ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2015 ஆம் ஆண்டு சனவரி 29 முதல் பிப்ரவரி 1 வரை மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்றது. கோலாலம்பூரில் உள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை ஆகியவை கூட்டாக ஒழுங்கு செய்திருந்தன. இம்மாநாட்டுக்கான கருப்பொருள் "உலகமயக் காலகட்டத்தில் தமிழாய்வுக்கு வளம் சேர்த்தல்" என்பதாகும்.

குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தமிழாராய்ச்சி மாநாடுகளை நடத்தத் திட்டமிட்டிருந்தபோதும், தமிழ்நாடு, தஞ்சாவூரில் 1995 ஆம் ஆண்டு இடம்பெற்ற எட்டாவது மாநாட்டுக்குப் பின்னர் 20 ஆண்டுகள் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடைபெறவில்லை. இவ்வளவு நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இடம் பெற்ற மாநாடு என்ற வகையிலும் இது முக்கியத்துவம் பெற்றது.

தொடக்கவிழா தொகு

 
ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தொடக்க விழா.

மாநாடு தொடர்பான நிகழ்வுகள் 29 ஆம் தேதி தொடங்கிவிட்டாலும், மாநாடு 30 ஆம் திகதி காலையிலேயே முறைப்படியான தொடக்க விழா இடம்பெற்றது. மலேசியப் பிரதமர் கலந்துகொண்டு மாநாட்டைத் தொடக்கி வைத்தார். மலாயாப் பல்கலைக்கழகத்தின் திவான் துங்கு மண்டபத்தில் இடம்பெற்ற இவ்விழாவில், மலேசியப் பிரதமருடன், சிங்கப்பூரின் சட்டத்துக்கும், கல்விக்குமான மூத்த அமைச்சர் இந்திராணி ராஜா, மலேசியாவின் இரண்டு துணை அமைச்சர்கள், தமிழ்நாடு அரசின் பிரதிநிதி, மலாயாப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வுகள் தொகு

மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, சனவரி 30 ஆம் தேதி பிற்பகலிலும், சனவரி 31, பெப்ரவரி 1 ஆகிய தேதிகளில் முற்பகல் பிற்பகல் இரு வேளைகளிலும், 2 ஆம் தேதி முற்பகலிலும் ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இந்த அமர்வுகள் ஒரே நேரத்தில் 15 வெவ்வேறு மண்டபங்களில் ஒரே நேரத்தில் இடம் பெற்றன.[1] மொத்தமாக 600க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இறுதி நாள் தவிர்ந்த ஏனைய நாட்களில் இரவு 8.30 தொடக்கம் 10.00 வரை கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

பேராளர்கள் தொகு

 
பதிவு செய்வதற்காக அலுவலகத்தின் முன் காத்திருக்கும் பேராளர்கள்.

இம்மாநாட்டிற் கலந்து கொள்வதற்காக 2000க்கும் மேற்பட்ட பேராளர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து மலேசியாவுக்கு வந்திருந்தனர். குறிப்பாக, மலேசியா, இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். இவை தவிர, இலங்கை, மொரீசியசு, கனடா, ஆசுத்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம், செருமனி மற்றும் பல நாடுகளில் இருந்து ஏராளமான தமிழ் அறிஞர்களும், ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

வெளியீடுகள் தொகு

ஆய்வுச் சுருக்கம்: மாநாட்டில் வாசிப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுக் குறித்த தேதிக்குள் முழுக் கட்டுரைகள் அனுப்பப்பட்ட, ஆய்வுக் கட்டுரைகளின் சுருக்கங்கள் அனைத்தும் அச்சில் ஒரு தொகுப்பாக வெளியிடப்பட்டிருந்தது.[2] 528 பக்கங்களைக் கொண்ட இந்தத் தொகுப்பு, மாநாட்டில் பங்கேற்கப் பதிவு செய்துகொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்டது.

மாநாட்டுச் சிறப்பு மலர்: இம்மாநாட்டின் போது இரண்டு சிறப்பு மலர்கள் வெளியிடப்பட்டன.

  1. மாநாட்டுப் பதிப்பாசிரியர் குழுவினால் தொகுக்கப்பட்டுக் குமுதம் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சிறப்பு மலர். 274 பக்கங்களைக் கொண்ட இச்சிறப்பு மலரில் அறிஞர்களுடைய 42 கட்டுரைகள் உள்ளடங்கி இருந்தன.
  2. இரா, மதிவாணன் பதிப்பாசிரியராக இருந்து, முத்தமிழ்ப் பாவலர் மன்றத்தால் வெளியிடப்பட்ட சிறப்பு மலர். இம்மலர், 264 பக்கங்களில், 100 கட்டுரைகளும், 5 கவிதைகளும் இடம்பெற்றிருந்தன.

நிறைவு விழா தொகு

பெப்ரவரி முதலாம் திகதி மதியத்துடன் கட்டுரை வாசிப்புக்கள் அனைத்தும் நிறைவெய்தின. மாலை வேளை நிறைவு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மலேசிய நாட்டின் கல்வி அமைச்சர் கலந்துகொண்டு மாநாட்டை நிறைவு செய்து வைத்தார். இந்நிகழ்வில், மொரீசியசின் முன்னாள் கல்வியமைச்சர் பரசுராமன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

மேற்கோள்கள் தொகு

  1. ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - நிகழ்வுகள், 2015
  2. உலகமயக் காலகட்டத்தில் தமிழாய்வுக்கு வளம் சேர்த்தல் - ஆய்வுச் சுருக்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மலேசியா, கோலாலம்பூர், 2015.

உசாத்துணை தொகு