கடல் முத்துச் சிப்பி
முத்துச் சிப்பிகள் (Pearl Oyster) ஈரோடுகள் உடைய, நீர்வாழ் மெல்லுடலிகளாகும். கடலின் அடிப்பாகத்தில், பவளப்புற்றுக்கள், பாறைகள், கடினமான தரையுள்ள இடங்களில் மயிரிழை போன்ற பிடிப்பான்கள் மூலம் பற்றிப் பிடித்து வாழ்பவை. இவை அடர்த்தியாக வாழும் இடங்களை பார் அல்லது முத்து வங்கிகள் என்று அழைப்பர். கரையிலிருந்து 20 மீட்டர் ஆழம் வரை நல்ல உப்பு நீர் உள்ள இடங்கள் இதன் வாழிடங்களாகும். இந்தியா, சீனா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் இவை கூடுதலாக காணப்படுகின்றன. இந்தியாவில் மன்னார் வளைகுடா, கட்ச் வளைகுடா ஆகிய இடங்களிலும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் சுற்றிலும் இவை கூடுதலாக கிடைக்கின்றன. இவைகளில் பிங்க்டேடா பகேற்றா (Pinctada fucata) என்னும் பெயர் கொண்ட சிப்பி கூடுதலாக கிடைக்கக் கூடியதும், செயற்கை வளர்ப்புக்கு உகந்ததும் ஆகும்.
உணவு பழக்கம்
தொகுஇந்தச் சிப்பி தண்ணீரை உடலினுள் எடுத்து சல்லடை செய்து அதிலிருக்கும் மிதவை உயிரினங்களையும், கரைந்து இருக்கும் புரத சத்து பொருள்களையும் உணவாக உட்கொள்ளும். இரண்டு வயது சிப்பி ஒன்று உணவிற்காக நாளொன்றிற்கு 1500 லிட்டர் தண்ணீரை அரிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவை 5 வருடங்கள் வரை உயிர் வாழும் தன்மையுடையன.அப்போது சிப்பியின் விட்டம் 10 செ.மீ. வரை இருக்கும். முத்துச் சிப்பிகள் ஒருபால் உயிரினங்கள். பால் இன மாற்றம் நடைபெறுவதும் உண்டு. ஆணா, பெண்ணா என்பதை புறத் தோற்றத்தால் அறிய இயலாது. இவற்றின் மெல்லிய உடல் வலிமை பொருந்திய இரண்டு ஓடுகளால் மூடப்பட்டு பாதுகாக்கப் பட்டுள்ளது. ஓடுகள் திறந்து மூடும் தன்மை உடையவை. உள் இருக்கும் உடல் ஒரு மென்மையான மேலுறையால் மூடப்பட்டிருக்கும்.
இயற்கை முத்து
தொகுமுத்துச் சிப்பி உணவிற்காக தண்ணீரை உடலுக்குள் உறிஞ்சி சல்லடை செய்யும்போது தற்செயலாக சென்றடையும் மணல் துகள்களையும் பொடிகளையும் வெளியேற்றும் தகவமைப்பு இவற்றுக்கு இல்லை. இதனால் இப் பொருட்களால் ஏற்படும் உறுத்தல் மற்றும் வேதனையை போக்க மேலுறை ஒருவகை திரவத்தை சுரந்து அந்த உறுத்தும் பொருளைச் சுற்றி ஒரு பாதுகாப்பு உறையை உருவாக்கும்.இதில் கால்சியம் கார்பனேட் என்ற வேதிப் பொருள் அதிகமாக இருப்பதாலும், பல அடுக்குகளாக அமைவதாலும் இது ஒளிரும் தன்மையையும் திடத் தன்மையைப் பெற்ற முத்தாக உருமாறுகிறது. நாட்கள் செல்லச் செல்ல இதன் பருமனும், ஒளிரும் தன்மையும் அதிகரிக்கின்றது.
செயற்கை முத்து
தொகுஇயற்கையில் கிடைக்கும் முத்துக்கள் சிறியனவாகவும் ஒழுங்கற்ற வடிவம் கொண்டவையாகவும் இருக்கும். அத்துடன் எல்லா சிப்பிகளிலும் முத்து இருப்பதில்லை. இதனால் ஒருசில முத்துக்கள் பெறுவதற்கு பலநூறு சிப்பிக்களை அழிக்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. அதைத் தடுப்பதற்காக வளர்ப்பு முறையில் சிப்பிகளில் முத்துக்களை உண்டாக்கும் தொழில் நுட்பத்தைச் சப்பானியர் முதன் முதலில் கண்டுபிடித்து அதைநடைமுறைப்படுத்தினர். இந்தியாவில் உள்ள மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் 1973 ஆம் ஆண்டு இத்தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப் பட்டது. தற்போது சிப்பிக் குஞ்சுகளைப் பொரிப்பகங்களில் அடைகாத்து முத்து செய்யும் முறையும் கண்டுபிடிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
செயற்கை முத்து உற்பத்தி முறை
தொகுஇயற்கையில் முத்து எவ்வாறு உண்டாகிறதோ அதையே மையமாக வைத்து வளர்ப்பு முறை முத்தும் செய்யப்படுகிறது. முதற்கட்டமாக சிப்பிகளின் குஞ்சுகளை அறைகளில் வைத்து கடலில் மிதவைகளில் தொங்கவிட்டு வளர்க்கின்றனர். வளர்ந்த பின் அவற்றை சேதனைக் கூடங்களுக்குக் கொண்டு சென்று மேல்உறைத்துண்டால் மூடப்பட்ட ஒரு சிறு பொருளை நுட்பமான அறுவை சிகிட்சை மூலம் சிப்பியினுள் செலுத்தி அவற்றை மறுபடியும் கடலில் அதற்காக அமைக்கப்பட்ட வலைக்கூடுகளில் வைத்து வளர்க்கிறார்கள். இது 6 முதல் 12 மாதங்களில் பருமனடைந்து மதிப்பு மிக்க முத்தாக மாறுகின்றது. இந்திய முத்துக்களுக்குப் பன்னாட்டுச் சந்தையில் நல்ல மதிப்பு உள்ளது. இவை கீழை முத்துக்கள் (Oriental Pearls) என்று அழைக்கப்படுகின்றன. சராசரியாக ஒரு முத்து ரூபாய் 1000 க்கு விலைப் போகின்றன.
முத்தெடுத்தல்
தொகுகடலில் மூழ்கி முத்துச் சிப்பிகளை எடுப்பதனை சிலாபம் அல்லது முத்துக் குளித்தல் என்பர். இது தூத்துக்குடியைத் தலைமை இடமாக கொண்டு குமரி முதல் கீழக்கரை வரை மன்னார் வளைகுடாவில் நீண்டகாலமாக அரசு மேற்பார்வையில் நடைபெற்று வந்தது. முத்துகுளிக்கும் போது கிடைக்கும் சிப்பிகளில் 2/3 பங்கு அரசாங்கத்திற்கும் 1/3 பங்கு குளிப்பவர்கும் பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. 1961 ஆம் ஆண்டு முதல் மன்னார் வளைகுடாவில் முத்துக்குளித்தல் தடை செய்யப்பட்டு இந்த வளம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இருந்த போதிலும் சுற்றுச் சூழல் சீரழிவுகளால் இதன் வளம் தற்போது குறைந்து கொண்டே வருகின்றது. பண்டைய காலத்திலேயே முத்துக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதால், தமிழகம் பாண்டிய நாட்டு முத்துக்குப் பெயர் பெற்றிருந்தது[1].
மேற்கோள்கள்
தொகு- ↑ "முத்துச் சிப்பி". தினமணி. 16 நவம்பர் 2012. http://www.dinamani.com/weekly_supplements/siruvarmani/article1342091.ece. பார்த்த நாள்: 21 சூலை 2015.