உலக கொலம்பியக் கண்காட்சி

சிக்காகோ உலக விழா என்றும் அழைக்கப்பட்ட உலக கொலம்பியக் கண்காட்சி (World's Columbian Exposition) ஒரு உலக விழா ஆகும். இது 1893 ஆம் ஆண்டில் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த 400 ஆவது ஆண்டைக் கொண்டாடுவதற்காக ஒழுங்கு செய்யப்பட்டது. வாஷிங்டன் டி. சி. யையும், மிசூரியின் சென். லூயிசையும் வென்று சிக்காகோ, இவ்விழாவை நடத்திய பெருமையைப் பெற்றது. இவ்விழா, கட்டிடக்கலை, கலை, சிக்காகோவின் பெருமை, அமெரிக்காவின் தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் ஆழமான தாக்கத்தை உண்டாக்கியது. சிக்காகோ கொலம்பியக் கண்காட்சியின் பெரும்பகுதி, டானியல் பேர்ண்ஹாம், பிரடெரிக் லா ஆம்ஸ்டெட் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது. இது, ஒரு நகரம் எப்படி இருக்கவேண்டும் என்ற பேர்ண்காமினதும் அவரது உடன்பணியாளர்களதும் எண்ணத்தின் மாதிரியாகும். இது, சமச்சீர், சமநிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஐரோப்பிய செந்நெறிக் கட்டிடக்கலைக் கொள்கையான பியூக்ஸ் ஆர்ட்ஸ் கொள்கைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது.

1893 இன் உலக கொலம்பியக் கண்காட்சியின்போது சிக்காகோவின் தோற்றம்.

இக் கண்காட்சி, 600 ஏக்கர்களுக்கும் (2.4 கிமீ2) மேற்பட்ட பரப்பளவில் அமைந்திருந்தது. இக் கண்காட்சிக்கு செந்நெறிக் கட்டிடக்கலை சார்ந்த 200 க்கு மேற்பட்ட புதிய கட்டிடங்கள், கால்வாய்கள், குடாக்கள் முதலியவற்றுடன், உலகின் பல்வேறு பண்பாடுகளைச் சேர்ந்த மக்களும் அழகூட்டினர். இது நடைபெற்ற ஆறு மாதங்களில், ஐக்கிய அமெரிக்காவின் அன்றைய மக்கள்தொகையில் அரைப்பகுதிக்குச் சமமான சுமார் 27 மில்லியன் மக்கள் இக் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Bird's-Eye View of the World's Columbian Exposition, Chicago, 1893". உலக மின்னூலகம். 1893. Archived from the original on 2013-10-14. பார்க்கப்பட்ட நாள் 2013-07-17.
  2. "World's Columbian Exposition". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 
  3. Larson, Erik (2003). The Devil in the White City: Murder, Magic, and Madness at the Fair That Changed America. New York: Vintage Books. pp. 318–320. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-609-60844-4.