ஏ. நல்லசிவன்

ஏ. நல்லசிவன் (22, பெப்ரவரி, 1922 - 20, யூலை, 1997) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய மார்க்சியப் பொதுவுடமைக் கட்சி கட்சியின் சார்பாக மாநிலங்கலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவர் 1981 இல் அக்கட்சியில் மாநிலத் செயலாளராக இருந்தவராவார்.

துவக்க கால வாழ்கை தொகு

ஏ. நல்லசிவன் தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசம் என்ற ஊரில் 22, பெப்ரவரி, 1922 அன்று ஒரு சைவக் குடும்பத்தில் பிறந்தார்.[1] இவரின் பெற்றோர் ஆறுமுகம், ஆதிமூலமீனாட்சி இணையராவார். இவர் தனது துவக்கக்கல்வியை பிரம்மதேசத்திலும், உயர்நிலை பள்ளிக்கல்வியை அம்பாசமுத்திரம் தீர்த்தபதி பள்ளியிலும் பயின்றார். பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவனாகவும், மாநிலத்தில் மூன்றாவது மாணவனாகவும் தேர்வானார். நெல்லை மதிதா இந்துக்கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்தார். தொ. மு. சி. ரகுநாதன் இவரது கல்லூரி கால நண்பராக இருந்தார். விளையாட்டில் பேரார்வம் கொண்டவரான நல்லசிவன் கல்லூரியின் கால்பந்து, கூடைப்பந்து விளையாட்டு குழுக்களில் இணைந்து விளையாடியுள்ளார். கால்பந்து விளையாட்டின் போது இவரது வலதுகை முறிந்தது. இதனால் சிகிச்சைக்காக பல ஊர்களுக்கும் சுற்றி அலைந்தார். இதன் காரணமாக இவரது கல்லூரிப் படிப்பு பாதியில் நின்றது.

அரசியல் வாழ்வு தொகு

இளம் வயதில் தேசிய இயக்கத்திலும், காந்தியச் சிந்தனைகளிலும் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அப்போது நல்லசிவனுக்கு அறிமுகமான செல்வராஜ் என்ற தோழர் அவரை மார்ச்சிய சித்தாந்தத்தின் பக்கம் திருப்பினார். ஜெயபிரகாஷ் நாராயண் எழுதிய சோசலிசம் எதற்காக என்ற புத்தகத்தை அளித்தார். இதன் பிறகு நல்லசிவன் 1940 இல் இந்தியப் பொதுவுடமைக் கட்சியில் உறுப்பினரானார்.[2] அப்போதிருந்தே விக்கிரமசிங்கம் பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தில் இணைந்து பணியாற்றினார்.

1948 இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி தடை செய்யப்பட்டபோது, திருநெல்வேலி மாவட்ட பொதுவுடமைக் கட்சித் தலைவர்கள் மீது நெல்லை சதி வழக்கு தொடரப்பட்டது. அதில் கா. பாலதண்டாயுதம், இரா. நல்லகண்ணு, ப. மாணிக்கம், மாயாண்டி பாரதி, ஏ. நல்லசிவன், கி. ராஜநாராயணன், வாத்தியார் ஜோக்கப் உள்ளிட்ட பலரின் பெயர்கள் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டிருந்தது. இவ்வழக்கில் 17 ஆவது குற்றவாளியாக ஏ. நல்லசிவன் சேர்க்கப்பட்டிருந்தார். தலைமறைவாக நல்லசிவன் இருந்ததால் நல்லசிவனின் தம்பி குமரப்பனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று நல்லசிவன் குறித்து கேட்டு காவல்துறை அடித்துத் துன்புறுத்தியது. பின்னர் குமரப்பன் மனநிலை பாதிப்புக்கு உள்ளானார்.

வகித்த பதவிகள் தொகு

1978 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 1981 ஆம் ஆண்டு மார்சிய பொதுவுடமைக் கட்சியின் மாநிலத் (தமிழ்நாடு) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999 இல் கட்சியில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக ஆனார். 1989 இல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

இறப்பு தொகு

தன் வாழ்வின் இறுதிக் காலத்தில் நடுக்குவாதத்தால் நல்லசிவன் பாதிக்கப்பட்டார். கேரளத்தின், புனலூரில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 1997 யூலை 20 அன்று இறந்தார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தோழர் ஏ.நல்லசிவன்: பின்பற்றத்தக்க வாழ்க்கை..." தீக்கதிர். 2021-யூலை-20. பார்க்கப்பட்ட நாள் 14 சனவரி 2024. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. 2.0 2.1 2.2 "ஏ.நல்லசிவன் நடந்துசென்ற நாடாளுமன்ற உறுப்பினர்". இந்து தமிழ். 2023-யூலை-20. பார்க்கப்பட்ட நாள் 14 சனவரி 2024. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._நல்லசிவன்&oldid=3928276" இலிருந்து மீள்விக்கப்பட்டது