உலங்கு வானூர்தி

(எலிகாப்டர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உலங்கு வானூர்தி (helicopter) அல்லது உலங்கூர்தி[1] என்பது வானூர்தி வகைகளில் ஒன்று. விமானத்திற்கும் உலங்கு வானூர்திக்கும் உள்ள வேறுபாடு எவ்வாறு மேலே எழும்புகிறது என்பதில் உள்ளது. ஓர் விமானம் மேலெழும்பு விசையை தனது இறக்கைகளின் வடிவமைப்பு மற்றும் முன்னோக்கு நகர்வினால் பெறுகிறது. இந்த முன்னோக்கு நகர்வு இறக்கைகளில் பொருத்தப்பட்டுள்ள விசிறிகளின் மூலமோ வளி உந்திகளின் மூலமாகவோ ஏற்படுகிறது. ஓர் உலங்கு வானூர்தியில் தரைக்கிடையாக உள்ள சுழலும் விசிறிகளால் இந்த மேலெழும்பு விசையைப் பெறுகிறது. இவ்விசிறிகள் ரோடர்கள் என்றும் இவ்வானூர்தி ரோடரி விங் வானூர்தி எனவும் அழைக்கப்படுகிறது.

உலங்கு வானூர்தி 1922
HH-43 ஹஸ்கி உலங்கு வானூர்தி

ஓர் விமானம் காற்றில் மிதக்க முன்னோக்கிய நகர்வு தேவை, ஆனால் உலங்கு வானூர்திக்கு தேவையில்லை. இதனால் ஒரே இடத்தில் நின்று மிதக்க முடியும். அவை தங்கள் ரோடர்களை சற்றை சாய்த்து, தனக்கு கீழே உள்ள காற்றை வேண்டும் திசையில் தள்ளி நகர்கின்றன.

டா வின்சியின் "ஏரியல் ஸ்க்ரூ"
உலங்கு வானூர்தியின் இயக்கக் காணொளி

இவ்வானூர்திகளை 1490ஆம் ஆண்டில் இத்தாலிய அறிஞர் லியொனார்டோ டா வின்சி முதலில் கற்பனை செய்தார், ஆனால் பல நூற்றாண்டுகள் கழித்து இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகள் வரை ஒருவரும் வடிவமைக்கவில்லை. பிரெஞ்ச் நாட்டு எதியன் ஓமிசேன் (Etienne Oehmichen) முதலில் பறந்தவராவார்.அவரால் ஏழு நிமிடங்கள் நாற்பது வினாடிகள் நேரமே பறக்க முடிந்தது[2].

உலங்கு வானூர்திகள் வெள்ளம் மற்றும் இயற்கை பேரழிவு நேரங்களில் மிகவும் பயனளிக்கின்றன. சாலைகள் மூலம் அடையமுடியாதபோது சிறைபட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள், மருந்து மற்றும் உடைகள் மேலிருந்து வீச உதவுகிறது. தவிர நோயாளிகளையும் காயமடைந்த மக்களையும் இடம்பெயர்க்கவும் துணைபுரிகிறது. இராணுவ நடமாட்டத்திற்கும் போர்செயல்களுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது.

குறைந்த உயரத்தில் பறப்பதால் இயற்கைசேதங்களை பார்வையிடவும் அரசியல் பணிகளுக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளும் பயன்படுத்துகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலங்கு_வானூர்தி&oldid=3394696" இலிருந்து மீள்விக்கப்பட்டது