கத்தரீன் லபோரே

புனித கத்தரீன் லபோரே (மே 2, 1806 – டிசம்பர் 31, 1876), பிறரன்பின் புதல்வியர் துறவற சபையின் அருட்சகோதரியும், அன்னை மரியாவைக் கண்ட திருகாட்சியாளரும் ஆவார். மரியாவின் அறிவுறுத்தலின்படி, இவர் அற்புத பதக்கம் அணியும் வழக்கத்தை கிறிஸ்தவர்களிடையே உருவாக்கினார்.

Saint Catherine Labouré
புனித கத்தரீன் லபோரே
பிறப்புசோ லபோரே
(1806-05-02)மே 2, 1806
ஃபாய்ன்-லெஸ்- மாட்டைர்ஸ், பிரான்சு
இறப்புதிசம்பர் 31, 1876(1876-12-31) (அகவை 70)
இங்கியன்-ரியூய்ல்லி, பிரான்சு
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்கம்
அருளாளர் பட்டம்மே 28, 1933 by திருத்தந்தை 11ம் பயஸ்
புனிதர் பட்டம்ஜூலை 27, 1947 by திருத்தந்தை 12ம் பயஸ்
திருவிழாநவம்பர் 25
சித்தரிக்கப்படும் வகைஅற்புத பதக்கம்

தொடக்க காலம்

தொகு

கத்தரீன் லபோரே, பிரான்சு நாட்டின் பர்கன்டிப் பகுதியில் 1806ம் ஆண்டு மே 2ந்தேதி பிறந்தார். இவரது திருமுழுக்கு பெயர் சோ லபோரே என்பதாகும். 1815 அக்டோபர் 9ந்தேதி, 9 வயதில் தனது தாயை இவர் இழந்தார். அப்போது இவர் மரியன்னையின் ஒரு சொரூபத்தை முத்தம் செய்து, "இப்போது முதல் நீரே என் தாய்" என்று கூறினார்.

அதன் பிறகு, இவர் உறவினர் ஒருவர் வீட்டில் வளர்க்கப்பட்டார். சிறு வயது முதலே, இவர் மரியன்னை மீது அன்பும் பக்தியும் கொண்டிருந்தார். இளம்பெண்ணாக இருந்தபோது, பிறரன்பின் புதல்வியர் துறவற சபையில் உறுப்பினராக இணைந்தார். அதன் மற்ற உறுப்பினர்களோடு இணைந்து பிறரன்பு பணிகளை செய்து வந்தார்.

திருக்காட்சியாளர்

தொகு

1830 ஜூலை 8ந்தேதி, இரவில் கத்தரீன் தூங்கிக் கொண்டிருந்த வேளையில் ஒரு குழந்தை இவரைச் சிற்றாலயத்திற்கு அழைத்த குரல் கேட்டு விழித்து எழுந்தார். உடனே இவர் சிற்றாலயத்திற்கு விரைந்து சென்றார். அங்கு மரியன்னை நிற்கும் காட்சியை கண்டார். அன்னை இவரிடம், "கடவுள் உன்னை முக்கியமான ஒரு பணிக்குத் தேர்வு செய்துள்ளார்" என்று கூறி மறைந்தார்.

மீண்டும் 1830 நவம்பர் 27ந்தேதி, அன்னை மரியா இவருக்கு காட்சி அளித்தார். அப்போது மரியன்னை உலக உருண்டை மேல் நின்று கொண்டிருந்தார். அவரது கரங்களில் இருந்து ஒளிக் கதிர்கள் வெளிவந்தன. மரியன்னையைச் சுற்றி முட்டை வடிவில் தோன்றிய ஒளி வட்டத்தில், "ஓ பாவமின்றி உற்பவித்த மரியாவே, உம்மை அண்டி வரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்" என்ற வார்த்தைகள் காணப்பட்டன. காட்சி பின்பக்கம் திரும்பியது. அதில் சிலுவை அடையாளமும், அதன் கீழ் மாதாவை குறிக்கும் 'எம்' (M) என்ற எழுத்தும் காணப்பட்டன. அதன் அடியில் இயேசுவின் திவ்விய இருதயமும், மரியன்னையின் மாசற்ற இருதயமும் காணப்பட்டன. அவற்றைச் சுற்றி 12 விண்மீன்களும் காணப்பட்டன.

புதுமைப் பதக்கம்

தொகு
 
புதுமைப் பதக்கம்
 
மரியா காட்சி அளித்த சிற்றாலயப் பலிபீடம்

அந்த காட்சி முடிந்ததும் மரியன்னை கத்தரீனிடம், காட்சியில் கண்டது போன்ற ஒரு பதக்கத்தை கழுத்தில் அணியும் வகையில் தயார் செய்யச் சொன்னார். மேலும் இந்த அற்புத பதக்கத்தை அணிந்து கொள்பவர்கள் இயேசுவுக்கு ஏற்றவர்களாக வாழ்வார்கள் என்றும் பாவ வாழ்வில் இருந்து விலகுவார்கள் என்றும் மரியன்னை அறிவித்தார்.

இந்த காட்சிகளின் உண்மைத்தண்மை பின்பு திருச்சபையால் உறுதி செய்யப்பட்டது. கத்தரீனும் அன்னை மரியா சொன்னபடி செய்து, மக்கள் பலரும் அற்புத பதக்கத்தை அணிய வழிகாட்டினார். அதைக் கழுத்தில் அணிந்துகொண்ட பலரும் பல்வேறு நன்மைகளை அடைந்தனர். கிறிஸ்தவர்கள் அல்லாத சிலர் இந்த அற்புத பதக்கத்தை அணிந்து கொண்டதால் கிறிஸ்தவ விசுவாசத்தை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

முன்னறிவிப்புகள்

தொகு

கத்தரீன் லபோரே எதிர் காலத்தில் நடக்கவிருந்த சம்பவங்களை முன்னறிவிக்கும் வரமும் பெற்றிருந்தார். இவர் முன்னறிவித்தபடியே பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின. ஆனால் சில முன்னறிவிப்புகள் பலிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

புனிதர் பட்டம்

தொகு
 
புனித கத்தரீனின் அழியாத உடல்

தனது வாழ்நாள் முழுவதையும் கடவுளின் மேன்மைக்காகவும் மரியன்னையின் பக்தியைப் பரப்பவும் அர்ப்பணித்த கத்தரீன், 1876 டிசம்பர் 31ஆம் நாள் மரணம் அடைந்தார். 1933 மே 28ந்தேதி, திருத்தந்தை 11ம் பயஸ் இவருக்கு அருளாளர் பட்டம் வழங்கினார்.

கத்தரீன் இறந்த 57 ஆண்டுகளுக்கு பிறகு, இவரது கல்லறைத் தோண்டப்பட்ட வேளையில் கத்தரீனின் உடல் அழியாத நிலையில் கண்டெடுக்கப்பட்டது. 1947 ஜூலை 27ந்தேதி, திருத்தந்தை 12ம் பயஸ் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார். புனித கத்தரீன் லபோரேயின் அழியாத உடல், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ரியூ டு பக்கில் உள்ள மரியன்னை காட்சி அளித்த சிற்றாலயத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

வாழ்க்கை வரலாறு

தொகு

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்தரீன்_லபோரே&oldid=3567696" இலிருந்து மீள்விக்கப்பட்டது