கண்பத்ராவ் தேஷ்முக்
கண்பத்ராவ் தேஷ்முக் (Ganpatrao Deshmukh, பிறப்பு: ஆகத்து 10, 1926) ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் இந்தியக் குடியானவர்கள் மற்றும் உழைப்பாளர்களின் கட்சி (PWP) யைச் சேர்ந்தவர். இவர் மகாராஷ்டிர சட்டமன்றத்தின் நீண்டகால உறுப்பினர் ஆவார். கடந்த 54 ஆண்டுகளில் சோலாப்பூர் மாவட்டத்திலுள்ள சங்கோலி தொகுதியிலிருந்து இவர் 11 முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1978 மற்றும் 1999இல் அகில இந்திய தேசிய காங்கிரஸ் - தேசிய காங்கிரஸ் கட்சி கூட்டணியை குடியானவர்கள் மற்றும் உழைப்பாளர்களின் கட்சி ஆதரித்தபோது சரத் பவாரின் முதல் அமைச்சரவையில் தேஷ்முக் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.[1] கண்பத்ராவ் அரசியல் தூய்மையும் சீரிய கொள்கைப்பிடிப்பும் கொண்ட அரசியல்வாதியாகக் கருதப்படுகிறார்.
அரசியல் வாழ்வு
தொகு1962 தேர்தலின்போது தேஷ்முக் முதன்முறையாக மஹாராஷ்டிரா சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றிலிருந்து 1972 மற்றும் 1995 -தவிர 1967, 1978, 1980, 1985, 1990, 1999, 2004, மற்றும் 2009 வரை நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வென்றுள்ளார். 2012ல் 50 வருடங்களை சட்டமன்ற உறுப்பினராக பூர்த்தி செய்தமைக்காக அரசாங்கத்தால் கெளரவிக்கப்பட்டார்.[1][2]
2014 ஆம் ஆண்டின் மகாராட்டிர சட்டமன்றத் தேர்தலின்போது தனது 88-வது வயதில், சங்கோலி தொகுதியிலிருந்து 11-வது தடவையாக 94,374 வாக்குகள் பெற்று சாதனை படைத்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சி அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தாதபோது தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஷாஹாஜிபாபு பாட்டீலை விட 25,224 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார்.[1][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Ganpatrao Deshmukh: Longest-serving MLA in Maharashtra scores a record 11th win". The Economic Times. 19 Oct 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-10-20.
- ↑ "PWP MLA Ganpatrao Deshmukh felicitated for 50 yrs in Assembly". Moneycontrol.com. Apr 4, 2012. பார்க்கப்பட்ட நாள் 2014-10-20.
- ↑ "Ganpatrao Deshmukh creates record". The Indian Express. October 19, 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-10-20.
வெளி இணைப்புகள்
தொகுஅலுவலக வலைத்தளம் (மராத்தி மொழி) பரணிடப்பட்டது 2014-10-23 at the வந்தவழி இயந்திரம்