ஒவ்வொரு பூக்களுமே (திரைப் பாடல்)
ஒவ்வொரு பூக்களுமே என்ற முதல் அடியுடன் தொடங்கும் பாடல் ஆட்டோகிராப் என்னும் தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒர் பாடல். பா. விஜய் எழுதிய இப்பாடலுக்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார். பின்னணிப் பாடகி சித்ராவின் குரலில் இது வெளிவந்துள்ளது. 2004 ஆம் ஆண்டில் பாடலாசிரியருக்கும், பின்னணிப் பாடகிக்குமான இரண்டு தேசிய விருதுகள் இப்பாடலுக்குக் கிடைத்து குறிப்பிடத்தக்கது.[1]
சூழ்நிலை
தொகுசிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்ற ஆட்டோகிராப் திரைப்படம்,[2] நாயகனுடைய பழைய காதல் நினைவுகளையும் அதனால் அவனுக்கு ஏற்படுகின்ற விரக்தியையும், வாழ்க்கையில் பிடிப்பின்மையையும், பின்னர் வாழ்க்கையில் உண்மையான தன்மையை உணர்ந்து மனம் மாறுவதையும் அடிப்படையாகக் கொண்டது. நாயகன் மனம் மாறி, தனது எதிர்காலத்தில் நம்பிக்கை கொள்ள வைக்கும் முக்கியமான கட்டமே இப்பாடல் இடம்பெறும் காட்சி. பார்வையற்றவர்கள் நடத்தும் ஒரு இசை நிகழ்ச்சியில் இப்பாடலைப் பாடுவதாகக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தமது இயலாமையை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு வாழ்வில் நம்பிக்கைவைத்து முன்னேறத் துடிக்கும் பார்வையற்றவர்களின் மனப்போக்கை இப்பாடல் வெளிப்படுத்துகிறது.
பாடல் வரிகள்
தொகுபொருட்செறிவுடனும், அழுத்தமாகவும் நல்ல எதிர்காலத்துக்கான நம்பிக்கையைப் பாடல் வரிகள் ஏற்படுத்துவதாக தேசிய விருதுக்குழுவினர் பாராட்டியுள்ளனர்.[3]
- "ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே[4]
- வாழ்வென்றால் போராடும் போர்க்களமே"
என்று வாழ்வை ஒரு போராட்டமாக எடுத்துக்கூறித் தொடங்கும் இப்பாடல் வரிகள், படிப்படியாக, மனித வாழ்வின் இயல்புகளையும், எதிர்கொள்ளக்கூடிய நிலைமைகளையும், அவற்றைக் கையாள வேண்டிய மனப்பக்குவம் குறித்தும் அழுத்தமாக எடுத்துரைப்பதாக அமைந்துள்ளன.
- "எந்த மனித நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள்
- காலப்போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள்"
என்று வாழ்வில் காயங்கள் ஏற்படுவது வழமை என்பதையும் அவ்வடுக்களின் தன்மை குறித்தும் எடுத்துக்கூறும் பாடல்,
- "உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்
- வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்
என்று வாழ்வின் வலிகள், எதிர்காலத்தில் மனிதன் பக்குவம் அடைவதற்காகத் தான் என்பதைக் கவிதை நயத்துடன் எடுத்துக்காட்டுகிறது.
- "வாழ்க்கைக் கவிதை வாசிப்போம் வானம் அளவு யோசிப்போம்
- முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சைப் போல சுவாசிப்போம்"
என்று எதிர்கால நன்மைக்காக முயற்சி செய்யும்படி அறைகூவல் விடுக்கும் பாடல் வரிகள்,
- "மனிதா உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும்
- அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்
- தோல்வி இன்றி வரலாறா துக்கம் இல்லை என் தோழா
- ஒரு முடிவு இருந்தால்.. அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும்"
என மனிதனின் எதிர்காலத்துக்குத் தோல்விகள் ஊட்டமாக அமையக்கூடும் என்பதையும், ஒரு உறுதியான முடிவுடன், தெளிவாகச் செயற்பட்டால் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதையும் சொல்கிறது.
பின்னணிக் குரல்
தொகுஇப்படத்தில் விரக்தி நிலையில் இருக்கும் நாயகனுக்கு உற்சாகம் கொடுக்க முயற்சி செய்பவளாக வரும் பெண்ணொருத்தி பாடுவதாக இப்பாடல் உள்ளது. இதற்காகப் பின்னணிக் குரல் கொடுத்திருப்பவர் கே. எஸ். சித்ரா. பல்வேறு மொழிகளில் பல விருதுகளைப் பெற்றவரான இவர் மிகவும் சிறப்பாக இப்பாடலைப் பாடியுள்ளார். பாடல் வரிகளுக்கும், காட்சிக்கும் பொருத்தமான அழுத்தமான குரலுடன், உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலும், உயிரோட்டத்துடனும் பாடியிருப்பதாக தேசிய திரைப்பட விருதுக் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- ↑ 52வது தேசிய திரைப்பட விருதுகள், 2005, பக். 41, 56.
- ↑ 52வது தேசிய திரைப்பட விருதுகள், 2005, பக். 14.
- ↑ 52வது தேசிய திரைப்பட விருதுகள், 2005, பக். 56.
- ↑ இவ்வரி தமிழிலக்கணப்படி தவறானது என அறிஞர்கள் உரைக்கின்றனர். ஒவ்வொரு பூவுமே சொல்கிறதே என்பதே சரியான வரி. ஒவ்வொரு என்று வந்தபிறகு ஒருமையில்தான் உருப்படிகள் சுட்டப்பெறுதல் வேண்டும்