ஒத்தமை நற்செய்தி நூல்கள்

(ஒத்தமை நற்செய்திகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இயேசு பற்றிய வரலாற்றை வழங்குவது ஒரு நூல் மட்டுமல்ல, நான்கு நூல்கள் என்னும்போது ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. அதாவது, அந்த நான்கு நூல்களும் ஒரே வரலாற்றை நான்கு வேறுபட்ட விதங்களில் எடுத்துக் கூறுகின்றனவா அல்லது ஒரே விதத்தில்தான் கூறுகின்றனவா? ஒரே விதத்தில்தான் கூறுகின்றன என்றால் நான்கு நூல்கள் தேவையா? வேறுபட்ட விதத்தில் கூறுகின்றன என்றால் அந்த வேறுபாடுகளைத் தம்முள் இசைவிப்பது எப்படி?

வரைபடம்: மாற்கு, மத்தேயு, லூக்கா நூல்களுக்கிடையே நிலவும் பிணைப்பு விளக்கம்

புதிய ஏற்பாட்டில் காணப்படும் முதல் நான்கு நூல்களாகிய நற்செய்தி நூல்கள் முறையே மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்பவர்களால் வடிவமைக்கப்பட்டன என்பது மரபுவழி வரும் செய்தி. இந்த நான்கு நூல்களும்தான் இயேசுவின் வாழ்க்கை, போதனை, செயல்பாடு, துன்பங்கள், சாவு ஆகியவை பற்றியும் அவர் சாவினின்று உயிர்பெற்றெழுந்தது பற்றியும் நமக்குத் தகவல் தருகின்ற அடிப்படை ஆதாரங்கள்.

ஒத்தமை நற்செய்திகள்: பெயர்க் காரணம்

தொகு

நான்கு நற்செய்திகளில் முதல் மூன்றும் தமக்குள் மிகப் பெரும் அளவில் ஒத்திருப்பதால், தமக்குள் ஒரு பொதுப்பார்வை கொண்டிருப்பதால் ஒத்தமை நற்செய்திகள் (Synoptic Gospels)[1] என்று அழைக்கப்படுகின்றன. நான்காவதாகிய யோவான் நற்செய்தி நூல் முதல் மூன்றிலுமிருந்து பெரிதும் வேறுபட்டது. இந்நூலில் இயேசு வேறுபட்ட விதத்தில் சித்தரிக்கப்படுகிறார். இந்நூலின் இறையியல் பார்வையும் வேறுபட்டது; இதன் இலக்கிய அமைப்பிலும் வித்தியாசம் உள்ளது.

நான்கு நற்செய்தி நூல்களுமே ஒரே இயேசுவைப் பற்றியே பேசுகின்றன என்றாலும் ஒவ்வொரு நூலிலும் இயேசு பற்றிய ஒரு வித்தியாசமான பார்வை துலங்குகிறது [2].

ஒத்தமை நற்செய்திகள் ஒன்றுபடும் இடங்கள்

தொகு

விவிலிய அறிஞர் கருத்துப்படி, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியோர் பெயரால் வழங்கும் முதல் மூன்று நற்செய்தி நூல்களும் இயேசு பற்றிய ஒரு பொதுப் பார்வை கொண்டிருப்பதால் ஒத்தமை நற்செய்திகள் என வழங்கப்படுகின்றன; நான்காம் நற்செய்தியாகிய யோவான் பெரிதும் மாறுபட்டது.

ஒத்தமை நற்செய்திகள் இயேசுவின் பொதுப்பணி பற்றியும் அவருடைய துன்பங்கள் பற்றியும் தருகின்ற செய்திகளுக்கிடையே மிகப் பெரும் ஒற்றுமை உள்ளது. இவ்வாறு ஒன்றுபடும் முக்கிய இடங்கள் கீழ்வருவன:

  • இயேசு திருமுழுக்கு யோவானோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார்.
  • இயேசு சீடர்களைத் திரட்டி அவர்களுக்குப் போதனை வழங்கினார்.
  • இயேசு கலிலேயாவில் மக்களுக்குப் போதித்து அவர்களுக்குக் குணமளித்து, பொதுப்பணி புரிந்தார்.
  • இயேசு எருசலேமுக்குச் சென்றார்.
  • இயேசு எருசலேமில் பாடுகள் அனுபவித்தார் (இயேசு பிடிபடல், நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்படல், துன்பம் அனுபவித்தல், இறத்தல்.
  • இயேசு கல்லறையில் அடக்கப்பட்ட பின் கல்லறை வெறுமையாக இருந்தது என சீடர் கண்டுபிடித்தனர்.

மேற்கூறிய செய்திகளையெல்லாம் வடிவமைத்துத் தருவதில் ஒத்தமை நற்செய்திகள் பெரிதும் ஒன்றுபட்டிருக்கின்றன.

  • இயேசு ஒரு போதகராகவும், குணமளிப்பவராகவும் செயல்பட்டார் என ஒத்தமை நற்செய்திகள் இயேசுவைச் சித்தரிக்கின்றன.
  • இயேசுவுக்கு வழங்கப்படும் சிறப்புப் பெயர்களும் ஒத்திருக்கின்றன. அவை: தாவீதின் மகன், மெசியா, கடவுளின் மகன், ஆண்டவர் முதலியவை ஆகும்.
  • ஒத்தமை நற்செய்திகள் இயேசுவின் வரலாற்றைச் சிறுசிறு கூற்றுத்தொடர்களாக வழங்குகின்றன. அங்கே இயேசு புரிந்த புதுமைகள் உண்டு; எதிரிகளோடு நிகழ்த்திய வாதங்கள் உண்டு; உவமைகள் உண்டு. இயேசுவின் கூற்றுத் தொகுப்புகள் பகுதியில் அவர் உரைத்த பழமொழிகள், போற்றுதல் தூற்றுதல் உரைகள், நானே எனத்தொடங்கும் உரைகள் ("I" Sayings) உண்டு. சில வேளைகளில் ஒத்தமை நற்செய்திகள் எவ்வளவு ஒத்திருக்கின்றன என்றால், அந்த ஒற்றுமைகள் எதேச்சையாக ஏற்பட்டன என்று கூறிட முடியாது. ஏதோ விதங்களில் அவை எழுத்துவடிவம் பெற்ற பிறகு ஒன்றோடொன்று ஒத்திருக்கும் விதத்தில் அமைக்கப்பட்டன என்பதில் ஐயத்திற்கு இடமில்லை.

ஒத்தமை நற்செய்திகளின் ஒற்றுமை வேற்றுமை பற்றிய பிரச்சினை

தொகு

ஆக, ஒத்தமை நற்செய்திகள் பற்றி ஒரு பிரச்சினை உள்ளது. அதாவது, இம்மூன்று நூல்களுக்கும் இடையே காணப்படுகின்ற ஒற்றுமை வேற்றுமைகளை எப்படி விளக்குவது?

நிகழ்ச்சித் தொடர்கள் மற்றும் இயேசு வழங்கிய சில போதனைப் பகுதிகள் ஒத்தமை நற்செய்திகள் மூன்றிலும் உள்ளன; சில, இரண்டில் மட்டும் உள்ளன. வேறு சில, ஒன்றில் தவிர மற்ற இரண்டிலும் காணப்படவில்லை. இதற்கு எப்படி விளக்கம் அளிப்பது?

விவிலிய அறிஞர் பல விளக்கங்கள் அளித்துள்ளனர். என்றாலும், இன்று பெரும்பான்மையோர் வழங்கும் விளக்கம் இங்கே தரப்படுகிறது. இந்த அறிஞர்கள் தரும் விளக்கம் இரு ஆதார விளக்கம் (Two Source Theory) என அறியப்படுகிறது.

"இரு ஆதார விளக்கம்"

தொகு

இந்த விளக்கத்தின்படி, முதலில் தோன்றிய நற்செய்தி நூல் மாற்கு ஆகும்; மாற்கு நற்செய்தியை மத்தேயுவும் லூக்காவும் தனித்தனியே பயன்படுத்தினர்; அதோடு இவ்விருவரும் இயேசுவின் கூற்றுக்கள் அடங்கிய இன்னொரு ஏட்டையும் பயன்படுத்தினர். இந்த ஊக ஏடுதான் (hypothetical document) “Q” என அழைக்கப்படுகிறது. “Q” என்பது Quelle என்னும் செருமானியச் சொல்லின் முதல் எழுத்து; இதற்கு ஆங்கிலத்தில் Source, அதாவது மூலம், ஆதாரம் என்று பொருள். எனவே, மத்தேயுவும் லூக்காவும் பயன்படுத்திய இரு மூல ஆதாரங்கள் மாற்குவும் “Q”வும் ஆகும்.

மாற்கு எழுதப்பட்டது கி.பி. சுமார் 70ஆம் ஆண்டளவில். “Q” பெரும்பாலும் கிரேக்க மொழியில் கி.பி. 50 அளவில் தோன்றியிருக்கக் கூடும். இயேசு பேசிய அரமேய மொழியில் அமைந்த முன்னைய ஒரு மரபு “Q”வில் இருக்கக் கூடும். இந்த “Q” என்னும் ஊக ஏட்டின் அமைப்பு வடிவம் பழைய ஏற்பாட்டு நூல்களாகிய நீதிமொழிகள், சீராக்கின் ஞானம் ஆகியவைபோல் இருந்திருக்க வேண்டும். இயேசுவின் இளமைப் பருவப் பகுதியோ, பாடுகளின் பகுதியோ அதில் இருந்திருக்காது.

எனவே, இரு ஆதார விளக்கத்தின்படி, கி.பி. சுமார் 85-90 அளவில் மத்தேயுவும் லூக்காவும் தனித்தனியே மாற்கு நற்செய்தியை விரித்து எழுதினர். அதற்கு “Q” ஊக ஏட்டிலிருந்தும், வேறு தமக்குக் கிடைத்த மரபிலிருந்தும் பெற்ற செய்திகளைப் பயன்படுத்தினர். மத்தேயு பயன்படுத்திய தனி மரபு “M” என்றும், லூக்கா பயன்படுத்திய தனி மரபு “L” என்றும் அழைக்கப்படுகின்றன.

வேறு விளக்கங்கள்

தொகு

மேலே தரப்பட்ட இரு ஆதார விளக்கம் பெரும்பான்மை விவிலிய அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை என்றாலும், வேறு பல கொள்கைகளும் வரலாற்றில் வழங்கப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, தூய அகுஸ்தின் (கி.பி. 354-430) கருத்துப்படி, மத்தேயு முதலில் எழுதப்பட்டது; அதை முதல்நூலாகக் கொண்டு மாற்கு ஓரளவு வெற்றிகரமாக அதைப் பார்த்து எழுதினார்; லூக்கா மத்தேயுவையும் மாற்குவையும் பயன்படுத்தித் தம் நூலை உருவாக்கினார். தூய அகுஸ்தின் அளித்த விளக்கத்தை ஒட்டி க்ரீஸ்பாக் (Griesbach) என்பவர் 18ஆம் நூற்றாண்டில் ஒரு விளக்கம் அளித்தார். அதாவது, மத்தேயு முதலில் எழுதப்பட்டது; அதைப் பயன்படுத்தி லூக்கா எழுதினார்; இருவரது நூல்களையும் சுருக்கி மாற்கு எழுதினார்.

வேறு பல விளக்கங்களும் வரலாற்றில் தரப்பட்டுள்ளன. என்றாலும் இரு ஆதார விளக்கம் பெரும்பான்மையான விவிலிய அறிஞரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விளக்கம் ஆகும்.

ஒத்தமை நற்செய்திகளில் காணப்படும் வேறுபாடுகள் என்ன?

தொகு

மேலே கூறியதுபோல, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நூல்களையும் உள்ளடக்கிய ஒத்தமை நற்செய்திகளுக்குள்ளும் இரு பெரும் ஒற்றுமைகள் உள்ளன. ஒன்று, அவை பொது வடிவமைப்பில் ஒத்திருக்கின்றன; இரண்டு, அவை இயேசு பற்றி ஒரு பொதுவான சித்தரிப்பை வழங்குகின்றன.

இருப்பினும் இம்மூன்று நூல்களுக்குமிடையே பல வேறுபாடுகளும் உள்ளன. முதல் வேறுபாடு, அவை யாரைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டன என்பதைக் குறித்தது. மத்தேயு யூத-கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்டது; மாற்குவும் லூக்காவும் பிற இன-கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்டன.

அடுத்த வேறுபாடு நற்செய்தி நூல்களைப் பெற்றுக்கொண்ட சமூகங்கள் எங்கே இருந்தன என்பதைக் குறித்தது. மத்தேயுவின் சமூகம் சிரியா நாட்டு அந்தியோக்கியாவிலும், மாற்குவின் சமூகம் உரோமை நகரிலும், லூக்காவின் சமூகம் கிரேக்க நாட்டிலும் இருந்தன. இச்சமூகங்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில் வாழ்ந்துவந்தன. மத்தேயுவின் சமூகம் ஒரே சமயத்தில் யூதராகவும் கிறிஸ்தவராகவும் இருப்பது எப்படி என்னும் சிக்கலுக்கு வழிதேடிக் கொண்டிருந்தது. மாற்குவின் சமூகம் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருந்தது; லூக்காவின் சமூகம் ஏழை-செல்வர் வேறுபாட்டை விளக்கிடத் திணறிக்கொண்டிருந்தது.

இது மட்டுமல்ல, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியோர் இயேசுவை வெவ்வேறு கண்ணோட்டங்களில் பார்க்கின்றனர். மத்தேயுவில் இயேசு திருநூலில் எழுதப்பட்டவற்றை நிறைவேற்றுபவராகக் காட்டப்படுகிறார். மாற்கு இயேசுவைத் துன்புறும் மானிட மகனாகக் காட்டுகிறார். லூக்கா நற்செய்தியில் இயேசு ஓர் இறைவாக்கினராக, ஒரு முன்மாதிரியாக விளக்கப்படுகிறார்.

அதுபோலவே, இயேசுவின் சீடர்களைச் சித்தரிப்பதிலும் வேறுபாடுகள் உள்ளன. மத்தேயு இயேசுவின் சீடர்களை நம்பிக்கை குன்றியவர்களாகக் காண்கிறார். மாற்கு சீடர்களைக் கோழைகளாக, இயேசுவின் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளாதவர்களாகக் காட்டுகிறார். லூக்கா நற்செய்தியில் சீடர்கள் இயேசுவுக்கும் திருச்சபைக்கும் இடையே தொடர்புப் பாலம் போல் அமைவதாகக் காட்டப்படுகிறார்கள்.

திருச்சபைக்குள் நிகழும் கிறிஸ்தவ வாழ்வைப் பொறுத்தமட்டில், மத்தேயு கிறிஸ்துவின் தொடர் பிரசன்னத்தால் திருச்சபை கடவுளின் மக்களாகத் திகழும் எனக் காட்டுகிறார். மாற்கு கிறிஸ்தவ வாழ்வைச் சிலுவை சுமக்கும் வாழ்வாகப் பார்க்கிறார். லூக்காவின் பார்வையில் திருச்சபை தூய ஆவியால் வழிநடத்தப்படும் குழுவாகத் திகழ்கிறது.

ஆதாரங்கள்

தொகு
  1. ஒத்தமை நற்செய்திகள்
  2. ஒத்தமை நற்செய்திகள் - கத்தோலிக்க கலைக்களஞ்சியம்