கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்விநூல்

கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்விநூல் (Catechism of the Catholic Church) (சுருக்கம்: க.தி.ம.) என்பது கத்தோலிக்க திருச்சபை வழங்குகின்ற போதனையின் விளக்கமான தொகுப்பாக அமைந்து, திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலின் ஒப்புதலோடு வெளியிடப்பட்ட மறைக்கல்விப் பனுவல் ஆகும்.

இந்த இலச்சினை, உரோமை நகரிலுள்ள தொமித்தில்லா கல்லறைத் தோட்டத்தில் கி.பி.மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் பொறிக்கப்பட்ட ஒரு படிமத்தின் தழுவல் ஆகும். பேகனிய சமயத்தைச் சார்ந்த இப்படிமத்தைக் கிறித்தவர் தமதாக்கிக் கொண்டனர். உலகைப் பிரிந்து செல்லும் ஆன்மா நிலைவாழ்வையும் மகிழ்ச்சியையும் அடைகிறது. நல்ல ஆயர் இயேசு கிறித்து, தம்மில் நம்பிக்கை கொள்வோரை (ஆடு), காத்து வழிநடத்தி (கோல்), உண்மையெனும் இன்னிசையால் ஈர்த்து (புல்லாங்குழல்), சிலுவை மரச் சாவால் மீட்பளித்து, நிறைவாழ்வில் பங்கேற்கச் செய்து (கனிதரும் மரம்) இளைப்பாற்றி நல்குகிறார். மறைக்கல்விநூல் இவ்வுண்மையை விளக்குகிறது.[1]

இந்நூலில் ஒவ்வொரு சிறு பகுதியும் வரிசையாக எண் குறிக்கப்பட்டு, ஒவ்வொரு அதிகாரத்தின் இறுதியிலும் சுருக்கத் தொகுப்பும், ஒப்புமைப் பகுதிகளுக்குக் குறுக்கு அமைப்புக் குறிப்புகளும், விவிலியக் குறிப்புகளும், திருச்சபைத் தந்தையர் நூற்குறிப்புகளும் தரப்பட்டுள்ளன. இவ்வாறு இந்நூல் கத்தோலிக்க கிறித்தவ நம்பிக்கைத் தொகுப்பைக் கிறித்தவரும் பிறரும் தெளிவாக அறிந்து புரிந்துகொள்ள பெரும் துணையாக அமைந்துள்ளது.

க.தி.ம. உலகின் பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது. ஆயினும், அதன் மூல பாடம் இலத்தீன் மொழியிலேயே உள்ளது.

வரலாற்றில் மறைக்கல்விநூல் தொகு

இங்கிலாந்தைச் சேர்ந்த அல்க்குவின் என்பவர் 8ஆம் நூற்றாண்டில் ஒரு மறைக்கல்விநூலை உருவாக்கினார். அதன் பின் விரிக்கப்பட்ட மறைக்கல்விநூல்கள் வெளியாயின. திருச்சபையின் சீர்திருத்தக் காலத்தில் மார்ட்டின் லூத்தர் 1529இல் "சிறிய குறிப்பிடம்" (Der Kleine Katechismus) என்னும் மறைக்கல்விநூலை செருமானிய மொழியில் வெளியிட்டார். இறையியலார் மற்றும் பங்குத்தந்தையர் பயன்படுத்துவதற்காக "பெரிய குறிப்பிடம்" (Der Große Katechismus) என்னும் நூலையும் எழுதினார்.

அப்பின்னணியில் கத்தோலிக்க இறையியலாரான பீட்டர் கனீசியுஸ் என்பவர் (1521-1597) 1555இல் மாணவர்கள் பயன்பாட்டுக்காகச் "சிறிய குறிப்பிடம்" என்னும் மறைக்கல்விநூலைத் தொகுத்தார். "கிறித்தவ போதனைச் சுருக்கம்" என்னும் நூலையும் இலத்தீன் மொழியிலும் செருமானிய மொழியிலும் வெளியிட்டார். இம்முறையில் கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்விநூல் மரபைத் தொடங்கியவர் பீட்டர் கனீசியுஸ் என்று கூறலாம்.

திருச்சபையில் சீர்திருத்தமும் மறுமலர்ச்சியும் கொணர்வதற்காகக் கூட்டப்பட்ட திரெந்து பொதுச்சங்கம்(1545-1563) கத்தோலிக்க கொள்கையை விளக்கி உரைக்கும் முறையில் பங்குத்தந்தையர்க்கும் கத்தோலிக்க மக்களுக்கும் பயன்படுவதற்காக "மறைக்கல்விநூல்" உருவாக்கப் பணித்தது. அவ்வாறு உருவாக்கப்பட்ட மறைக்கல்விநூல் பீட்டர் கனீசியுஸ் வெளியிட்ட மறைக்கல்விநூலின் பகுதிகளை உள்ளடக்கிய விதத்தில் அமைக்கப்பட்டு, கத்தோலிக்க நம்பிக்கை அறிக்கை, திருவருட்சாதனங்கள், பத்துக் கட்டளைகள், இறைவேண்டல் என்னும் நான்கு பெரும் பகுதிகளைக் கொண்டிருந்தது.

திரெந்து பொதுச்சங்கத்தின் முடிவுப்படி வெளியான "உரோமை மறைக்கல்விநூல்" (Roman Catechism) உலகளாவிய திருச்சபைக்கும் பயன்படும் விதத்தில் ஆக்கப்பட்டு இலத்தீனில் வெளியிடப்பட்டது. பின்னர் வேறு பல நாட்டு மொழிகளில் பெயர்க்கப்பட்டது. அதன் பிறகு இருபதாம் நூற்றாண்டில் தான் வேறு பல தனி மறைக்கல்விநூல்கள் வெளியாயின.

க.தி.ம. வெளியீட்டு வரலாறு தொகு

இருபதாம் நூற்றாண்டுக் கத்தோலிக்க திருச்சபையின் முக்கிய நிகழ்வாகிய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் (1962-1965) நிறைவேறிய 20ஆம் ஆண்டின்போது, சனவரி 25, 1985இல் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ஒரு சிறப்பு ஆயர் மன்றத்தைக் கூட்டினார். அம்மன்றக் கூட்டத்தில் பங்கேற்ற ஆயர்கள் அனைத்துலக திருச்சபைக்கும் பயன் நல்கும் விதத்தில் ஒரு புதிய மறைக்கல்விநூல் தொகுத்து வெளியிடலாம் என்று முடிவுசெய்தனர். அதைத் தொடர்ந்து திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 12 ஆயர்களையும் கர்தினால்மார்களையும் உள்ளடக்கிய ஒரு குழுவை உருவாக்கி அதை மறைக்கல்விநூல் தயாரிப்புத் திட்டத்திற்குப் பொறுப்பாக நியமித்தார்.[2] அக்குழுவுக்குத் துணைநல்கும் விதத்தில் ஆயர்களையும் இறையியல் மற்றும் மறைக்கல்வித்துறை வல்லுநர்களை உள்ளடக்கிய ஏழுபேர் கொண்ட ஒரு குழுவும் உருவாக்கப்பட்டது.[2]

மறைக்கல்விநூல் தயாரிப்புக் குழு உருவாக்கிய முதல் வரைவு உலகில் உள்ள அனைத்து கத்தோலிக்க ஆயர்களுக்கும் பொறுப்பான பிற குழுக்களுக்கும் அனுப்பப்பட்டது. அவர்களுடைய பரிந்துரைகளைப் பெற்று, அவற்றின் அடிப்படையில் முதல் வரைவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

மறைக்கல்விநூலின் இறுதி பாடத்தை திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 1992, சூன் 25ஆம் நாள் அங்கீகரித்து, அதே ஆண்டு அக்டோபர் 11ஆம் நாள் (இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கிய முப்பதாம் ஆண்டு) ஓர் ஆவணத்தின் வழியாக (Fidei depositum) அறிவிப்பு வழங்கினார்.[2]

க.தி.ம. முதலில் பிரெஞ்சு மொழியில் வெளியாதல் தொகு

கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்விநூல் (க.தி.ம.) முதலில் 1992ஆம் ஆண்டில் Catéchisme de l'Église Catholique என்ற தலைப்பில் பிரெஞ்சு மொழியில் வெளியிடப்பட்டு, பின்னர் உலக மொழிகள் பலவற்றில் பெயர்க்கப்பட்டது.[3] ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ஆங்கில மொழிபெயர்ப்பு அந்நாட்டு ஆயர் பேரவையின் மேற்பார்வையில் 1994இல் வெளியானது.[4] அந்த வெளியீட்டில் ஒரு குறிப்பும் தரப்பட்டது. அதாவது, இலத்தீன் மூல பாடம் வெளியிடப்படும்போது அதற்கு ஏற்ப ஆங்கில மொழிபெயர்ப்பும் தழுவியமைக்கப்படும் என்ற குறிப்பு இணைக்கப்பட்டிருந்தது.[5]

இலத்தீன் மூல பாடம் வெளியாதல் தொகு

1997ஆம் ஆண்டு, ஆகத்து 15ஆம் நாள், மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவன்று, திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்விநூலின் இலத்தீன் மூல பாடத்தை Laetamur Magnopere என்னும் ஆவணத்தின் வழியாக வெளியிட்டார்.[6] இதுவே அதிகாரப்பூர்வமான பாடம் ஆகும். இதுவே பிற மொழிபெயர்ப்புகளுக்கு மூல பாடமாகவும் அமையும்.[7]

சில திருத்தங்கள் தொகு

இலத்தீன் மூல பாடம் வெளியானதும், அப்பாடத்திற்கு ஏற்ப சில மாற்றங்கள் பிரெஞ்சு பதிப்பில் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.[8]

இவ்வாறு செய்யப்பட்ட மாற்றங்களுள் ஒன்று கத்தோலிக்க திருச்சபை மரண தண்டனை குறித்து அளிக்கின்ற போதனை ஆகும். இப்பொருள் பற்றி திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் தாம் 1995இல் வெளியிட்ட "உயிர்போற்றும் நற்செய்தி" (Evangelium Vitae) என்னும் சுற்றுமடலில் வழங்கிய போதனையே மறைக்கல்விநூலிலும் தரப்பட்டது.[9]

இதன் விளைவாக, பிரெஞ்சு பதிப்பிலும் அதன் அடிப்படையில் செய்யப்பட்ட ஆங்கிலம் போன்ற பிற மொழிப் பதிப்புகளிலும் மாற்றங்கள் செய்ய வேண்டியதாயிற்று. அந்த மாற்றங்களைத் தாங்கிய வெவ்வேறு மொழி பெயர்ப்புகள் "இரண்டாம் பதிப்பு" என்னும் பெயரோடு வெளியிடப்பட்டன.

ஐக்கிய அமெரிக்க நாடுகளில், அந்நாட்டு ஆயர்கள் இலத்தீன் மூல பாடத்தை ஆதாரமாகக் கொண்டு புதியதொரு மொழிபெயர்ப்பை 1997இல் வெளியிட்டனர்.[10] அப்பதிப்பில் சில புதிய கூறுகள் சேர்க்கப்பட்டன. அருஞ்சொற்பட்டியல் மற்றும் பகுப்பாய்வுப் பொருளடைவு ஆகியவை புதிதாக இணைக்கப்பட்டன.[11]

க.தி.ம. ஏட்டின் முக்கியத்துவம் தொகு

கத்தோலிக்க திருச்சபை வழங்குகின்ற போதனையின் விரிவான தொகுப்பு என்ற முறையில் இந்த மறைக்கல்விநூல் திருச்சபை மக்களிடையே நல்லுறவை வளர்க்கப் பயன்படும் என்றும், இந்த ஏட்டின் அடிப்படையில் கிறித்தவ நம்பிக்கைத் தொகுப்பைச் சரியாக போதிக்க முடியும் என்றும் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் தாம் 1992இல் வெளியிட்ட Fidei depositum என்ற ஏட்டில் கூறியுள்ளார்.[2]

க.தி.ம. ஏட்டின் பொருளடக்கம் தொகு

மறைக்கல்விநூல் கத்தோலிக்க மரபில் "கிறித்தவ சமயக் கொள்கைகளைப் பொதுவாகக் கேள்வி-விடை பாணியில் கற்கத்தக்க விதத்தில் வழங்குகின்ற ஏடு" என்னும் பொருள் கொண்டது.[12] திருச்சபையின் தொடக்க நாட்களிலிருந்தே போதனைத் தொகுப்புகள் இருந்துவந்துள்ளன. மறைக்கல்விநூல் அத்தொகுப்புகளில் அடங்கியுள்ள போதனைகளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் கற்கத்தக்க விதத்தில் வழங்குகின்றன.

தேவைக்கு ஏற்ப, தனி மறைக்கல்விநூல்களை உருவாக்குவதற்கு ஆதாரமாக க.தி.ம. அமைந்துள்ளது. இளைஞர், முதியோர் போன்ற தனிக் குழுக்களுக்கு ஏற்ற மறைக்கல்விநூல்கள் உருவாக்கப்படுவது வழக்கம். எடுத்துக்காட்டாக, இளைஞர்க்குப் பொருத்தமான "YouCat" என்னும் மறைக்கல்விநூல் உருவாக்கப்பட்டுள்ளது. அதுபோலவே ஐக்கிய அமெரிக்க நாடுகளில் "வளர்ந்தோருக்கான மறைக்கல்விநூல்" (U.S. Catechism for Adults) வெளியிடப்பட்டுள்ளது. விரிவான விளக்கங்கள் கொண்ட போதனை நூல் "பெரிய மறைக்கல்விநூல்" (major catechism) என்னும் பெயர்பெறுகிறது.

க.தி.ம. வெளியிடப்பட்டபோது, அது தனித் தேவைகளை முன்னிட்டு வெவ்வேறு நாடுகளிலோ மண்டலங்களிலோ உருவாக்கப்படுகின்ற போதனை நூல்களுக்கு எடுத்துக்காட்டாகவும், நம்பகமான ஆதாரமாகவும் அமையும் என்று திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் கூறினார்.[13]

க.தி.ம. ஏட்டின் பிரிவுகள் தொகு

க.தி.ம. ஏடு நான்கு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

  • கிறித்தவ நம்பிக்கை அறிக்கை (Creed)
  • கிறித்தவ மறைபொருள் கொண்டாட்டம்: வழிபாடும் திருவருட்சாதனங்களும்
  • கிறித்துவில் வாழ்வு (கிறித்தவ அறநெறி - பத்துக் கட்டளைகள்)
  • கிறித்தவ இறைவேண்டல்

மேற்கூறிய நால்வகைப் பிரிவில் அடங்கியுள்ளவை கிறித்தவ சமயத்தின் நான்கு தூண்களாகக் கருதப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் அடங்கியுள்ள பகுதிகளுக்கு அடிக்குறிப்புகள் பல தரப்படுகின்றன. போதனையின் அடிப்படையாக இருக்கின்ற விவிலிய பாடங்கள் முதலிடம் பெறுகின்றன. தொடக்க காலக் கிறித்தவ அறிஞர்களான "திருச்சபைத் தந்தையர்களின்" படைப்புகள் மிகப் பல அடிக்குறிப்புகளில் தரப்படுகின்றன. அதுபோலவே திருச்சபையின் வாழ்வில் நடந்துள்ள பொதுச்சங்கங்களின் போதனைகள் அடிக்குறிப்புகளில் கொடுக்கப்படுகின்றன. சிறப்பாக இருபதாம் நூற்றாண்டில் நடந்தேறிய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் போதனை விரிவாகத் தரப்படுகிறது.[14] அண்மைக்காலத் திருத்தந்தையர்கள் அவ்வப்போது வெளியிட்டுள்ள கொள்கை விளக்க ஏடுகளும் க.தி.ம. ஏட்டின் அடிக்குறிப்புகளில் தரப்பட்டுள்ளன.

கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி சுருக்கம் தொகு

2012ஆம் ஆண்டு, தமிழக இலத்தீன் ஆயர் பேரவையின் வழிகாட்டலின் கீழ், தமிழக முப்பணி நிலையத்தால் "கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி சுருக்கம்" என்னும் நூல் வெளியிடப்பட்டது. இது, வத்திக்கான் 2006இல் Compendium of the Catechism of the Catholic Church என்னும் பெயரில் வெளியிட்ட நூலின் தமிழாக்கம் ஆகும்.

இந்நூல், க.தி.ம. ஏட்டின் உள்ளடக்கத்தைக் வினா-விடை வடிவில் சுருக்கமாகத் தருகின்றது.[15]

குறிப்புகள் தொகு

  1. மறைக்கல்விநூலின் "பதிப்புரிமை"ப் பக்கத்திலிருந்து: பக். iv.
  2. 2.0 2.1 2.2 2.3 "FIDEI DEPOSITUM". Libreria Editrice Vaticana. 1992-10-11. பார்க்கப்பட்ட நாள் 2007-10-05.
  3. Catéchisme de l'Église Catholique. Tours/Paris: Mame/Plon. 1992. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:2-266-00585-5. https://archive.org/details/catechismedelegl0000cath. 
  4. copyright 1994, United States Catholic Conference, Inc., Libreria Editrice Vaticana
  5. பதிப்புரிமைத் தகவல், பக். ii.)
  6. The Latin-text copyright is 1994, 1997, Libreria Editrice Vaticana, Citta del Vaticano.
  7. "LATIN EDITION OF CATECHISM PROMULGATED". L'Osservatore Romano. 1997-09-17. Archived from the original on 2007-10-28. பார்க்கப்பட்ட நாள் 2007-10-05.
  8. "MODIFICATIONS from the Edito Typica". Amministrazione Del Patrimonio Della Sede Apostolica. பார்க்கப்பட்ட நாள் 2007-10-05.
  9. "The death penalty and the catechism". United States Conference of Catholic Bishops. Archived from the original on 12 மார்ச் 2013. பார்க்கப்பட்ட நாள் 12 May 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. English translation of the Catechism of the Catholic Church: Modifications from the Editio Typica, copyright 1997, United States Catholic Conference, Inc.—Libreria Editrice Vaticana.
  11. Catechism of the Catholic Church, Second Edition, "revised in accordance with the official Latin text promulgated by Pope John Paul II". (From the title page.)
  12. மறைக்கல்விநூலின் தன்மை
  13. மறைக்கல்விநூல்களுக்கு ஆதார ஏடு
  14. "க.தி.ம. ஏட்டின் அமைப்பு". Archived from the original on 2007-12-28. பார்க்கப்பட்ட நாள் 2012-11-22.
  15. கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி சுருக்கம், திண்டிவனம்: தமிழக முப்பணி நிலையம், 2012, பக். xxii+238.

வெளி இணைப்புகள் தொகு

க.தி.ம. பாடம் முழுவதும் கிடைக்கும் தளங்கள் தொகு

க.தி.ம. பற்றிய குறிப்புகள் கிடைக்கும் தளங்கள் தொகு

க.தி.ம. தொகுப்பு கிடைக்கும் தளம் தொகு

  • Compendium at Vatican/Holy See website available in Byelorussian, English, French, German, Hungarian, Indonesian, Italian, Lithuanian, Portuguese, Romanian, Russian, Slovenian, Spanish, and Swedish (as of 17 July 2011)