ஜான் வியான்னி

புனித ஜான் பாப்டிஸ்ட் மரிய வியான்னி (Saint John Baptist Mary Vianney, மே 8 1786 - ஆகஸ்ட் 4 1859) பிரான்சு நாட்டில் உள்ள ஆர்ஸ் எனும் சிற்றூரின் பங்கு குருவாய் இருந்தவர். பிரெஞ்சுப் புரட்சியின் காரணமாக விசுவாசமும் இறை நம்பிக்கையும் குறைந்து போய் இருந்த அப்பங்கு, இவரின் கடின உழைப்பால் மனம் மாறியது என்பர். மரியன்னை மீதும் நற்கருணை மீதும் மிகுந்த பக்தி கொண்டிருந்த இவர், ஒப்புரவு அருட்சாதனத்தில் மிகுந்த நேரத்தை செலவிட்டார். இவர் கத்தோலிக்க குருக்களின் பாதுகாவலர் ஆவார்.

புனித ஜான் மரிய வியான்னி
Saint John Baptist Mary Vianney
புனித ஜான் பாப்டிஸ்ட் மரிய வியான்னி
மறைப்பணியாளர்
பிறப்பு(1786-05-08)மே 8, 1786
டார்டில்லி, பிரான்சு
இறப்புஆகத்து 4, 1859(1859-08-04) (அகவை 73)
ஆர்ஸ்-சுர்-பார்மன்ஸ், பிரான்சு
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்கம், ஆங்கிலிக்கம்
அருளாளர் பட்டம்ஜனவரி 8, 1905, ரோம் by திருத்தந்தை 10ம் பயஸ்
புனிதர் பட்டம்1925, ரோம் by திருத்தந்தை 11ம் பயஸ்
முக்கிய திருத்தலங்கள்புனித ஜான் மரிய வியான்னி திருத்தலம்; ஆர்ஸ்-சுர்-பார்மன்ஸ், பிரான்சு
திருவிழாஆகஸ்ட் 8
பாதுகாவல்குருக்கள், பங்கு குருக்கள்

தொடக்க காலம் தொகு

ஜான் மரிய வியான்னி லயன்ஸ் நகருக்கு அருகில் டார்டில்லி என்னும் இடத்தில், ஒரு விவசாயக் குடும்பத்தில் மத்தேயு - மேரி என்ற பெற்றோருக்கு மகனாக 1786 மே 8ந்தேதி பிறந்தார். இவருக்கு 3 வயதாக இருக்கும்போது பிரஞ்சு புரட்சி வெடித்தது. இவரது குழந்தைப் பருவத்தில் அவருடைய பெற்றோர்கள் மட்டுமே மறைக்கல்வி கற்றுக்கொடுத்தனர். இவர் வாழ்ந்த சூழலில் திருப்பலியில் பங்கேற்பது எளிதானதாக இல்லை.

இருப்பினும் இரு துறவற சகோதரிகள் வியான்னியின் முதல் நற்கருணை விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். அந்நிகழ்வு 1799ல் இவருக்கு 13 வயது நிகழ்ந்தபோது,[1] அதிகாரிகளுக்குப் பயந்து மூடப்பட்ட ஓர் இல்லத்தில் நிகழ்ந்தது. இவர் தன்னுடைய தோட்ட இல்லத்தை ஒரு சிறுவர்களின் மறைக்கல்விக்கூடமாக மாற்றினார். நெப்போலியன் மன்னன் புரட்சியாளர்களைத் தோற்கடித்து திருத்தந்தையோடு உடன்படிக்கை செய்துகொண்டதால் கத்தோலிக்க மறை பிரான்சு நாட்டில் 1802ஆம் ஆண்டு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது. அப்பொழுது 16 வயதான வியான்னி, ஒரு குருவாக வேண்டும் என்று விரும்பினார்.

குருப் பட்டம் தொகு

மூன்று ஆண்டுகளுக்கு பிறகே, வியான்னியின் தந்தை இவரது விருப்பத்துக்கு இணங்கி தோட்ட வேலையிலிருந்து இவருக்கு விடுதலை அளித்தார். பிறகு இவர், தனது பங்குத்தந்தையே நடத்தி வந்த வகுப்புகளுக்கு சென்று குருத்துவப் பயிற்சி பெற்றார். அங்கு பயின்றவர்களிலேயே வியான்னிக்குதான் வயது அதிகம்; படிப்பிலும் கடைசி நிலையில் இருந்தார். இலத்தீன் மொழி கற்பது இவருக்கு மிகவும் கடினமாக இருந்தது; தன் தாய் மொழியான பிரெஞ்சு மொழியிலும் போதிய அறிவு இல்லை. இவருடைய ஞாபக சக்தியும் மிகவும் பலவீனமாக இருந்தது. எனவே புனித ஜான் பிரான்சிஸ் ரெஜிஸ் என்பவருடைய திருத்தலத்திற்கு சென்று வேண்டினார். இவருடைய பங்குத்தந்தையின் ஆதரவே இவருக்கு ஊக்கம் ஊட்டியது.

1809-ல் நெப்போலியன் ஸ்பெயின் நாட்டின்மீது படையெடுத்தார். அப்பொழுது 23 வயதான வியான்னி, படையில் சேர்ந்து யுத்தத்தில் கலந்து கொள்ளாமல் இருக்க விதி விலக்கு கேட்டார்; அது மறுக்கப்பட்டது.[2] எனவே வீரர் உடை அணிவிக்கப்பட்டு பிரணி மலைக்கு அனுப்பப்பட்டார். அப்பொழுது அதிக மன வேதனை அடைந்தார். அங்கு இவர் சுகம் இல்லாதிருந்தபோது படையெடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது; படைகளுடன் சென்றபோது வழி தவறி நெப்போலியனுக்கு எதிரான மக்கள் வாழ்ந்த பகுதிக்குச் செல்ல நேர்ந்தது. எனவே அங்கு மக்களோடு இரண்டு ஆண்டுகள் தங்கிவிட்டார். பின்பு நெப்போலியன் உடன்பாட்டுக்கு பின்பு 1811-ல் அவர் வீடு திரும்பினார்.

இவருக்கு 25 வயதானபோது, உயர்நிலைப் பள்ளி கல்வி தொடங்கும் கட்டத்தில் இருந்தார்; மீண்டும் தன் பங்குத் தந்தையிடம் சென்று குருத்துவப் பணிக்குத் தயாரித்தார். 1812ல் இளம் குரு மாணவர் இல்லத்தில் சேர்ந்தார். அங்கு இருந்த 200 மாணவர்களில் இவரே கடைசியாக இருந்தார். பின்பு குருத்துவக் கல்லூரிக்குச் சென்று கற்க வேண்டியிருந்தது. ஆனால் பங்குத் தந்தையின் பரிந்துரையால்தான் அவர் குருப்பட்டம் பெற்றார். தன் பங்குத் தந்தைக்கே உதவியாக இருந்து மூன்று ஆண்டுகள் பணி புரிந்தார்.

ஆர்சின் குருவாக தொகு

வியான்னியின் பங்குத் தந்தை இறந்த பின்பு இவரை எங்கு அனுப்புவது என்று தெரியவில்லை. இறுதியாக மக்கள் அதிகம் இல்லாத ஆர்ஸ் என்ற கிராமத்தின் ஆலயத்துக்கு பங்குத்தந்தையாக அனுப்பப்பட்டார். அப்போது அந்த பங்கு ஆலயம் இடிந்து கிடந்தது. எனவே அதற்கு அருகில் இருந்த சிற்றாலயம் இவருடைய பங்கு ஆனது. அந்த ஆலயத்தைச் சார்ந்தவர்கள் 200 பேர் மட்டுமே இருந்தனர். அவர்கள் அனைவரும் சமயப் பற்று இல்லாதவர்கள்.

அந்த மறைமாவட்டத்தின் தலைமை குரு வியான்னியிடம் அப்பணியைக் கொடுத்தபோது, “கடவுள் அன்பற்ற மக்களிடம், அவர் அன்பை உணரச் செய்வதே உமது பணியாகும்” என்று கூறினார். இத்தகைய மேலான ஆன்மீகப் பணியையே இவர் தனது உடனிருப்பாலும், போதனைகளாலும், தவ முயற்சிகளாலும் மக்களிடையே ஆற்றினார். அதிகாலையில் எழுந்து திருப்பலி நிறைவேற்றிவிட்டு ஒப்புரவு அருட்சாதன இருக்கையில் அமரும் இவரிடம், எண்ணற்றோர் ஒப்புரவு அருட்சாதனம் பெற வந்தனர்.

நாட்கள் உருண்டோடின. பிரான்ஸ் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் இவரைத் தேடி வந்தனர்.[3] உணவு உண்பதற்கும் நோயாளிகளைச் சந்திப்பதற்கும், மறைக்கல்வி வகுப்புகள் கற்றுக் கொடுப்பதற்கும் மட்டுமே வியான்னி சிறிது நேரம் ஒதுக்குவார்; மற்ற நேரங்களில் எல்லாம் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கிக் கொண்டே இருந்தார். இவருடைய மறையுரைகள், மக்கள் மனதை ஆழமாகத் தொட்டன. குறிப்பாக இவர் மக்களைப் பாதித்த பாவங்களைப் பற்றியே எடுத்துரைத்தார்; அங்கு வாழ்ந்த விவசாயக் குடும்பத்தினர் மத்தியில் பரவிக் கிடந்த குடிப் பழக்கம், இரவு நடனங்கள், பக்தியற்ற நிலைமை ஆகியவற்றை மிகவும் அழுத்தமாக மக்கள் மனதில் பதிய வைத்தார். மக்கள் படிப்படியாக மனம் மாறினர்.

புனித அல்போன்ஸ் லிகோரி எழுதிய அறநெறிப் பாடங்களைக் கற்று இவர் தன் பணியில் பயன்படுத்தினார். குருக்கள் மக்களுக்காகத் தவம் செய்ய வேண்டும் என்ற அவசியத்தை இவர் உணர்த்தினார். இவர் ஆன்மாக்களின் பாவங்களைக் கண்டுகொள்ளும் வரம் பெற்றிருந்ததால், பாவிகளிடம் கண்டிப்புடனும் கனிவுடனும் நடந்துகொண்டார். இவர் பாவிகளிடம் மிகவும் கனிவுடன் இருப்பதாக பல குருக்களின் குற்றச்சாட்டுக்கும் ஆளானார்.

புனிதர் பட்டம் தொகு

 
பிரான்சு நாட்டில் உள்ள ஆர்ஸ் நகரில் இருக்கும் புனித ஜான் மரிய வியான்னியின் அழியாத உடல்

வியான்னி பலவிதங்களில், சாத்தானின் துன்புறுத்தல்களுக்கு ஆளானார். ஏறத்தாழ 20 வருடங்கள் சாத்தான் இவரைத் தூங்கவிடாமல் தடுத்தான்; சில சமயங்களில் இவருடைய உடலை வதைத்தான்; இவருடைய பொருட்கள் பலவும் எரிந்து போகும்படி செய்தான்; இருப்பினும் விடாமுயற்சியுடனும் துணிவுடனும் போராடி இறையருளால் வெற்றி கண்டார்.

இறை ஞானத்தின் எளிய வடிவமாக விளங்கிய ஜான் மரிய வியான்னி, இறுதியாக 1859 ஆகஸ்ட் 4ந்தேதி மரணம் அடைந்தார். 1905ஆம் ஆண்டு, திருத்தந்தை 10ம் பயஸ் இவருக்கு அருளாளர் பட்டம் வழங்கி இவரைப் ‘பங்குத்தந்தையரின் முன்மாதிரி’ என்று அறிக்கையிட்டார். 1925ல், திருத்தந்தை 11ம் பயஸ் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார். பங்குத்தந்தையரின் பாதுகாவலரான புனித ஜான் மரிய வியான்னியின் அழியாத உடல் இன்றளவும் ஆர்ஸ் தேவாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இவரது இறப்பின் 150வது ஆண்டு நினைவை சிறப்பிக்கும் விதத்தில், திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் ஜூன் 2009 - ஜூன் 2010 காலத்தை கத்தோலிக்க திருச்சபையில் குருக்களின் ஆண்டாக அறிவித்தார்.[4] அச்சமயம் வத்திக்கான் இவரின் உருவம் கொண்ட தபால் தலையை வெளியிட்டு சிறப்பித்தது.[5]

மேலும் காண்க தொகு

  • புனிதர்களின் அழியாத உடல்கள்

ஆதாரங்கள் தொகு

  1. Walsh, Michael, ed. Butler's Lives of the Saints. (New York: HarperCollins Publishers, 1991), 236.
  2. http://www.newadvent.org/cathen/08326c.htm
  3. Walsh, Michael, ed. Butler's Lives of the Saints. (New York: HarperCollins Publishers, 1991), 238.
  4. http://www.indcatholicnews.com/news.php?viewStory=14390
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-08. பார்க்கப்பட்ட நாள் 2010-08-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_வியான்னி&oldid=3573070" இலிருந்து மீள்விக்கப்பட்டது