கிட்சால்குவாடலி

(ஏகாகொழ்கற் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கிட்சால்குவாடலி (/ˌkɛtsɑːlˈkɑːtəl/) (Classical Nahuatl: Quetzalcohuātl [ket͡saɬˈkowaːt͡ɬ]) இடையமெரிக்கப் பண்பாட்டைச் சேர்ந்த ஒரு தெய்வமாகும். நாகவற் மொழியில் கிட்சால்குவாடலில் என்றால் ''இறக்கைக் கட்டிய பாம்பு'' எனப் பொருள்படும்.[1] கிமு முதலாம் நூற்றாண்டளவில் தியாத்திவாகான் என்ற பகுதியில், இத் தெய்வம் வழிபடப்பட்டு வந்துள்ளமைக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.[2] இக் கால கட்டத்தை இடையமெரிக்கப் பண்பாட்டு காலவரிசையின் பிற்கால மூலப்புராதனக் காலத்திற்கும் முற்கால புராதனக் காலப் பகுதிக்கும் (கிமு 400 - கிபி 600) இடைப்பட்டக் காலமாக கொள்கின்றனர். இத் தெய்வ வழிபாடானது இக் கால கட்டத்தில் தோற்றம் பெற்று பிற்காலப் புராதனக் காலப் பகுதி (கிபி 600 - கிபி 900) வரை இடையமரிக்கா முழுவதும் பரவியிருக்கின்றது.[3]

தெளிரியானோ ரெமென்சிஸ் சுருள்களில் வரையப்பட்டுள்ள கிட்சால்குவாடலியின் உருவம்
தெளிரியானோ ரெமென்சிஸ் சுருள்களில் இறக்கை கட்டிய பாம்பின் உருவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கிட்சால்குவாடலியின் உருவம்

புராதனக் காலத்திற்கு பிற்பட்ட காலப் பகுதியில் (கிபி 900 - கிபி 1519) கிட்சால்குவாடலியின் வழிபாடு என்பது சோளுளா என்ற மெக்சிகன் மதத்தின் மையப் பகுதியில் மட்டுமே பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றது. இந்தக் கால கட்டத்திலேயே நாகவா மக்களால், இத் தெய்வத்திற்கு 'கிட்சால்குவாடலி' என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. மாயன் பண்பாட்டுப் பகுதிகளில் இத் தெய்வத்தை குகுள்கன் எனவும், குகுமடழ் எனவும் அழைக்கப்பட்டு வந்திருக்கின்றது. இரண்டு மொழிகளிலும் அதன் பொருள் "இறக்கைக் கட்டிய பாம்பு" என்பது தான்.

கிட்சால்குவாடலி தெய்வத்தின் பூசாரிகளின் முதன்மையான சின்னம் "ஏகாகொழ்கற்" (ehecacozcatl) என அழைக்கப்படுகின்றது, அதாவது "காற்றணிகலன்" என பொருள்படும். குறுக்காக வெட்டப்பட்ட சங்கை கழுத்து மாலையில் தாயத்தாகக் கோர்த்து மதாச்சாரியர்கள் கட்டிக் கொள்வார்கள். இடையமரிக்க பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் போது இத்தகைய தாயத்துக்கள் அடங்கிய மாலைகள் கிடைத்திருக்கின்றன. இத் தாயத்துக்கள் அடங்கிய மாலைகளை அணிவதால் சுழலிக்காற்றுக்கள், கொள்ளிவாய் பிசாசுகள், கடற் சுழலிகள், நீர்ச் சுழலிகள் போன்ற பஞ்சபூதங்களில் ஒன்றான காற்றினால் உண்டாகும் ஆபத்துக்களிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என அழடாக்கியர்கள் நம்பினார்கள். பழஞ்சுருள் குறிப்புகளில் வரையப்பட்டுள்ள கிட்சால்குவாடலி, சோலோட்டி ஆகிய தெய்வங்கள் ஏகாகொழ்கற் மாலைகளை கழுத்தில் அணிந்திருக்கின்றனர்.[2] இத் தெய்வங்களின் கோயில்களில் கத்திகள், ஏகாகொழ்கற் மாலைகளை அணிந்த சிறு தெய்வங்களின் திருவுருகள் அடங்கிய சின்னங்களும் காணப்படுகின்றன.[2]

16-ம் நூற்றாண்டில் ஸ்பானிய படையெடுப்புக்களின் பின்னர் எழுதப்பட்ட பல ஆவணங்களில் கிட்சால்குவாடலியை தாலன் என்ற தொல் நகரத்தை ஆட்சி செய்த சே அகாற்ற தொபீற்றின் என்ற மன்னரோடு ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. ஆனால், இத் தெய்வத்திற்கும் தோல்தக்கை ஆட்சி செய்த மன்னருக்குமான தொடர்புகள் எந்தளவுக்கு நம்பகமானவை என்பதில் சர்ச்சைகள் தொடர்கின்றன.[4] அது மட்டுமின்றி தொடக்கக் கால ஸ்பானிய மதகுருமார்கள் கிட்சால்குவாடலியை ஸ்பானிய ஆக்கிரமிப்பாளரான எர்ணான் கோட்டி என்பவரோடும், விவிலியத்தில் வருகின்ற புனித தோமையாரோடும் ஒப்பிட்டு எழுதியுள்ளனர் என்பது மேலும் பல குழப்பங்களை உண்டாக்குகின்றது.[5]

குறிப்புகள்

தொகு
  1. The Nahuatl nouns compounded into the proper name "Quetzalcoatl" are: quetzalli, signifying principally "plumage", but also used to refer to the bird—resplendent quetzal—renowned for its colourful feathers, and cohuātl "snake".
  2. 2.0 2.1 2.2 "Teotihuacan: Introduction". Project Temple of Quetzalcoatl, Instituto Nacional de Antropología e Historia, Mexico/ ASU. 2001-08-20. Archived from the original on 2010-06-12. பார்க்கப்பட்ட நாள் 2009-05-17.
  3. Ringle et al. 1998
  4. Nicholson 2001, Carrasco 1992, Gillespie 1989, Florescano 2002
  5. Lafaye 1987, Townsend 2003, Martínez 1980, Phelan 1970
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிட்சால்குவாடலி&oldid=3549571" இலிருந்து மீள்விக்கப்பட்டது