கம்பத்துமலை பாறை ஓவியங்கள்
கம்பத்துமலை பாறை ஓவியங்கள் என்பவை தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் நாகரசம்பட்டியை அடுத்து உள்ள நா. தட்டக்கல் சிற்றூருக்கு அருகில் கானப்பாறைக்கு கிழக்கே கம்பத்துமலை என்ற இடத்தில் அமைந்துள்ள பாறை ஓவியங்கள் ஆகும்.[1]
கம்பத்துமலையின் மேல் சரிவான நிலப்பகுதியும், ஆங்காங்கே சிறு சிறு பாறைகளும் காணப்படுகின்றன. இங்கு ஒரு பாறையில் அடத்தியாக வரையப்பட்ட இரு மனித உருவங்களின் ஓவியங்கள் காணப்படுகின்றன. இந்த ஓவியங்கள் வெயிலாலும், மழையாலும் பாதிக்கபடும் இடத்தில் உள்ளதால் இவற்றின் வண்ணம் சிதைந்து மங்கிய நிலையில் காணப்படுகின்றன. இந்த ஓவியங்கள் சுமார் மூன்று அடி உயரம் கொண்டதாக பெரிய அளவில் உள்ளன. இதில் உள்ள இரண்டு மனித உருவங்கள் வெவ்வேறு தோற்றங்களில் காணப்படுகின்றன. வலது புறம் தீட்டபட்டுள்ள மனித உருவம் நடந்து செல்வது போல பக்கவாட்டது தோற்றத்தில் வரையப்பட்டுள்ளது. அதன் அருகில் அடர்த்தியாக வரையப்பட்ட சதுரவடிவம் காணப்படுகிறது. சதுர வடிவத்திற்கு மேற்புரம் கூரை வடிவம் போன்ற விளிம்பு அமைப்புகள் வரையப்பட்டுள்ளன. ஒரு வகையில் பார்தால் இருப்பிடத்துக்கு திரும்பும் மனிதனின் ஓவியம் போல உள்ளது.[1]
இன்னொரு ஓவியம் முன்பு விவரிக்கபட்ட ஓவியத்தில் இருந்து 15 அடி தொலைவில் வலது புறம் உள்ளது. இந்த ஓவியம் நேராக பார்த்த நிலையில் நின்ற நிலையில் உள்ள மனித உருவமாக உள்ளது. இந்த உருவத்தின் இரு கைகளும் பக்கவாட்டில் நீட்டியபடி உள்ளன. இடது கையில் வில் அல்லது ஏதோ ஒரு சிறு உயிரினத்தை வைத்துள்ளது போன்று உள்ளது. [1]