ஐசக் சிஷி சூ

ஐசக் சிஷி சூ ( Isak Chishi Swu 11 செப்டம்பர் 1929[1] - 2016 சூன் 28 ) என்பவர் இந்திய ஆட்சிப்பகுதியில் உள்ள நாகர்கள் வாழுமிடங்களையும் அடுத்துள்ள மியான்மரில் உள்ள நாகர்கள் வாழுமிடங்களையும் உள்ளடக்கிய "பெரும் நாகாலாந்து" அமைக்கும் நோக்கத்துடன் மா சே துங் கோட்பாடுகளைப் பின்பற்றி துவக்கப்பட்ட, நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில் - ஐசக் முய்வா’ (என்.எஸ்.சி.என். - ஐ.எம்.) அமைப்பு மற்றும் அந்த அமைப்பு நடத்தும் போட்டி அரசாங்கமான ஜி.பி.ஆர்.என். ஆகியவற்றின் தலைவராக இருந்தவர். இவர் சுமி நாகா இனத்தைச் சேர்ந்தவர்.

ஐசக் சிஷி சூ 1950 களில் நாகா தேசிய கவுன்சில் (எம்.என்.சி.) நடத்திய நாகா போராட்டங்களில் பங்கேற்ற தலைமுறையைச் சேர்ந்தவர்களில் ஒருவர் அந்த அமைப்பின் வெளியுறவுச் செயலாளர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். துய்ங்கலேங் முய்வா, எஸ்.எஸ்.கப்லாங்குடன் இணைந்து என்.எஸ்.சி.என். அமைப்பை 1980-ல் உருவாக்கினார். 1975-ல் ‘ஷில்லாங் ஒப்பந்த’த்தின்படி ஆயுதங்களைக் கைவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட என்.என்.சி. ஒப்புக்கொண்ட நிலையில், அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து என்.எஸ்.சி.என். அமைப்பு தொடங்கப்பட்டது. 1988-ல் அந்த அமைப்பு இரண்டாக உடைந்தபோது என்.எஸ்.சி.என்.(ஐ.எம்.) அமைப்பை முய்வாவுடன் இணைந்து ஐசக் சிஷி சூ தொடங்கினார். கப்லாங் தலைமையில் என்.எஸ்.சி.என்.(கே) உருவாக்கப்பட்டது.

ஓராண்டுக்கும் மேலாக உடல்நிலை சரியில்லாமல் படுத்தபடுக்கையாக இருந்த ஐசக் சிஷி சூ இறப்பதற்கு முன்பாக, 2015 ஆகத்து 3-ல், தில்லியில் பிரதமரின் இல்லத்தில், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் முன்னிலையில், என்.எஸ்.சி.என்.(ஐ.எம்.) அமைப்பின் பொதுச் செயலாளர் துய்ங்கலேங் முய்வாவுக்கும் மத்திய அரசின் பிரதிநிதிகளுக்கும் இடையே ‘அமைதி ஒப்பந்தம்’ கையெழுத்தானது.[2] நாகா மக்களின் போராட்டத்தின் பலனை தன் மரணத்துக்கும முன்னர் அவர் பார்க்க விரும்பினார். அவசர அவசரமாகக் கையெழுத்தான அந்த ஒப்பந்தம், ஒப்பந்தத்துக்கான அடிப்படைக் கட்டமைப்புதான் என்று பின்னாளில் விளக்கமளிக்கப்பட்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்துக்கான அடிப்படைக் கட்டமைப்பு மூலம் உறுதியான எந்த நடவடிக்கையும் இதுவரை இந்திய அரசால் எடுக்கப்படவில்லை.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "What Isak Chisi Swu's death means: 'I' of NSCN who trekked to meet Chou; man who saw past, future". தி இந்தியன் எக்பிரஸ். பார்க்கப்பட்ட நாள் 15 சூலை 2016.
  2. 28 சூன் 2018. "நாகாலாந்து தனிநாடு கோரும் விடுதலை இயக்கத் தலைவர் ஐசக் காலமானார்". ஒன் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 14 சூலை 2016.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  3. பிரதீப் ஃபான்ஜவுபம் (6 சூலை 2016). "மறைவு தரும் நிச்சயமின்மை". தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 14 சூலை 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐசக்_சிஷி_சூ&oldid=3576797" இலிருந்து மீள்விக்கப்பட்டது