கடலூர் பலராம ஐயர்

பலராம ஐயர் என்பவர் தமிழில் நாடகங்கள், செய்யுள்கள் பல இயற்றியவர். தமிழ்மொழியில் முதல் துன்பியல் நாடகத்தை இயற்றியவர். நாடகத்துறையில் பல புதுமைகளைப் புகுத்தியவர் இவர் ஆவார்.

பிறப்பும் கல்வியும் தொகு

பரங்கிப்பேட்டை எனும் ஊரில் கோதண்டராமன் - சிவகாமி அம்மாளுக்கு மகனாக 1875 ஆம் ஆண்டு பிறந்தவர். தமது சொந்த ஊரிலேயே தொடக்கக் கல்வி கற்றார். பின்னர் கடலூர் நகர உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று, 1890 ஆம் ஆண்டு பதின்ம வகுப்புத் (மெட்ரிகுலேசன்) தேர்விலும், 1892 ஆம் ஆண்டு கலையியல் முதல் சான்றிதழ்த் (First Examination in Arts) தேர்விலும் வெற்றி பெற்றார். அதே ஆண்டில் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ வகுப்பும் சேர்ந்து பயின்றார். அங்கு பரிதிமாற் கலைஞரின் அறிமுகம் கிடைத்தது. அவரின் இல்லத்திற்கேச் சென்று அவரிடம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றார்.

ஆற்றிய பணிகள் தொகு

இவரின் தந்தை மறைவுக்குப் பின்னர் குடும்பப் பொறுப்புகளை இவர் ஏற்றார். முதலில் சிதம்பரம் நகரவையில் மேலாளராகப் பணியேற்றார். பின் கடலூர் நகர உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும், சூணாம்பேட்டை நிலக்கிழார் முத்துக்குமாரசுவாமி முதலியாரின் புலவர் அவையில் சிலகாலமும் பணியாற்றியுள்ளார். 1929 ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராக பொறுப்பேற்றார்.

படைப்புப் பணிகள் தொகு

தமிழில் இயற்றப்பெற்ற முதல் துன்பியல் நாடகமான, தசரதன் தவறு எனும் நாடகத்தை எழுதியுள்ளார். முருகப்பெருமான் வள்ளியம்மையை மணம் புரிந்தகதையை, வல்லி பரிணயம் எனும் பெயரில் நாடகமாக எழுதினார். இவர் பரிதிமாற் கலைஞரின், நாடகவியல் நூலின் முதல் 100 இயற்பாக்களுக்கு உரை எழுதி வெளியிட்டுள்ளார். பரிதிமாற் கலைஞரின், ரூபாவதி நாடகத்தை முதன்முதலில் சென்னை விக்டோரியா மன்றத்தில் அரங்கேற்றினார். தில்லை இளமையாக்கினார் கோயில் அம்பிகை மீது,யௌவநாம்பிகை பிள்ளைத்தமிழ் எனும் நூலை இயற்றினார். சிறுவர்கள் படிக்கும் வண்ணம், ஆத்திச்சூடி நீதிக்கதைகள், சிலப்பதிகாரக் கதை, சூளாமணி வசனம் முதலான நூல்களை எழுதியுள்ளார்.

மொழிபெயர்ப்பு பணிகள் தொகு

வடமொழியில் தண்டியாசிரியர் எழுதிய, தசகுமார சரித்திரம் எனும் நூலைத் தமிழாக்கம் செய்துள்ளார். ஜீன்வால்ஜீன் எனும் விக்டர் இயூகோவின் பிரெஞ்சு மொழி புதினத்தை மொழிபெயர்த்துள்ளார்.

மறைவு தொகு

இவர் 1943 ஆம் ஆண்டு காலமானார்.

உசாத்துணை தொகு

1) தினமலர்," உலகத்தமிழ் செம்மொழி மாநாடு- தமிழ் வளர்த்த அறிஞர்கள்-100 பலராம ஐயர் online கட்டுரை பார்த்த நாள்-01-7-17. 2) பெரியபெருமாள்," தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள் " மதிநிலையம்-2001.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடலூர்_பலராம_ஐயர்&oldid=3728137" இலிருந்து மீள்விக்கப்பட்டது