புனிதர்களின் அழியாத உடல்கள்

புனித சில்வனின் அழியாத உடல்.

புனிதர்களின் அழியாத உடல்கள் என்பது கிறிஸ்தவப் புனிதர்களின் முழுமையாக சிதைவுறாத அல்லது சிறிதே சிதைவுற்ற உடல்களைக் குறிக்கிறது. கத்தோலிக்க திருச்சபை மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபை ஆகியவற்றில் இது இயற்கைக்கு மேற்பட்ட இறைவனின் செயலாக கருதப்படுகின்றது.

புனிதப் பண்டங்கள்தொகு

கத்தோலிக்க திருச்சபையின் இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றுக்கு சான்று பகரும் வகையில் பல ஆதாரங்கள் உள்ளன. இயேசு கிறிஸ்துவின் வாழ்வோடு தொடர்புடைய பல பொருட்கள், இடங்கள் ஆகியவை அவற்றுள் மிகவும் முக்கியமானவை.

மேலும், இயேசு கிறிஸ்துவின் சீடர்களோடு தொடர்புடைய புனிதப் பண்டங்களும், கிறிஸ்தவப் புனிதர்களோடு தொடர்பு கொண்ட அருளிக்கங்களும் கத்தோலிக்கத் திருச்சபையின் வரலாற்றுக்கு சான்று பகர்கின்றன.

புனிதர்களின் அருளிக்கங்கள் அல்லது புனிதப் பண்டங்கள் மூன்று வகைப்படும்: 1. புனிதர்களின் அழியாத உடல் மற்றும் எலும்புத் துண்டுகள் ஆகியவை, 2. புனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள், 3. புனிதர்களோடு தொடர்புடைய பொருட்களைத் தொட்டப் பொருட்கள்.

இவற்றில் புனிதர்களின் அழியாத உடல்கள் முதல் நிலை அருளிக்கங்களாக கருதப்படுகின்றன. கி.பி. முதல் நூற்றாண்டு முதலே புனிதர்கள் வணக்கமும், புனிதரோடு தொடர்புடையப் பொருட்களை புனிதமாக கருதும் வழக்கமும் கிறிஸ்தவர்களிடையே இருந்து வருகிறது.[1]

மறைசாட்சிகள்தொகு

கி.பி. முதல் நூற்றாண்டில் இயேசு கிறிஸ்து விண்ணகம் சென்ற பின்பு, கிறிஸ்தவ திருச்சபை விரைவாக வளர்ந்தது. ரோம் மற்றும் கிரேக்க மக்கள் பலரும் கிறிஸ்தவர்களாக மாறினர். ரோமை ஆட்சி செய்த அரசர்கள், கிறிஸ்துவைப் பின்பற்றியவர்களை விசுவாசத்தைக் கைவிடும்படி வற்புறுத்தினர். விசுவாசத்தில் உறுதியாக இருந்தவர்களைக் கொலை செய்தனர். இந்த நிகழ்வுகள் 4ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை தொடர்ந்தன.

இவ்வாறு இயேவின்மீது கொண்ட விசுவாசத்துக்காக உயிர் துறந்தவர்கள் மறைசாட்சிகள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களின் துணிச்சல் கிறிஸ்தவ சமயம் விரைந்து பரவ காரணமாக அமைந்தது. கடவுளுக்காக மரணத்தை ஏற்றவர்கள் மற்ற கிறிஸ்தவர்களால் புனிதர்களாக கருதப்பட்டனர். இவர்களோடு தொடர்பு உள்ள பொருட்களும், இவர்களது கல்லறைகளும் புனிதமாக வணங்கப்பட்டன.

அழியாத உடல்கள்தொகு

கி.பி. நான்காம் நூற்றாண்டில், கிறிஸ்தவ சமயத்திற்கு ரோமப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் சுதந்திரம் வழங்கினார். அதன் பிறகு, கிறிஸ்தவ சமயம் கத்தோலிக்க திருச்சபை என்ற நிர்வாக அமைப்பாக மாறியது; ஆளுகை முறைகள் ஒழுங்குபடுத்தப்பட்டன. இதனால், 7ஆம் நூற்றாண்டில் புனிதர்களின் கல்லறைகள் தோண்டப்பட்டு, அவர்களின் புனிதப் பண்டங்கள் கிறிஸ்தவ ஆலயங்களில் வைக்கப்பட்டன. அப்போது தோண்டப்பட்ட சில கல்லறைகளில் இருந்து, புனிதர்களின் அழியாத உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் பாதுகாக்கப்பட்ட, புனிதர்களின் அழியாத உடல்களைத் தொடர்ந்து பாதுகாக்க திருச்சபை விரும்பியது. எனவே, அவற்றை அழகான கண்ணாடிப் பேழைகளில் வைத்துப் பாதுகாக்கத் தொடங்கியது.

அதன் பிறகும் புனிதப் பண்டங்களுக்காக (அருளிக்கத்திற்காக) கல்லறைகள் தோண்டப்பட்ட வேளைகளில் பல்வேறு புனிதர்களின் உடல்கள் அழியாத நிலையில் கண்டெடுக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட புனிதர்களின் அழியாத உடல்கள், உலகின் பல்வேறு இடங்களில் உள்ள ஆலயங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அழியாத நிலையில் கண்டெடுக்கப்பட்டு, பின்பு சிதைவுற்ற சில புனிதர்களின் உடல்கள் கவசம் அணிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.

சில புனிதர்கள்தொகு

அழியாத உடல்கள் உள்ள சில கத்தோலிக்க புனிதர்களின் நிழற்படங்கள் கீழே தரப்படுகின்றன.

காரணங்கள்தொகு

புனிதர்களின் உடல்கள் அழியாமல் இருப்பதற்கு இரண்டு விதமான காரணங்கள் கூறப்படுகின்றன. அவை,

1. இயற்கை பாதகமாக இருந்தும் இறைவனின் செயல்பாட்டால் உடல் பாதுகாக்கப்படுவது.
2. புதைக்கப்படும் இடத்தின் தன்மை மற்றும் புதைக்கப்படும் விதம் ஆகிய காரணங்களால் இயற்கையாக உடல் பாதுகாக்கப்படுவது.

ஆனால் இயற்கையின் அழிவு விதிகளின்படி இறந்த அனைவரின் உடலும் சிதைவுற்று அழிவதே வழக்கமாக நடைபெறும் செயலாக இருப்பதால், கத்தோலிக்க திருச்சபையும், கிழக்கு மரபுவழி திருச்சபையும் புனிதர்களின் உடல்கள் அழியாமல் இருப்பதை கடவுளின் திருவுளத்தால் நடைபெறும் செயலாகவே பார்க்கின்றன. ஒருவரின் உடல் அழியாமல் இருப்பது, அவருக்கு புனிதர் பட்டம் வழங்கிட தேவையான தகுந்த காரணங்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

ஆதாரங்கள்தொகு

  1. திருத்தூதர் பணிகள் 19:11-12 'பவுல் வழியாய்க் கடவுள் அரும் பெரும் வல்ல செயல்களைச் செய்து வந்தார். அவரது உடலில் பட்ட கைக்குட்டைகளையும் துண்டுகளையும் கொண்டு வந்து நோயுற்றோர் மீது வைத்ததும் பிணிகள் அவர்களை விட்டு நீங்கும்: பொல்லாத ஆவிகளும் வெளியேறும்.'

வெளி இணைப்புகள்தொகு