ஓரணு வளிமம்

இயற்பியல் மற்றும் வேதியியலில் ஓரணு (Monoatomic gas) என்பது ஒன்று மற்றும் அணு ஆகிய இரு சொற்களின் இணைப்புச் சுருக்கமேயாகும். ஒர் அணு என்பது இதன் பொருளாகும் பொதுவாக இச்சொல்லின் பொருள் வாயு அல்லது வளிமங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதனடிப்படையில் ஓரணு வளிமம் என்பது, அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்காமல் தனித்தனியான அணுக்களாக இருக்கும் வளிமம் ஓரணு வளிமம் எனப்படுகிறது. அனைத்து வேதித் தனிமங்களும் போதுமான உயர் வெப்பநிலைகளில் வாயு அல்லது வளிமமாக இருக்கும் போது ஓரணு நிலையாகவே காணப்படுகின்றன.

மந்த வாயுக்கள்

தொகு

திட்ட வெப்ப அழுத்தத்தில் நிலைப்புத்தன்மை கொண்ட ஓரணு மூலக்கூறுகளாய் இருக்கும் வேதித் தனிமங்கள் மந்தவாயுக்கள் மட்டுமேயாகும். ஈலியம், நியான், ஆர்கான், கிரிப்டான், செனான் மற்றும் ரேடான் முதலியன மந்தவாயுக்கள் எனப்படுகின்றன. இவற்றில் அடர்த்தி மிகுந்த கனமான வாயுக்கள் வேதிச் சேர்மங்களாக உருவாகின்றன. ஆனால் அடர்த்தி குறைந்த இலேசான வாயுக்கள் வினைத் திறனற்று மந்தவாயுக்களாக உள்ளன. உதாரணமாக ஈலியம், இரண்டு எலக்ட்ரான்கள் கொண்ட மிகவும் எளியத் தனிமம் மந்தவாயுவாகக் காணப்படுகிறது. அதாவது இதன் வெளிக்கூடுல் இரண்டு எலக்ட்ரான்களால் முழுமையாக நிரப்பப்பட்டு தன்னிறைவு அடைகிறது. இதனால் ஈலியம் வினைத்திறனற்று மந்தவாயுவாக இருக்கிறது. மந்தவாயுக்களை, நைட்ரசன் போன்ற ஒத்த அணுக்கரு ஈரணு வளிமங்களுடன், குழுப்படுத்துகையில் அவை தனிம வாயுக்கள் அல்லது மூலக்கூறு வாயுக்கள் என்றழைக்கப்படுகின்றன. வேதிச் சேர்மங்களில் இருந்து இவற்றை வேறுபடுத்தி அறியவே இவை இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன.

பிற ஓரணுத் தனிமங்கள்

தொகு

அண்டத்திலுள்ள தனிமங்களின் நிறையில் சுமார் 75% ஓரணு ஐதரசன் அணுக்களால் நிரம்பியுள்ளது.[1]

ஐதரசன், ஆக்சிசன், குளோரின் முதலான சில வளிமங்கள் அண்டத்தில் உருவாகிக் கொண்டே இருக்கின்றன என்பதை வேதியியலாளர்கள் வெகுகாலத்திற்கு முன்பே கண்டறிந்தனர். உதாரணமாக, மின்னாற்பகுப்பு வினை அல்லது அமிலங்களுடன் தனிமங்கள் (ஐதரசன்) புரியும் வினையில் உருவாகும் மூலக்கூற்று ஐதரசன் அணுக்கள் சாதாரண நிலை அணுக்களைவிட வீரியம் மிக்கவையாக உள்ளன. இந்தநிலையில் உள்ள வளிமங்கள் "பிறவிநிலை வளிமங்கள்" என்று பெயரிட்டு அழைக்கின்றனர். இதன்பொருள் புதியதாக பிறப்பெடுத்த வளிமங்கள் என்பதாகும். (இலத்தீன் மொழியில் "in statu nascendi" என்பதன் பொருள் இதுவேயாகும்). பிறவிநிலை தனிமங்களின் தீவிர செயல்பாடு சில வேதிவினைகளை செறிவாக்கப் பயன்படுத்த முடிகிறது. இவ்வகைத் தனிமங்கள் குறிப்பிட்ட சிறிதளவு நேரத்திற்கு பிறவிநிலையிலேயே நீடிக்கின்றன. ஆர்சனிக் போன்ற வினையூக்கிகள் வினையில் இருந்தால் ஓரணு நிலையும் சிறிது நேரத்திற்கு நீடித்து இருக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Palmer, D. (13 September 1997). "Hydrogen in the Universe". தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா). பார்க்கப்பட்ட நாள் 2008-02-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓரணு_வளிமம்&oldid=2747068" இலிருந்து மீள்விக்கப்பட்டது