ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின் 15ஆம் திருத்தம்
ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின் பதினைந்தாம் திருத்தம் (Amendment XV) கூட்டரசோ மாநில அரசோ ஓர் குடிமகனுக்கு, அவரது "இனம், நிறம், முந்தைய பணி போன்ற காரணங்களால் அவருக்கு வாக்களிக்கும் உரிமையை மறுப்பதை தடை செய்துள்ளது. இது பெப்ரவரி 3, 1870 அன்று சட்டமாக ஏற்கப்பட்டது; இது மீளமைப்பு சட்டத் திருத்தங்களின் மூன்றாவதும் கடைசியுமான சட்டத் திருத்தமாகும்.
அமெரிக்க உள்நாட்டுப் போரின் இறுதியாண்டுகளில் அரசியலமைப்பு மீளமைப்பு காலம் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான முன்னாள் கருப்பின அடிமைகளின் உரிமைகள் குறித்த சட்டப் பேராயத்தில் பல விவாதங்கள் நடத்தப்பட்டன. 1869இல் பேராயம் அடிமைத்தனத்தை ஒழிக்கவும் அவர்களுக்கு குடியுரிமையும் சட்டத்தின் முன்னர் சமநிலையும் வழங்க திருத்தங்களை மேற்கொண்டது. 1868இல் யுலிசீஸ் கிராண்ட் குடியரசுத் தலைவரான பிறகே பெரும்பாலான குடியரசுக் கட்சியினர் கருப்பின ஆண்களின் வாக்குகளைக் காப்பது தங்கள் கட்சியின் வளர்ச்சிக்கு மிகத்தேவையானது என்பதை உணர்ந்து கொண்டனர். இதைவிடக் கடுமையான அங்கங்களைக் கொண்ட திருத்தங்களை நிராகரித்த காங்கிரசு பெப்ரவரி 26, 1869இல் இன,நிற,பணி குறித்து வாக்குரிமை மறுக்கப்படலாகாது என்ற இத்தீர்மானத்தை முன்மொழிந்தது; சட்ட திருத்தத்தை ஏற்பதற்கு கூட்டரசு, மாநில அரசுகளில் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு மார்ச் 30, 1870இல் இது அரசியலமைப்பின் அங்கமாக ஏற்கப்பட்டது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் இந்த திருத்தத்தை குறுகிய கண்ணோட்டத்தில் நோக்கி தீர்ப்புகள் வழங்கியது. 1890இலிருந்து 1910 வரை தெற்கத்திய மாநிலங்களில் மாநிலச் சட்டப்பேரவைகள் புதிய மாநிலச் சட்டங்கள் இயற்றி கருப்பினரின் வாக்குரிமையை மறுத்தன. கல்வியறிவு தகுதித்தேர்வு, தேர்தல் வரிகள் மூலமாக இந்த மறுத்தளிப்பை நிறைவேற்றின; அதேநேரம் வெள்ளையருக்கு தாத்தா சரத்து மூலம் இவற்றிலிருந்து விலக்களித்தன. வெள்ளையர் மட்டுமே பங்கேற்ற துவக்கநிலை (பிரைமரி) தேர்தல்களும் வன்முறைகளும் கருப்பினர் பங்கேற்பை ஒடுக்கி வந்தன.
இருபதாம் நூற்றாண்டில் உச்ச நீதிமன்றம் பரந்த கண்ணோட்டத்துடன் சிக்கல்களை ஆய்ந்து தாத்தா சரத்துகளை சட்டவிரோதமாக்கியது (1915) ; இதேபோல டெக்சாசு பிரைமரி வழக்கில் (1927–1953) வெள்ளையர் மட்டுமே பங்கேற்ற பிரைமரி தேர்தல்களை நிராகரித்தது. தொடர்ந்து இருப்பத்தி நான்காம் திருத்தத்தில் தேர்தல்களுக்காக வசூலிக்கப்பட்ட தேர்தல்வரி தடை செய்யப்பட்டது; 1966இல் நடந்த வழக்கொன்றில் மாநிலத் தேர்தல்களுக்கு தேர்தல் வரி வசூலிக்கப்படுவதும் சட்டவிரோதமாக்கப்பட்டது. இதனால் தேர்தல்களில் கருப்பின வாக்காளர்களின் பங்களிப்பு கூடியது. இந்த சீர்திருத்தங்களை வலிமைப்படுத்த காங்கிரசில் வாக்குரிமைச் சட்டம், 1965ஐ நிறைவேற்றியது. இதன்படி கூட்டரசு வேற்றுமை காட்டக்கூடிய பகுதிகளில் மேற்பார்வையிடும் அதிகாரம் பெற்றது; கல்வியறிவுத் தகுதி போன்ற வேற்றுமைபடுத்தும் சட்டங்களைத் தடை செய்ததுடன் பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் சட்டத் தீர்வுகளைப் பெறவும் வழிவகை ஏற்படுத்தியது.
இந்தத் திருத்தத்தில் பாலினம் குறித்து குறிப்பிடப்படாமையால் பெண்களுக்கு வாக்குரிமையை மறுப்பதை தடை செய்யவில்லை.
உரை
தொகுபிரிவு 1.
மூலம்:"The right of citizens of the United States to vote shall not be denied or abridged by the United States or by any state on account of race, color, or previous condition of servitude."
தமிழ் ்: "ஐக்கிய அமெரிக்காவின் குடிமகன்களின் வாக்குரிமை ஐக்கிய அமெரிக்காவாலும் (கூட்டரசு) அல்லது எந்த மாநிலத்தாலும் இனம், நிறம் அல்லது முந்தைய பணிநிலை காரணமாக மறுக்கப்படாது."
பிரிவு 2.
மூலம்: "The Congress shall have power to enforce this article by appropriate legislation."[1]
தமிழ் ்: "இந்தச் சட்டக்கூறினை செயற்படுத்தத் தகுந்த சட்டங்களை நிறைவேற்ற பேராயத்திற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Constitution of the United States: Amendments 11-27". The National Archives. பார்க்கப்பட்ட நாள் 4 March 2016.