ஓ முன்மொழிகள்
ஓ முன்மொழிகள் என்பன மேற்கத்திய கிறித்தவ மரபுகளில் திருவருகைக் காலத்தின் இறுதி ஏழு நாட்களில் திருப்புகழ்மாலையின் மாலைப் புகழில் மரியாவின் பாடலுக்கு பயன்படுத்தப்படும் முன்மொழிகள் ஆகும். இவை திருப்பலியின் நற்செய்திக்கு முன்வரும் வாழ்த்தொலியாகவும் (அல்லேலூயா) பயன்படுத்தப்படலாம்.
இவை அனைத்தும் இலத்தீனில் உரையசைக் கிளவியான ஓ என்னும் பதத்தோடு துவங்குவதால் இப்பெயர் பெற்றன.[1] விவிலியத்தில் வரும் மீட்பரின் பயரைச்சொல்லி கூவிஅழைப்பதுபோல இவை அமைந்துள்ளன. அவை:
- டிசம்பர் 17: ஓ ஞானமே (O Sapientia)
- உன்னதரின் ஞானமே, ஆற்றலுடன் அனைத்தையும் அன்பாய் நடத்துகின்றவரே, எங்களுக்கு உண்மையின் வழி காட்ட வந்தருளும்.
- டிசம்பர் 18: ஓ தலைவரே (O Adonai)
- இஸ்ரயேல் குடும்பத்தின் தலைவரே, சீனாய் மலைமீது மோசேக்குத் திருச்சட்டம் ஈந்தவரே, திருக்கரம் நீட்டி எங்களை மீட்க வந்தருளும்..
- டிசம்பர் 19: ஓ ஈசாயின் குலக்கொழுந்தே (O Radix Jesse)
- ஈசாயின் குலக்கொழுந்தே, மக்களுக்கு ஓர் அருஞ் சின்னமே, எமை மீட்க எழுந்தருளும். தாமதம் செய்யாதேயும்.
- டிசம்பர் 20: ஓ தாவீதின் திறவுகோலே (O Clavis David)
- வானக அரசின் வாயிலைத் திறக்கும் தாவீதின் திறவுகோல் நீரே. இருளிலே இருக்கும் கைதிகள் தளையைக் களைந்திட எழுந்தருள்வீரே.
- டிசம்பர் 21: ஓ விடிவிண்மீனே (O Oriens)
- விடிவிண்மீனே, முடிவிலா ஒளியின் சுடரே, நீதியின் கதிரவனே, இருளிலும் மரண நிழலிலும் அவதிப் படுவோரைச் சுடர்வீசி ஒளிர்விக்க வந்தருளும்.
- டிசம்பர் 22: ஓ மக்கள் அனைவர்க்கும் அரசரே (O Rex Gentium)
- மக்கள் அனைவர்க்கும் அரசரே, திருச்சபையின் மூலைக் கல்லே, மண்ணிலிருந்து நீர் உருவாக்கிய மனிதனை மீட்க வாரும். அல்லேலூயா.
- டிசம்பர் 23: ஓ இம்மானுவேலே (O Emmanuel)
- இம்மானுவேலே, சட்டம் இயற்றும் எம் அரசே, இறைவனாம் எம் ஆண்டவரே, எம்மை மீட்க எழுந்தருளும். அல்லேலூயா.
கத்தோலிக்க திருச்சபையில் டிசம்பர் 17 முதல் டிசம்பர் 23 வரை மாலைப் புகழில் பயன்படுத்தப்படுகின்றது. சில ஆங்கிலிக்க ஒன்றியத்திருச்சபைகளில், குறிப்பாக இங்கிலாந்து திருச்சபையிலும் இவற்றைப்பயன்படுத்தும் வழக்கம் உண்டு.
மேற்கோள்கள்
தொகு- ↑ Bower, Peter C. (2003). The Companion to the Book of Common Worship. Geneva Press. p. 100. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0664502324.