ஒப்பீட்டுத் திறனாய்வு

ஒப்பீட்டுத் திறனாய்வு என்பது இலக்கியப் படைப்புக்களை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு ஆராயும் திறனாய்வு முறையைக் குறிக்கும். இலக்கியங்களை ஒப்பியல் முறையில் அணுகும்போது இலக்கியம் குறித்த பல்வேறு புதிய புதிதல்களும் அனுபவங்களும் கிடைக்க வாய்ப்பு ஏற்படுகின்றது.[1] ஓரளவுக்கு ஒத்த தன்மைகளைக் கொண்ட இலக்கியப் படைப்புக்களையே ஒப்பீட்டு முறையில் திறனாய்வது வழக்கு. முற்றிலும் முரண்பட்ட படைப்புக்களை ஒப்பீட்டு அடிப்படையில் திறனாய்வது சாத்தியம் இல்லை.[2] ஒப்பீட்டுத் திறனாய்வு தற்காலத்தில் மேலும் வளர்ச்சி பெற்று ஒப்பிலக்கியம் எனப்படும் தனித்துறையாக ஆகியுள்ளது.

நோக்கங்கள்

தொகு

ஒப்பீட்டுத் திறனாய்வு, இலக்கியங்களை ஒப்பிடுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்தகைய ஒப்பீட்டின்போது, ஒரே மொழி இலக்கியங்களின் ஒப்பீடு, ஒரு படைப்பாளியில் வெவ்வேறு இலக்கியப் படைப்புக்களின் ஒப்பீடு, ஒரே நாட்டில் உருவாகிய இலக்கியங்களின் ஒப்பீடு, வெவ்வேறு நாட்டு இலக்கியங்களின் ஒப்பீடு எனப் பல்வேறு வகையான ஒப்பீடுகள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இவ்வாறு புதிய கோணத்தில் பார்ப்பதன் மூலம் குறித்த இலக்கியத்தின் பண்புகளை மேலும் சிறப்பாகவும், நிறைவாகவும், புரிந்துகொள்ள முடிகிறது. ஒப்பிலக்கியம் வளர்ச்சியடைந்தபோது, குறிப்பாக அமெரிக்காவில், இலக்கியங்களை ஒன்றோடொன்று ஒப்பிடுவது மட்டுமன்றி, இலக்கியத்தைச் சமூகவியல், மெய்யியல் போன்ற துறைகளுடனும், ஓவியம், சிற்பம், நடனம், நாடகம், கட்டிடக்கலை போன்ற பிற கலைகளுடனும் ஒப்பிட்டு அவற்றுடனான தொடர்புகளைக் கண்டறிவதும் நோக்கங்களாகக் கொள்ளப்பட்டன.

அடிப்படைகள்

தொகு

ஒப்பீட்டுத் திறனாய்வுச் செயற்பாடுகளுக்கு அடிப்படையாகச் சில கருதுகோள்கள் உள்ளன. இவற்றைப் பின்வருமாறு தி. சு. நடராசன் பட்டியல் இட்டுள்ளார்.[3]

  1. ஒத்த சமுதாய-வரலாற்றுச் சூழல்களில் பிறக்கும் இலக்கியங்கள் ஒத்த தன்மைகளைப் பெற்றிருக்கக்கூடும்.
  2. ஏற்புத் திறனைச் சார்ந்து ஓர் இலக்கியம் இன்னோர் இலக்கியத்தின் மீது செல்வாக்குச் செலுத்தக்கூடும்.
  3. மொழி, இனம், அரசியல்-புவியியல் பரப்பு போன்றவற்றால் வேறுபட்டிருந்தாலும், அத்தகைய வரையறைகளையும் மீறி, வேறுபட்ட பண்பாடுகளில் உருவாகும் இலக்கியங்கள் தம்முள் ஒத்த பண்புகளையும், பயன்களையும் பெற்றிருக்கக்கூடும்.
  4. ஒன்றுபட்டும், வேறுபட்டும் அமைகின்ற பின்புலங்களில் இருந்து பார்க்கும்போது குறிப்பிட்ட இலக்கியத்தின் பண்புகளும் கூறுகளும் மேலும் தெளிவாகத் தெரியக்கூடும்.

குறிப்புக்கள்

தொகு
  1. பஞ்சாங்கம், க., 2011. பக். 76.
  2. நடராசன், தி. சு., 2009. பக். 26.
  3. நடராசன், தி. சு., 2009. பக். 26.

உசாத்துணைகள்

தொகு
  • பஞ்சாங்கம், க., இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், அன்னம், தஞ்சாவூர், 2011.
  • நடராசன், தி. சு., திறனாய்வுக் கலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2009 (ஏழாம் பதிப்பு).

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒப்பீட்டுத்_திறனாய்வு&oldid=2918482" இலிருந்து மீள்விக்கப்பட்டது