூறுகின்றன. கட்டிடங்கள் உயரத்திலும் பரப்பளவிலும் பெரியவையாக வளர்ந்தபோது, அளவுவிகிதப்படி கட்டிடங்களின் அடித்தளமும் உயரமாக அமையவேண்டியது, அழகியல் நோக்கில் அவசியம் ஆகியது. உபபீட அமைப்பு இத் தேவையை நிறைவு செய்தது எனலாம்.
சிற்பநூல்கள் பலவகையான உபபீடங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றன. மயமதம், உபபீடங்களை மூன்று பெரும் பிரிவுகளாக வகுத்துக் கூறுகிறது. அவை,
- வேதி பத்ரம்,
- பிரதி பத்ரம்,
- சுப பத்ரம்
என்பனவாகும். காசியப சிற்பசாஸ்திரம் என்னும் சிற்பநூல், நான்கு வகையான உபபீடங்களின் விபரங்களைத் தருகிறது.
- பிரதி பத்ரம்,
- பிரதி சுந்தரம்,
- சௌபத்ரம்,
- கல்யாணிகா
என்பனவே இவையாகும்.
மேற்படி உபபீடங்கள் பல்வேறு துணை உறுப்புக்களின் அடுக்கமைவில் உருவானவை. இடம்பெற்றுள்ள துணை உறுப்புக்களின் வகைகள், அவற்றின் எண்ணிக்கை, அவை அமைந்துள்ள விதம் என்பவற்றைப் பொறுத்து, மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு வகையும் மேலும் பல பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. உபபீடங்களின் துணை உறுப்புகள் பலவாகும். சில உறுப்புகள் சிற்பநூல்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களால் குறிப்பிடப்படுவதைக் காணலாம். பொதுவான துணை உறுப்புகளின் பெயர்களும், அவற்றுக்கான மாற்றுப் பெயர்களும் கீழே தரப்பட்டுள்ளன.
- உபானம் - (ஜன்மம், பாதுகம்)
- பத்மம் - (பங்கஜம், அப்ஜம், அம்புஜம்)
- கம்பம் - (கம்பு, க்ஷேபணம்)
- கண்டம் - (கிரீவம்)
- வாஜனம்
- அந்திரி
- ஆலிங்கம்
- பிரதி
- கபோதம் - (கோபானகம்)