உருபனியல் (morphology) என்பது மொழியியலின் துணைத் துறைகளில் ஒன்று. இது சொற்களின் அமைப்புப் பற்றி ஆராயும் துறையாகும். பொருள் தரும் மிகச்சிறிய ஒலியக்கூறு உருபன் எனப்படுகிறது. உருபனே பொருளோடு நேரடியான தொடர்பு கொண்டது ஆகும். அன்பு, பண்பு, உலகம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உருபன். இவை ஒவ்வொன்றும் தனித்தனியே பொருள் உடையன. இவற்றை மேலும் சிறு கூறுகளாகப் பிரிக்கமுடியாது.

சொற்றொடரியலின் மிகச் சிறிய அலகாகக் கருதப்படுகின்ற சொல், வேறு பல சொற்களுடன் ஓர் ஒழுங்கு முறையில் தொடர்புபட்டு இருப்பதைக் காணமுடியும். எடுத்துக்காட்டாக, தொழில், தொழில்கள், தொழிலாளி என்பன ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. தமிழ் மொழி அறிந்தவர்கள் இவ்வாறான தொடர்புகளை அனுபவத்தின் வாயிலாக அறிந்திருப்பர். இந்த அனுபவத்தின் வாயிலான மொழியறிவின் மூலம் தொழில் என்பதற்குத் தொழில்கள் எப்படியோ, அதுபோல, போர் என்பதற்குப் போர்கள் என அவர்கள் அறிவார்கள். இது போலவே, தொழிலாளி என்ற சொல் உருவானது போல, போராளி என்ற சொல்லும் உருவாகும். இவ்வாறே அடிப்படையான சொற்கள் குறிப்பிட்ட ஒரு தொகுதி ஒழுங்கு விதிகளின் அடிப்படையில் பல்வேறு சொற்களாக உருவாகின்றன. இவ்வாறு ஒரு மொழியில், சொற்களின் உருவாக்கத்துக்கு அடிப்படையாக உள்ள விதிகளை ஆராய்ந்து வெளிக்கொணர்வது உருபனியலின் முக்கிய நோக்கமாகும்.

வரலாறு

தொகு

இந்தியாவில் மிகப் பழைய காலத்திலேயே உருபனியல் சார்ந்த பகுப்பாய்வுகள் நடைபெற்றுள்ளன. பாணினி எழுதிய சமசுகிருத மொழி இலக்கண நூலான அட்டாத்தியாயியும், தமிழ் மொழி இலக்கணமான தொல்காப்பியமும் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். பாணினி, சமசுகிருத சொல்லாக்கத்துக்கான 3959 விதிகளை விளக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதுபோலவே கிரேக்க - உரோமானிய மொழியியல் மரபிலும், உருபனியல் பகுப்பாய்வுகள் நடைபெற்றுள்ளன.

மேற்கோள்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=உருபனியல்&oldid=3529933" இலிருந்து மீள்விக்கப்பட்டது