எர்னஸ்ட் ஓட்டோ பெக்மன்

செருமானிய வேதியியலாளர்

எர்ன்ஸ்ட் ஓட்டோ பெக்மேன் (Ernst Otto Beckmann) (சூலை 4, 1853 - சூலை 12, 1923) ஒரு செருமானிய மருந்தாளர் மற்றும் வேதியியலாளர் ஆவார். இவர் பெக்மன் வெப்பமானியைக் கண்டுபிடித்ததற்காகவும், பெக்மன் மறுசீரமைப்பு வினையைக் கண்டுபிடித்ததற்காகவும் நினைவுகூரப்படுகிறார். [2]

எர்னஸ்ட் ஓட்டோ பெக்மன்
எர்னஸ்ட் பெக்மன்
எர்னஸ்ட் பெக்மன்
பிறப்பு (1853-07-04)சூலை 4, 1853
சோலிஞ்சென், செருமானியப் பேரரசு
இறப்புசூலை 12, 1923(1923-07-12) (அகவை 70)
டாஹெல்ம் (பெர்லின்), வெய்மர் குடியரசு
துறை ஆலோசகர்எர்மான் கோல்ப்[1]
அறியப்பட்டதுபெக்மன் மறுசீரமைப்பு வினை
பெக்மன் வெப்பநிலைமானி

அறிவியல் பணி

தொகு

எர்னஸ்ட் ஓட்டோ பெக்மன் ஜெர்மனியின் சோலிங்கனில் சூலை 4, 1853 இல் ஜோஹன்னஸ் பிரீட்ரிக் வில்ஹெல்ம் பெக்மேன் என்ற மருந்து உற்பத்தியாளரின் தலைமையில் ஒரு குடும்பத்தில் பிறந்தார். மூத்த பெக்மேனின் தொழிற்சாலையானது கனிம சாயங்கள், நிறமிகள், சிராய்ப்புப் பொருள்கள் மற்றும் மெருகூட்டல் பொருள்களை உற்பத்தி செய்தது. அங்குதான் இளைய பெக்மேன் தனது ஆரம்பகால வேதியியல் பரிசோதனைகளை மேற்கொண்டார். 17 வயதில், பெக்மேன் வேதியியலுக்குப் பதிலாக மருந்தியலைப் படிக்க அவரது தந்தையால் வற்புறுத்தப்பட்டார். எனவே 1870 ஆம் ஆண்டில் எல்பெர்பெல்டில் ஒரு மருந்தியலாளர் பயிற்சி பெற்றார். இருப்பினும், பெக்மனுக்கு அங்குள்ள பணி நிலைமைகள் பிடிக்காமல் வீடு திரும்பினார். இது அவரது தந்தைக்கு ஏமாற்றத்தைத் தந்தது. மருந்தகத்தில் ஒரு பயிற்சியினைக் கையாள முடியாவிட்டால் ஒரு வேதியியலாளர் வாழ்க்கை கடினமாக இருக்கும் என்று தந்தை அறிவுறுத்தியதால், பெக்மேன், தனது வேலையை முடிக்க எல்பெர்பெல்டிற்கு திரும்பினார். [3] அரோல்சன், பர்க் அன் டெர் வுப்பர், லீப்ஜிக் மற்றும் கொலோன் ஆகிய இடங்களில் உள்ள மருந்தகங்களிலும் பணியாற்றினார்.

தனது கருத்தியல் அறிவுத் திறன்களை மேம்படுத்துவதற்காக, 1874 ஆம் ஆண்டில் பெக்மேன் வைஸ்பேடனில் உள்ள ரெமிஜியஸ் ஃப்ரெசீனியஸ் பள்ளியில் சேர்ந்தார், அடுத்த ஆண்டு லீப்சிக் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அந்த ஆண்டு ஃப்ரெசீனியஸ் அங்கு பேராசிரியரானார். லீப்சிக்கில், புகழ்பெற்ற வேதியியலாளர் ஹெர்மன் கோல்பேவுடன் பெக்மேன் தொடர்பு கொண்டார். பெக்மேன் வேதியியல் படிக்க விரும்பினாலும், ஃப்ரெசீனியசில் தனது படிப்பை முடித்து 1877 ஆம் ஆண்டில் தனது மருந்தியல் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் அவர் கோல்பே மற்றும் அவரது உதவியாளரான எர்ன்ஸ்ட் வான் மேயருடன் சேர்ந்தார், மேலும் ஈரல்கைல் சல்பைடுகளின் ஆக்சிசனேற்றம் தொடர்பான பணியினைத் தொடங்கினார். இந்த ஆராய்ச்சிக்காக பெக்மேன் 1878 ஆம் ஆண்டு சூலையில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார்.

 
பெக்மன் உறைநிலை புள்ளி கண்டறியும் கருவி மற்றும் பெக்மன் வெப்பநிலைமானி

ஒரு வருடம் தன்னார்வ இராணுவ சேவையின் பின்னர், ஒரு மருந்தாளராக, பெக்மேன் டியு பிரவுன்ச்வீக்கில் இராபர்ட் ஓட்டோவுடன் நச்சியல் படிக்கத் தொடங்கினார். 1882 இல் தனது "ஹேபிலிட்டேசன்" தகுதியைப் பெற்றார். அவர் லீப்சிக் திரும்பினார், கோல்பேவுடன் விரிவுரையாளராகப் பணியாற்ற விரும்பினார், ஆனால் ஒரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பெற்ற "ஹேபிலிட்டேசன்" தகுதி அத்தகைய பதவிக்கு போதுமான தகுதி அல்ல. ஒரு பல்கலைக்கழகத்தில் அப்பதவி பெறுவதற்கு ஒரு மனிதநேய உடற்பயிற்சிக் கூடத்தில் பெற்ற தகுதியும் இலத்தீன் மொழித்திறன்களும் அவசியமானதாக இருந்தன. ஆகையால், பெக்மன் மீண்டும் படிக்கத் தொடங்கினார். 1883 ஆம் ஆண்டில் இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளையும், வரலாறு பாடத்திலும் தேவையான தேர்வுகளை முடிக்க முடிந்தது. மீண்டும் லீப்சிக் நிறுவனத்தில் பணிபுரிந்தார். கோல்பே 1884 ஆம் ஆண்டில் இறந்தார். அவருக்குப் பின் அவரது விமர்சகர்களில் ஒருவரான யோகன்னசு விஸ்லிகெனசு அப்பதவிக்கு வந்தார். இது பெக்மனின் தொழில் வாழ்க்கையை அச்சுறுத்தியிருக்கலாம். ஆனால், எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இரு வேதியியலாளர்களும் சகாக்களாகவும் நண்பர்களாகவும் மாறினர்.

ஆல்டிஹைடுகளுக்கும் கீட்டோன்களுக்கும் இடையில் வேறுபாடு அறிய ஏற்கனவே அறியப்பட்ட வினைகளைப் பயன்படுத்த பெக்மன் முயன்றார். பென்சோபீனோனை ஆக்சைமாக மாற்ற ஐதராக்சிலமீனைப் பயன்படுத்தும் வினை இதில் அடங்கியிருந்தது. இந்த ஆக்சைமை பாஸ்பரஸ் பென்டாக்ளோரைடுடன் வினைப்படுத்துவது ஏற்கனவே வால்ச்சால் வகைப்படுத்தப்பட்ட ஒரு பொருளாக மாற்றியது. இந்த வேதிவினை இப்போது பெக்மன் மறுசீரமைப்பு வினை என அழைக்கப்படுகிறது. [4]

1887 ஆம் ஆண்டில் வில்ஹெல்ம் ஆஸ்ட்வால்ட் லீப்சிக் நகருக்குச் சென்றார். அங்கு அவர் ஆஸ்ட்வால்ட்டின் உதவியாளராகப் பணியாற்றிய போது, இயற்பிய வேதியியல் பிரிவில் பெக்மனின் கவனம் குவிந்தது. பெக்மன் பல பொருட்களின் மூலக்கூறு நிறைகளைத் தீர்மானிக்க கொதிநிலை உயர்வு மற்றும் உறைநிலைத் தாழ்வு முறைகளைப் பயன்படுத்தினார். [5] இந்த அளவீடுகளுக்கு வெப்பநிலை வேறுபாடுகளை மிகத் துல்லியமாக நிர்ணயிக்க வேண்டும், முழுமையான மதிப்புகளுக்கு மாறாக, பெக்மன் இப்போது தனது பெயரைக் கொண்டிருக்கும் வேறுபாட்டு வெப்பநிலைமானியைக் கண்டுபிடித்தார் (பெக்மன் வெப்பநிலைமானி). இந்த வேலைக்காக அவர் பிரான்சுவா-மேரி ரவுல்ட்டின் முறைகளை மாற்றினார். மேலும், பெக்மனின் முறை மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்கள் வேதியியல் ஆய்வகங்களில் தரநிலையாக மாறியது. இருப்பினும், இருபதாம் நூற்றாண்டின் முடிவில், இந்த தொகைசார் பண்புகளின் நுட்பங்கள் பெரும்பாலும் மின்னணு கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கியதால் மூலக்கூறு நிறைகளை நிர்ணயிப்பதில் இம்முறைகள் முறியடிக்கப்பட்டன.

மேற்கோள்கள்

தொகு
  1. Rocke, Alan J. (1993). "Group Research in German Chemistry: Kolbe's Marburg and Leipzig Institutes". Osiris 8 (1): 52–79. doi:10.1086/368718. 
  2. Georg Lockmann (1928). "Ernst Beckmann". Berichte der deutschen chemischen Gesellschaft 61 (7): A87 – A130. doi:10.1002/cber.19280610728. 
  3. Oesper, R. E. (1944). "Ernst Beckmann, 1853 – 1923". Journal of Chemical Education 21 (10): 470–475. doi:10.1021/ed021p470. Bibcode: 1944JChEd..21..470O. 
  4. Beckmann, E. (1886) "Zur Kenntniss der Isonitrosoverbindungen" ([Contribution] to our knowledge of isonitroso compounds), Berichte der Deutschen Chemischen Gesellschaft, 19 : 988–993.
  5. See for example:
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்னஸ்ட்_ஓட்டோ_பெக்மன்&oldid=3197543" இலிருந்து மீள்விக்கப்பட்டது