ஐந்திரம் (இலக்கண நூல்)
ஐந்திரம் என்பது இந்தியா முழுவதும் பேசப்பட்ட தமிழுக்காக இந்திரனால்இயற்றப்பட்ட இலக்கண நூல். [தெளிவுபடுத்துக] ஐந்திர நூலை தொல்காப்பியத்தின் முந்து நூலாகவும், அகத்தியத்தை மூல நூலாகவும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. தொல்காப்பிய நூலுக்குத் தரப்பட்டுள்ள பனம்பாரனாரின் பாயிரம் ஆகும். இதில் 'ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்'[1] என்று பனம்பாரனார் குறிப்பிட்டுள்ளார்.
இறைவன் முருகன் தேவர்களின் சேனாதிபதி. இந்திரனின் மகள் தெய்வானையை மணந்து இந்திரப்பதவியை அடைந்தவர். எனவே, ஐந்திரம் என்னும் நூல் இந்திரனால் செய்யப்பட்டது எனக் கூறப்படுகிறது.[2]
பாணினியத்துக்கு முந்துநூலாகக் கண்டறியப்பட்டுள்ள வடமொழி இலக்கண நூல்கள் 13. அதில், ஐந்திர இலக்கணத்தை தன்னுடைய முந்து நூல்களில் ஒன்றாக பாணினி குறிப்பிடுகிறார். ஆனால், ஐந்திரம் சமஸ்கிரத இலக்கண நூலான பாணினியின் அஷ்டத்யாயுடன் பொருந்தவில்லை என்றும், பாலி, பிராகிரத, திபெத்திய இலக்கணங்களோடு பொருந்துகிறது என்றும், முக்கியமாக அதிக அளவில் தொல்காப்பியத்தொடு பொருந்துகிறது எனவும் மொழியியல் அறிஞரும், மதராஸ் மாகணத்தின் ஆங்கிலேய அதிகாரியுமான பர்னல், தனது ஆய்வு நூலான 'On the Aindra School of Sanskrit Grammarians'[3] என்கிற நூலில் குறிப்பிடுகிறார். அதோடு, ஐந்திரத்தில் குறிப்பிடபட்டிருக்கும் பிரதமை, துவதியை போன்ற சந்திர நாட்காட்டி தினங்களை குறிக்கும் பெயர்களை காரணங்கள் கூறாமல் பாணினி பயன்படுத்தி இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
பாணினியின் காலம் கி.மு. எட்டாம் நூற்றாண்டு என்று கணிக்கப்பட்டாலும், கி.மு. நான்காம் நூற்றாண்டு என்று பலரும் கூறிவருகின்றனர். இந்தப் பாணினிக்கு முந்துநூலாக இருந்த 13 நூல்களில் முதலாவதாகக் கருதப்படும் ஐந்திரம் மிகப் பழமையானது என்பது தெளிவு. தொல்காப்பியர் காலத்தில் பாணினியம் இல்லை. ஐந்திரம் என்னும் நூல்தான் இருந்தது. பனம்பாரனாரின் பாயிரத்தில் உள்ளபடி தொல்காப்பியர் 'முந்துநூல்' கண்டவர். அதாவது அகத்தியத்தில் ஆழங்கால் பட்டவர். அத்துடன் ஐந்திர இலக்கண அறிவும் நிரம்பியவர். எனவே ஐந்திரம் என்னும் நூலும், தொல்காப்பியமும் சற்றேறக் குறைய சமகாலத்தவை எனக் கொள்ளத் தக்கவை. (கி.மு. எட்டாம் நூற்றாண்டு)
மாற்றுக்கருத்துகள்
தொகுகணபதி ஸ்தபதி இந்நூலை தொகுத்து வெளியிட்டுள்ளார். ஆனால் அதன் பெயர் 'ஐந்திறம்' என்றும், அது மயனால் இயற்றப்பட்டது என்றும் குறிப்பிட்டுருக்கிறார். பர்னல் அவரது ஆய்வு நூலில் சந்திர நாட்காட்டியின் நாள்களை ஐந்திரம் குறிப்பிடுவதாக குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் இரண்டு நூல்களும் வேறு நூல்கள் என்பது புலனாகிறது. இந்திரன் பெயரை கூறிய திருவள்ளுவரும், ஐந்திரம் இந்திரனால் எழுதப்பட்டது எனக் கூறவில்லை. சிலப்பதிகாரத்தில் குறிப்பிடபட்டிருக்கும் (கி.பி முதல் நூற்றாண்டு) "விண்ணவர் கோமான் விழுநூல்" என்னும் வரி இந்திரனை குறிப்பதாக தவறாக உரை எழுதப்பட்டிருக்கிறது, 'விண்ணவர் கோமான்' என்னும் வரி திருமாலை குறிக்கும் வரி.[4] விண்ணவனான திருமால், அவரைத் தொழும் வைணவரின் தலைவன் ஆவார். திருமாலின் கோயில் விண்ணகரம் எனப்படும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ மல்குநீர் வரைப்பின் ஐந்திர நிறைந்த
தொல்காப்பியன்எனத் தன்பெயர் தோற்றி
::::::::: - தொல்காப்பியப்பாயிரம் - ↑ கே. கே பிள்ளை (2000). தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். p. 95.
இந்திரனால் செய்யப்பட்ட நூல் ஐந்திரம் என்னும் பெயர் ஏற்றது வடமொழி வழக்கு
- ↑ "On the Aindra School of Sanskrit Grammarians" (PDF).
- ↑ சிலப்பதிகாலம், காடுகாண் காதை, அடி 99