கட்டுடைய அணுக்க முறைமை
கட்டுடைய அணுக்க முறைமை அல்லது கட்டுடைய அணுக்கம் (Conditional access, சுருக்கமாக CA) என்பது உள்ளடக்கத்திற்கான அணுக்கம் பெற சில கட்டுப்பாடுகளை செயல்படுத்தி உள்ளடக்கத்தைக் காக்கும் ஓர் முறைமை ஆகும். இத்தகைய முறைமை எண்ணிமத் தொலைக்காட்சி (digital tv) வழங்கலிலும் செய்மதித் தொலைக்காட்சி (satellite tv) பரவலிலும் வழமையாகப் பயன்படுத்தப்படுகிறது.
எண்ணிம ஒளித பரப்புகையில்
தொகுஎண்ணிம ஒளித பரப்புகை (DVB) சீர்தரத்தில் கட்டுடைய அணுக்க முறைமைக்கான (CAS) சீர்தரங்களும் வரையறுக்கப்பட்டுள்ளன [1]; இந்த சீர்தரங்களில் எண்ணிம தொலைக்காட்சி தகவலோடையை எவ்வாறு மறைப்பது என்பதும் செல்லுபடியாகும் மறையீட்டு அட்டைகளைக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளில் மட்டுமே காட்சிப்படுத்துவது என்பதும் விவரிக்கப்பட்டுள்ளது.
இது தகவலோடையை மறையீடு செய்து வரிசையைக் கலைப்பது மூலம் செயல்படுத்த முடிகிறது. தகவலோடை கட்டுப்பாட்டுச் சொல் என அறியப்படும் 46 பிட் இரகசிய குறீயீட்டுச்சொல்லுடன் கலக்கப்படுகிறது. ஒளிதம் வழங்குவோர் இந்தக் கட்டுப்பாட்டுச் சொல்லை ஒரு நிமிடத்தில் பல முறை மாற்றுவதால் எந்தவொரு நேரத்தில் உள்ள கட்டுப்பாட்டு சொல்லையும் அறிந்திருப்பதால் யாதொரு பயனுமில்லை; மேலும் இந்தக் கட்டுப்பாட்டுச் சொல்லை மாற்றுவது எதிர்பார்க்கும் வகையில் அமையாதிருக்கும்.
ஓர் தொலைக்காட்சிப் பெட்டியின் அணுக்கப் பெட்டி இந்த மறையீடிடப்பட்டுக் கலக்கப்பட்ட ஓடையை கட்டுப்பாட்டுச் சொல்லைப் பயன்படுத்தி நேராக்குகிறது. காட்சி தடைபடாத வண்ணம் இதற்காக ஒவ்வொரு கணத்திலும் மாற்றப்படும் கட்டுப்பாட்டுச் சொல் அணுக்கப்பெட்டிக்கு சற்று முன்னதாக அனுப்பப் படுகிறது. இந்தக் கட்டுப்பாட்டுச் சொல்லும் மறைக்கப்பட்ட நிலையில் அணுக்கப்பெட்டிக்கு அனுப்பப்படுகிறது; இது உரிமை பெற்றோர் கட்டுப்பாட்டு செய்தியாக (ECM) அனுப்பப்படுகிறது. அணுக்கப் பெட்டியில் உள்ள துணைநிரலித் தொகுப்பு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இச்செய்தியின் மறையீட்டை நீக்குகிறது; இந்த அனுமதியை உரிமை பெற்றோர் மேலாண்மை செய்தி (EMM) மூலம் பெறுகிறது. இந்த அனுமதிச் செய்திகள் ஒவ்வொரு பயனருக்கும் தனிப்பட்டதாகும்; பயனரது அணுக்கப்பெட்டியில் செருகப்பட்டிருக்கும் விரைவுபாட்டு அட்டைகளைப் பொறுத்து அமையும். உரிமை பெற்றோர் கட்டுப்பாட்டு செய்திகள் போலன்றி இந்த அனுமதிச் செய்திகள் அவ்வப்போது, வழமையாக மாதம் ஒருமுறை, மட்டுமே அனுப்பப்படும். இந்த இடைவெளி தொலைக்காட்சி வழங்கு நிறுவனத்தைப் பொறுத்து மாறும்; பிரித்தானிய ஸ்கை ஒளிபரப்பு (BSkyB) ஆறு வாரங்களுக்கு ஒருமுறை மாற்றுகிறது.வேறு சிலர் மூன்று நாட்களுக்கு ஒருமுறையும் மாற்றுகின்றனர்.
சான்றுகோள்கள்
தொகு- ↑ "standards page on the DVB website". Archived from the original on 2013-01-16. பார்க்கப்பட்ட நாள் 2013-01-13.
வெளி இணைப்புகள்
தொகு- CAS history பரணிடப்பட்டது 2009-01-13 at the வந்தவழி இயந்திரம் in Spanish
- CA ID list on dvbservices.com