ஊர் பஞ்சாயத்து
ஊர் பஞ்சாயத்து, தமிழக கிராமங்களில் நிகழும் குடும்பப் பிரச்சனைகள், சமூகப் பிரச்சனைகள், வாய்க்கல், வரப்பு போன்ற நிலத் தகராறுகள், அடிதடி, திருட்டு, தீ வைத்தல், கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்களை விசாரித்து தீர்ப்பு கூறும் ஊர் பெரியவர்கள் கொண்ட குழுவாகும்.[1] இக்குழுவின் தலைவரை நாட்டாமை என்பர். நாட்டாமையின் தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறை அல்லது நீதிமன்றங்களில் முறையிடுவதில்லை. பஞ்சாயத்து கூடி வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கும் முறை தமிழ்நாட்டில் காலங்காலமாக நடைபெற்று வருகிறது. இராஜதுரோக குற்றங்களை ஊர் பஞ்சாயத்து விசாரிப்பதில்லை.
தண்டணைகள்தொகு
நாட்டாமை தலைமையிலான பஞ்சாயத்து குழுவின் விசாரணை முடிவில் நாட்டாமை தீர்ப்பு வழங்குவார். சாதாரண குற்றங்களுக்கு அபராதம் விதித்தல், கோயிலுக்கு நற்பணிகள் செய்ய வைத்தல், சாட்டையால் அடித்தல், மொட்டையடித்தல் போன்ற தண்டனைகள் தரப்படுகிறது. கிராமத்தையும், சமூகத்தையும் பாதிக்கும் பெரிய குற்றங்களுக்கு தலையில் மாட்டுச் சாணியை கரைத்து தலையில் ஊற்றுதல், முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுதை மேல் அமர்த்தி ஊரைச் சுற்ற வைத்தல், சாதி விலக்கம் செய்தல் அல்லது ஊரை விட்டு விலக்கி வைத்தல் போன்ற தண்டனைகள் வழங்கப்படுகிறது.
வட இந்தியாவில் ஊர் பஞ்சாயத்துக்களுக்கு காப் பஞ்சாயத்து என்பர்[2]. காப் பஞ்சாயத்து தீர்ப்புகளுக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காப் பஞ்சாயத்துகள் தொடர்பான வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு, காப் பஞ்சாயத்துகளின் தீர்ப்பு சட்டபூர்வமற்றது என தீர்ப்பு வழங்கி உள்ளது. [3][4]
சாதி பஞ்சாயத்துதொகு
குறிப்பிட்ட சாதி சனங்களுக்குள் நடைபெறும் சமூகப் பிரச்சனைகளை சாதிப் பஞ்சாயத்துகளே தீர்த்து வைக்கிறது.[5]
மேற்கோள்கள்தொகு
- ↑ பஞ்சாயத்து
- ↑ What is khap panchayat?
- ↑ "காப் பஞ்சாயத்துகளை மத்திய அரசு தடை செய்யாவிட்டால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்: சுப்ரீம் கோர்ட்". 2018-01-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-01-16 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Attack on couples by khap panchayat illegal: SC
- ↑ ஜாதி பஞ்சாயத்து; கலப்பு திருமணம் செய்த குடும்பத்தையே ஒதுக்கி வைத்த அவலம்