எம்பால்செ அணுக்கரு ஆற்றல் நிலையம்
எம்பால்செ அணுக்கரு ஆற்றல் நிலையம் (Embalse Nuclear Power Station) என்பது அர்கெந்தினாவில் செயல்படும் மூன்று அணுக்கரு ஆற்றல் நிலையங்களில் ஒன்றாகும். கொர்தோபாவிற்கு அருகிலுள்ள எம்பால்செ நகரில், ரியோ தெர்செரோ ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கத்தின் தென்கரையில் எம்பால்செ அணுக்கரு உலை அமைந்துள்ளது. கொர்தோபா நகரின் தெற்கு மற்றும் தென்மேற்கில் 110 கிலோமீட்டர் தொலைவில் இவ்வமைவிடம் இருக்கிறது.
எம்பால்செ அணுக்கரு ஆற்றல் நிலையம் Embalse Nuclear Power Station | |
---|---|
நாடு | அர்கெந்தீனா |
அமைப்பு துவங்கிய தேதி | 1974 |
இயங்கத் துவங்கிய தேதி | சனவரி 20, 1984 |
இயக்குபவர் | Nucleoeléctrica Argentina Sociedad Anónima |
இணையதளம் [1] |
கனடா தியூட்ரியம் யுரேனியம் என்ற சொற்களுக்கான ஆங்கில எழுத்துகளின் சுருக்கம் (CANDU - CANada Deuterium Uranium) காண்டு அணு உலை என்று அழைக்கப்படுகிறது. எம்பால்செ அணுக்கரு உலையும் இவ்வகையான ஒரு அணு உலையேயாகும். இவ்வணுவுலையில் இயற்கை யுரேனியம் (0.72 சதவீதம் 235U) எரிபொருளாகவும் தியூட்டிரியம் ஆக்சைடு எனப்படும் கனநீர் (D2O) குளிர்வியாகவும் நியூட்ரான் மட்டுப்படுத்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இவ்வணு உலை அழுத்த கனநீர் அணு உலை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. 2,109 மெகாவாட் வெப்ப ஆற்றல் கொண்ட இவ்வுலை 648 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவல்லது ஆகும். இங்கிருந்து சுமார் 600 மெகாவாட் மின்சாரம் நிகர வெளியீடாக உற்பத்தியாகிறது. அர்கெந்தீனாவின் உள்ளிணைப்பு மின்னாற்றல் திட்டத்திற்கு தேவையான மின்னாற்றலில் 4.5% இங்கிருந்து அனுப்பப்படுகிறது.
புற்றுநோய்ச் சிகிச்சை மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கோபால்ட் – 60 என்ற கதிரியக்க ஓரிடத்தனிமத்தையும் எம்பால்செ அணுக்கரு உலை கூடுதலாக உற்பத்தி செய்கிறது.
1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எம்பால்செ அணு உலை 1983 ஆம் ஆண்டு முதல் செயல்படத்தொடங்கியது. இத்தாலிய-கனடிய கூட்டமைப்பினால் இவ்வணுவுலையின் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- (எசுப்பானியம்) CNEA பரணிடப்பட்டது 2010-07-02 at the வந்தவழி இயந்திரம்
- (ஆங்கிலம்) Nucleoeléctrica Argentina S.A.
- பொதுவகத்தில் Embalse Nuclear Power Plant தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.