உழைக்கும் வகுப்பு
தொழிலாளர் வகுப்பு, பாட்டாளி வர்க்கம், உழைக்கும் வர்க்கம் எனவும் அழைக்கப்படும் உழைக்கும் வகுப்பு என்பது, சிறப்பாக உடல் உழைப்பு வேலைகளிலும் கைத்தொழில் துறையிலும், கூலிக்கு வேலை செய்யும் மக்கள் குழுவைக் குறிக்கும்.[1] உழைக்கும் வகுப்புத் தொழில்களுள் உடலுழைப்புத் தொழில்கள், சில மூளையுழைப்புத் தொழில்கள், பெரும்பாலான கவனிப்புத் தொழில்கள் என்பன அடங்கும். உழைக்கும் வகுப்பினர் கூலித் தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தில் மட்டுமே தங்கியுள்ளனர். இவ்வகுப்பு கைத்தொழில்மயப் பொருளாதாரங்களின் பெரும்பாலான உழைக்கும் மக்களையும், கைத்தொழில்மயமாகாத பொருளாதாரங்களின் பெரும்பாலான நகரப் பகுதி மக்களையும், நாட்டுப்புற உழைப்பாளர்களையும் உள்ளடக்குகிறது.
மார்க்சியக் கோட்பாட்டிலும், சமூகவுடைமை எழுத்துக்களிலும் உழைக்கும் வகுப்பு என்னும் சொல் பாட்டாளி வர்க்கம் என்னும் சொல்லுக்கு ஈடாகவும் பயன்படுவதுடன், உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளர்களுக்காகப் (மார்க்சிய எழுத்துக்கள் குறிப்பிடும் பூர்சுவாக்கள்) பொருளாதார மதிப்பை உருவாக்குவதில் ஈடுபடும் உடல் உழைப்பாளர்களையும், மூளை உழைப்பாளர்களையும் ஒருங்கே உள்ளடக்குகிறது.[2]
வரைவிலக்கணம்
தொகுசமூக வகுப்புக்களைக் குறிக்கும் பல சொற்களைப் போலவே "உழைக்கும் வகுப்பு" என்பது பல வழிகளில் வரைவிலக்கணம் கூறப்பட்டும், பயன்படுத்தப்பட்டும் வருகிறது. மார்க்சியவாதிகளும், சமூகவுடமைவாதிகளும் பயன்படுத்தும், உழைப்பு ஆற்றலையும், திறனையும் தவிர விற்பதற்கு எதுவும் அற்ற எல்லோரையும் உழைக்கும் வகுப்பு உள்ளடக்குகிறது என்பதுவே மிகப் பொதுவான வரைவிலக்கணம் ஆகும். இந்த அடிப்படியில், வணிக முயற்சிகளில் இருந்தும், பிறருடைய உழைப்பில் இருந்தும் வருமானம் பெறுவோர் தவிந்த எல்லாவகையான உடலுழைப்புத் தொழிலாளரையும் மூளையுழைப்புத் தொழிலாளரையும் "உழைக்கும் வகுப்பு" உள்ளடக்குகிறது.
ஐக்கிய அமெரிக்காவில் புலமைசாராத வகையில் பயன்படுத்தும்போது உடலுழைப்பில் தங்கியிருக்கும், சிறப்பாக மணிநேர அடிப்படையில் கூலி பெறும் சமூகப் பிரிவினரையே குறிக்கிறது. சில வகையான அறிவுத் துறைகளிலும், குறைவான அறிவியல் தன்மை கொண்ட ஆய்விதல் அரசியல் பகுப்பாய்வுகளிலும், உழைக்கும் வகுப்பு என்பது பட்டம் பெறாத தொழிலாளர்களைக் குறிப்பதுண்டு.[3] உழைக்கும் வகுப்பினரைத் திறன்சாராத் தொழிலாளர், கைப்பணியாளர், வெளித் தொழிலாளர், ஆலைத் தொழிலாளர் என நான்கு வகையாகப் பிரிக்கின்றனர்.[4]
சமூகவியலில் சிலவேளைகளில் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மாற்றுமுறைப்படி "வகுப்பு" வருமான அடிப்படையில் வரையறுக்கப்படுவது உண்டு. இந்த அணுகுமுறையைப் பயன்படுத்தும்போது, உழைக்கும் வகுப்பை, நடுத்தர வகுப்பில் இருந்து, கல்வி, பண்பாட்டு ஆர்வம், பிற பொருட்களும் சேவைகளும் போன்ற பொருளாதார வளங்கள் கிடைக்கும் தன்மையை அடிப்படையாககொண்டு வேறுபடுத்திப் பார்க்க முடியும்.
தன்னைத்தானே உழைக்கும் வகுப்புடன் அடையாளம் காண்பதைக் கொண்டு தற்சார்பாக "உழைக்கும் வகுப்பு"த் தகுதிநிலையை வரையறுக்கலாம் எனச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[5] இது, ஆய்வாளர்கள் அன்றி, மக்கள் தமது சமூக வகுப்பைத் தாமே வரையறுத்துக்கொள்ள வழி சமைக்கின்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ working class பரணிடப்பட்டது 2016-08-05 at the வந்தவழி இயந்திரம். Oxford Dictionaries. Retrieved 8 May 2014.
- ↑ Martin Glaberman (17 September 1974). "Marxist Views of the Working Class". Marxists.org. பார்க்கப்பட்ட நாள் 18 January 2013.
- ↑ Thomas B. Edsall (June 17, 2012). "Canaries in the CoaMine" (Blog by expert). The New York Times. http://campaignstops.blogs.nytimes.com/2012/06/17/canaries-in-the-coal-mine/. பார்த்த நாள்: June 18, 2012.
- ↑ Doob, B. Christopher (2013). Social Inequality and Social Stratification in US Society. Upper Saddle River, New Jersey: Pearson Education. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-205-79241-3.
- ↑ Rubin, M., Denson, N., Kilpatrick, S., Matthews, K. E., Stehlik, T., & Zyngier, D. (2014). "'I am working-class': Subjective self-definition as a missing measure of social class and socioeconomic status in higher education research". Educational Researcher. doi: 10.3102/0013189X14528373