எழில்படுக் கலை
எழில்படுக் கலை (Art Deco, அல்லது சிலநேரங்களில் Deco) கட்டிடக்கலை, வடிவமைப்புக் கலையின் ஓர் காண்கலைப் பாணியாகும். இந்தப் பாணி முதலாம் உலகப் போருக்கு சற்றே முன்னதாக பிரான்சு நாட்டில் உருவானது.[1] எழில்படுக் கலை கட்டிடங்கள், அறைகலன்கள், ஆபரணங்கள், மகிழுந்துகள், திரையரங்கங்கள், தொடருந்துகள், கப்பல்கள் போன்றவற்றிலிருந்து நாள்தோறும் புழங்கும் வானொலி, வெற்றிடத் தூய்மிப்பான்கள் வரை எழில்படுத்தும் கலையாகும்.[2] இது நவீனவியப் பாணியுடன் கைவினைத் திறனையும் விலையுயர் பொருட்களையும் இணைத்து உருவாகியுள்ளது. இது ஆடம்பரம், கவர்ச்சி,பகட்டு ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இருந்தது; தற்காலத்தில் சமூக, தொழில்நுட்ப முன்னெடுப்புகளை வெளிப்படுத்துவனவாக உள்ளது. துவக்கத்தில் கியூபிச வடிவங்களின் தாக்கத்துடன் போவிய ஓவியர்களின் வண்ணங்களையும் உள்வாங்கியது.பிரான்சின் பதினாறாம் லூயி, லூயி பிலிப்பின் காலகட்ட அறைகலன் வடிவமைப்புகள், சீன, சப்பானிய, இந்திய, பெர்சிய மரபுக்கலைகளையும் எகிப்து, மாயா கலைவடிவங்களையும் உள்வாங்கிக் கொண்டது. இவ்வகைப் பாணியில் எபனி, தந்தம் போன்ற அரிதான, விலையுயர்ந்த பொருட்களும் மிக நுண்ணிய கைவினையும் பின்னியுள்ளன. 1920களிலும் 1930களிலும் நியூ யார்க் நகரில் கட்டப்பட்ட கிரைஸ்லர் கட்டிடம் போன்ற வானுயர் கட்டிடங்கள் இப்பாணிக்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.
1930களில் பெரும் பொருளியல் வீழ்ச்சியின் போது இதன் வளர்ச்சி தடைபட்டிருந்தது. துருவேறா எஃகு,நெகிழி போன்ற புதுப் பொருட்களின் வரவு தற்கால சீரமைப் பாணிக்கு வழிவகுத்தது; இதில் வளைவுகளும் வழவழவப்பான மெருகேற்றிய பரப்புகளும் முதன்மை பெற்றன.[3] முதன்முதலில் பன்னாட்டளவில் பின்பற்ற பாணி எனக் கருதப்படும் இந்தப் பாணி இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வீழ்ச்சியடையத் தொடங்கியது. நவீனவியம் மற்றும் பன்னாட்டுப் பாணி முதன்மை பெற்றன.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Texier 2012, ப. 128.
- ↑ Hillier 1968, ப. 12.
- ↑ Renaut, Christophe and Lazé, Christophe, Les Styles de l'architecture et du mobilier (2006), Editions Jean-Paul Gisserot, pages 110–116
- ↑ Benton, Benton and Wood & Art Déco (1910–1939) 2010, ப. 13–28.