ஒட்டியாணம்

தென்னிந்தியப் பெண்கள் இடையில் அணியும் பொன்னாலான பட்டை
(ஒட்டியானம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஒட்டியாணம் (Vaddanam) என்பது பெண்கள் இடையில்/இடுப்பில் அணியும் ஒரு ஆபரணம். பொதுவாக, திருமணம் போன்ற விழாக்களின் போது அணியப்படுகிறது. அத்துடன், பரத நாட்டியம் முதலான மரபுவழி நடனங்களுக்கான உடையலங்காரத்திலும் ஒட்டியாணம் இடம்பெறுவதோடு, வரலாற்று நாடகங்கள், திரைப்படங்கள் போன்றவற்றில் முற்காலக் கதை மாந்தர்களின் அணி வகைகளிலும் ஒட்டியாணம் இடம் பெறுவதைக் காண முடியும். இந்த அணியின் பழங்காலப் பெயர் காஞ்சி

ஒரு தெலுங்கு மணமகள் திருமணத்தின்போது ஒட்டியாணத்தையும், ஆரத்தையும் அணிந்துள்ளார்
ஒட்டியாணம்

ஒட்டியாணம் பெரும்பாலும் தங்கத்தில் செய்யப்படுகிறது. தங்க முலாம் பூசிய ஒட்டியாணங்கள் விலைக்கும், வாடகைக்கும் கிடைக்கின்றன. சில ஒட்டியாணங்கள் எளிமையானங்கள் வடிவமைப்புக் கொண்டவையாக இருக்கும் அதே வேளை, நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்ட ஒட்டியாணங்களும் உள்ளன. வேலைப்பாடுகளைப் பொறுத்து ஒட்டியாணங்களின் மதிப்பும் வேறுபடும். தனி உலோகங்களால் மட்டுமன்றி கற்கள் பதிக்கப்பட்ட ஒட்டியாணங்களும் செய்யப்படுகின்றன.

பெயர்

தொகு
 
இன்னொரு வடிவமைப்பிலான ஒட்டியாணம்

ஒட்டியாணம் என்பது தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்படும் மாதர் இடையணியுள் ஒன்று என்று பொருள்தருகிறது தமிழ் லெக்சிக்கன். அத்துடன், யோகிகள் தியானத்தில் இருக்கும்போது மடிக்கப்பட்டிருக்கும் கால்களை இடுப்போடு சேர்த்துக் கட்டிக்கொள்வதற்குப் பயன்படும் ஒரு இடுப்புப் பட்டி அல்லது "யோகப்பட்டி" என்ற பொருளும் தரப்பட்டுள்ளது. முற்காலத் தமிழகத்தில் ஒட்டியாணம் அல்லது ஒட்டியாணம் போன்ற இடுப்பில் அணியும் அணிவகைகளைப் பற்றிய தகவல்கள் தமிழ் இலக்கியங்களிலே காணப்படுகின்றன. மேகலை, மேகலாபாரம், கலாபம், கலை, தொடலை, பட்டிகை, படுகால், ஏணிப்படுகால், ஏணிப்பந்தம், விரிசிகை போன்ற பெயர்களில் இவ்வணிகள் அவற்றில் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் கலை என்பது ஏழு இழைகளால் ஆன ஒரு இடை அணி என்றும், கலாபம் பதினாறு இழைகளால் ஆனது என்றும் தெரிகிறது. இவ்வாறே மேகலை என்பது ஏழு அல்லது எட்டு இழைகளைக் கொண்டது எனவும், தொடலை என்பது மணி இழைகளால் தொடுக்கப்பட்டது என்றும் பட்டிகை தங்கம் அல்லது வெள்ளியால் ஆன இடை அணி எனவும் தமிழ் லெக்சிக்கன் பொருள் தருகிறது. சிலப்பதிகாரத்தில் முப்பத்திரண்டு இழைகளுடன் கூடியதாகச் சொல்லப்படும் இடையணி விரிசிகை எனப்படும் எனச் சிலப்பதிகார உரையாசிரியர் கூறுகிறார்.

தமிழில் உள்ள ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையின் பெயர், மணிகளால் ஆன இடை அணியின் பெயரிலிருந்தே பெறப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அணியும் முறை

தொகு

ஒட்டியாணம் பொதுவாக உடைக்கு வெளியிலேயே அணியப்படுகின்றது. எனினும் பண்டைத் தமிழர்கள் இடையணிகளை உடைக்குள்ளும் அணிந்ததாகத் தெரிகிறது. இத்தகைய இடையணிகள் நுண்ணிய உடையினூடாகத் தெரிவது பற்றியும் இலக்கியங்கள் கூறுகின்றன. இடையணிகளை ஆடைகளின் மேல் அணிந்து கொள்வது பற்றிய தகவல்களையும் இலக்கியங்கள் தருகின்றன[1].

வரலாறு

தொகு

வட இந்தியா

தொகு
 
வட இந்தியாவில், பர்குத் என்னும் இடத்தில் உள்ள கிமு இரண்டாம் நூற்றாண்டுச் சிற்பத்தில் இடம்பெற்றுள்ள இடையணி.

கிமு 4 ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி தொடக்கம் வரையிலான காலப் பகுதிகளைச் சேர்ந்த சிற்பங்கள் இந்தியாவில் ஒட்டியாணங்களையொத்த இடையணிகள் புழக்கத்தில் இருந்ததைக் காட்டுகின்றன. இவ்வணிகள் கோர்க்கப்பட்ட மணிகளாலான பல இழைகளினால் ஆக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. தொடக்கத்தில் இம் மணிகள் கக்சா எனப்படும் தாவரத்தின் செந்நிறமான விதைகளைக் கொண்டு செய்யப்பட்டன. பிற்காலத்தில் வெள்ளி, தங்கம் முதலிய விலையுயர்ந்த உலோகங்கள் பயன்பட்டன. நடனமாடும் பெண்கள் இவ்விடை அணிகளில் வெள்ளி, தங்கச் சங்கிலிகளில் கோர்க்கப்பட்ட சிறிய ஒலியெழுப்பும் மணிகளையும் தொங்கவிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது[2].

வட இந்தியாவில், பர்குத் என்னும் இடத்தில் உள்ள கிமு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இயக்கி ஒருத்தியின் சிற்பத்தில் இடம்பெற்றுள்ள இடையணி, மணிகள் கோர்க்கப்பட்ட பல இழைகள் அடுக்காக அமைந்துள்ளதைக் காட்டுகிறது. இச் சிற்பத்தின் படத்தையும் அதன் அருகில் பெருப்பிக்கப்பட்ட இடையணியின் படத்தையும் காணலாம். பர்குத் என்னும் இடத்தில் உள்ள இன்னொரு சிற்பத்தில் காணப்படும் ஏழு இழைகளிலாலான இடையணியின் அமைப்புப் பற்றி அல்காசி தனது நூலில் விளக்கியுள்ளார்[3]. இதன்படி, இரண்டு கரைகளிலும் உள்ள இழைகள் சதுர வடிவான மணிகள் கோர்க்கப்பட்டவையாக இருக்கின்றன. இவ்விரு இழைகளுக்கும் இடையே, உருண்டையான மணிகளைக் கொண்ட இழைகளும், நீள்வட்ட வடிவம் கொண்ட மணிகளைக் கொண்ட இழைகளும் இருக்கின்றன.

 
ஒரிசா, புபனேசுவர் பரசுராமேசுவரர் கோயிலில் உள்ள ஒரு சிலையில் இடையணி.

இக்காலத்தின் பின்னர் கிபி 250 வரையிலான காலப்பகுதியில், பல இழைகளைக் கொண்ட பல்வேறு வகையான இடையணிகள் பயன் பட்டுள்ளன. இவற்றுள் ஒலியெழுப்பும் சிறிய மணிகள் பொருத்தப்பட்ட காஞ்சி எனப்படும் இடையணிகளும்; இணைக்கப்பட்ட சங்கிலிகளால் ஆன அல்லது, முத்துக்கள் கோர்க்கப்பட்ட அல்லது விலையுயர்ந்த கற்களினால் ஆன இடையணிகளும் பயன்பட்டதாகத் தெரிகிறது. அவை அழகைக் கொடுத்தது மட்டுமன்றிக் கீழாடை வழுவாமல் பிடித்துக் கொள்வதற்கும் பயன்பட்டன[4].

பிற்பட்ட காலத்துச் சிற்பங்களிலும் ஏறத்தாழ இதே வகையான இடையணிகள் காணப்படுகின்றன. ஒரிசாவின் புபனேசுவரில் அமைந்துள்ள கிபி ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பரசுராமேசுவரர் கோயிலில் உள்ள பெண்சிற்பம் ஒன்றில் நான்கு இழைகளால் ஆன இடையணி காணப்படுகின்றது. இதன் கீழ் இழையில் குஞ்சம் அல்லது சிறிய மணிகள் போன்ற அமைப்புக்கள் காணப்படுகின்றன. இச் சிற்பத்தினதும், பெருப்பிக்கப்பட்ட இடையணியினதும் படத்தை அருகே காணலாம்.

தென்னிந்தியா

தொகு
 
கர்நாடகாவில் உள்ள அப்சரஸ் சிலையொன்றில் காணப்படும் இடையணி.

தமிழ் நாட்டில் சங்ககாலத்திலேயே ஒட்டியாணம் போன்ற இடையணிகள் இருந்தமைக்கான சான்றுகளும் பெண்கள் பரவலாக இதனை அணிந்தனர் என்பதும் சங்க இலக்கியங்களில் இருந்து தெரிய வருகிறது[5]. சங்ககாலத்துக்குப் பின்னர் எழுந்த சிலப்பதிகாரத்திலும் கண்ணகி, மாதவி முதலியோர் மேகலை அணிந்தது பற்றிய குறிப்புக்கள் காணக்கிடைக்கின்றன. கோவலன் பிரிந்து சென்றதனால் ஏற்பட்ட துயர் காரணமாக மெலிவுற்றதனால், அவள் ஆடையின் மீது அணிந்திருந்த மேகலை நீங்கியது என்கிறது சிலப்பதிகாரம்[6]

பொதுவாக வசதி படைத்தோரும், உயர்குலப் பெண்களும் தங்கம், வெள்ளி, முத்து, பவளம், இரத்தினங்கள் முதலிய விலையுயர்ந்த பொருட்களினால் ஆன இடையணிகளை அணிந்தனர் எனலாம்.

தென்னிந்தியாவில் அணியப்பட்ட இடையணிகள் பற்றிய தகவல்களைத் தென்னிந்தியச் சிற்பங்களும் தருகின்றன. இச் சிற்பங்கள் சிலவற்றில் மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய இடையணிகள் காணப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் உள்ள 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அப்சரசின் சிற்பம் ஒன்று ஒலியெழுப்பும் மணிகள் பொருத்தப்பட்ட நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய இடையணியுடன் கூடியதாகக் காணப்படுகிறது. இச் சிற்பத்தை அருகில் உள்ள படம் காட்டுகிறது.

குறிப்புகள்

தொகு
  1. பகவதி, கு., 2003, பக். 115, 116
  2. Alkazi, Roshen, 1996, பக். 7
  3. Alkazi, Roshen, 1996, பக். 20
  4. Alkazi, Roshen, 1996, பக். 33
  5. புறநானூறு, 339.
  6. சிலப்பதிகாரம், புகார்க் காண்டம், காதை-4, பாடல்-50

உசாத்துணைகள்

தொகு
  • பகவதி, கு., தமிழர் ஆடைகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2003.
  • Alkazi, Roshen., Ancient Indian Costume, National Book Trust, India, New Delhi, 1996.
  • புலியூர்க் கேசிகன், புறநானூறு தெளிவுரை, பாரி நிலையம், சென்னை. 2004 (முதற் பதிப்பு 1958)
  • ஸ்ரீசந்திரன், ஜெ., சிலப்பதிகாரம் மூலமும் தெளிவுரையும், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை. 2001.

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒட்டியாணம்&oldid=3648863" இலிருந்து மீள்விக்கப்பட்டது