பாறை ஓவியம்
பாறை ஓவியம்(Rock art) அல்லது பாறைச் செதுக்கல்கள்(Petroglyph)என்பது வரலாற்று-முற்கால மனிதர்களால் செதுக்கிச் செய்யப்பட்ட (அ) வரையப்பட்ட வரி-வடிவ ஓவியத்தைக் குறிக்கும்.[1] வரலாற்றுக்கு முற்பட்ட கால மக்கள் விட்டுச் சென்ற பொருள்கள் மற்றும் அவர்கள், தாங்கள் வாழ்ந்த இடங்களில் உள்ள பாறைகளிலும், குகைகளிலும் வரைந்து வைத்துள்ள ஓவியங்கள் ஆகியவை இவ்வகையுள் அடங்கும்.
உலகின் பல நாடுகளில் இத்தகைய பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. உதாரணமாகப் பிரான்சு, ஸ்பெயின், இத்தாலி, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைக் கூறலாம். இந்நாடுகளில் கிடைத்துள்ள வரலாற்றுக்கு முற்பட்ட பாறை ஓவியங்களைப் போலவே இந்தியாவிலும் பல இடங்களில் இப்பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. முதல் முதலாக உலகில் பாறை ஓவியமானது ஸ்பெயின் நாட்டில் அல்டமிரா என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் இந்தியாவில் பீம்பேட்கா என்னுமிடத்திலும், தமிழகத்தில் மல்லபாடி என்னும் இடத்திலும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை ஐம்பது இடங்களுக்கு மேல் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை அறிவதற்கு இத்தகு பாறை ஓவியங்கள் பெரிதும் பயன்படுகின்றன. இவைகளுள் பல்வேறு கண்டங்களையும் தாண்டிய சில பொதுவான பண்புகளுடன் விளங்குகின்றன என்பதை அறிஞர்கள் இந்த ஓவியங்களை வைத்து நிறுவியுள்ளனர்.[2][3]
பல்வேறு கண்டங்களிலும் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்களில், அவற்றின் தோற்றம், குறியீடுகள், அவை வெளிப்படுத்தும் சிந்தனைகள் ஆகியவை பொதுவானதாக அமைகின்றன."[4] இதன் மூலம் வரலாற்றுக்கு முற்பட்ட மக்கள் ஓவியங்கள் மூலம் தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தினர் என்பதை அறிய முடிகிறது.[5] ஜான் காலிங்வுட், ரொனால்டு மோரிஸ் ஆகியோர் இவ்வோவியங்கள் பற்றி ஆராய்ந்துள்ளனர்.[6]
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் (7,000-3,000 B.C.)
தொகுவரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்பதற்கு எழுத்துகளைப் பயன்படுத்துவதற்கு முந்தைய காலம் என வரலாற்று அறிஞர்கள் விளக்கம் தருவார்கள்.[2][3][7].[8] வரலாற்றுக்கு உட்படும் காலத்தைவிடவும் பல மடங்கு அதிகமான கால எல்லைகளைக் கொண்டதாக வரலாற்றுக்கு முந்தைய காலச்சூழல் அமைந்திருக்கிறது. இன்றைய காலஅளவிற்கேற்ப சுமார் 20 இலட்சம் ஆண்டுகளிலிருந்து கி.மு 400 வரையிலான ஆண்டுகளை தொல்பழங்காலம் என உலக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.[9] இக்காலகட்ட சான்றுகள்தான் ஒரு சமூகத்தின் மிகக்கூடுதலான தொன்மையை, மூல கட்டமைப்பை வெளிப்படுத்த, விளக்க உதவுகின்றன. அவ்வகையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் மிக நீண்டதாக இருப்பினும், அக்காலத்து, மனித எச்சங்கள், மக்கள் விட்டுச் சென்ற சின்னங்கள் மிகவும் குறைந்த அளவிலேயே கிடைக்கின்றன.
அந்தவகையில் மிகத் தொன்மையான ஊழிக்கால மனித எச்சங்கள் ஆப்பிரிக்காவிலும் இந்தியாவில் சோன்பள்ளத்தாக்கிலும், பீக்கிங், ஜாவா ஆகிய பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மனித இனத்தின் தோற்றம், வளர்ச்சி முதலியவற்றைக் குறித்து அறிய வரலாற்று அறிஞர்கள் அம்மக்களின் படைப்புகளைக் கொண்டும், தொழில் நுட்ப அடிப்படையிலும் பல்வேறு கால வரைமுறைகளையும் வகுத்துள்ளனர். சுருக்கமாக மனித இன வரலாற்றை,
- வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
- வரலாற்றுக் காலம்
எனப் பகுப்பர்.
பாறை ஓவியங்கள்
தொகுபழங்காலத்தில் மக்கள் இயற்கையான குகைத் தளங்களில் வாழ்ந்தனர். எனவே தாங்கள் வாழ்ந்த குகைகளில் ஓவியங்களை வரைந்தனர். குகைகளுக்கு அருகே இருந்த பாறைகளிலும் ஓவியங்களை வரைந்துள்ளனர். குகைகளில் இருட்டாக இருந்ததால் அதிக அளவில் பாறைகளில் ஓவியங்களை வரைந்துள்ளனர். எனவே இவ்வோவியங்களைக் குகை ஓவியங்கள் என்று அழைப்பதை விடப் பாறை ஓவியங்கள் என அழைப்பது பொருந்தும்.
அக்கால மக்கள் தங்களது வாழ்வின் நிகழ்வுகளைப் பதிவு செய்ய வேண்டுமென்று எண்ணியதால் ஓவியங்களை வரைந்திருக்கலாம். அவர்களுக்கு வேட்டையாடுதலே முக்கியத் தொழில். எனவே பல்வேறு மிருகங்களைத் தாம் வேட்டையாடுவது போல ஓவியங்களை வரைந்தால், வேட்டையாடும் போது அதிக மிருகங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும், விலங்குகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெறலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் அவற்றை வரைந்திருக்கலாம்[10]
வகைகள்
தொகுபாறை ஓவியங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித இனத்தின் வாழ்க்கைச் சூழலைச் சித்திரிப்பனவாக அமைகின்றன. அவர்களது எண்ணங்கள் நம்பிக்கைகள் முதலியவற்றைப் பிரதிபலிப்பனவாக அமைகின்றன.[11] வெவ்வேறு விதமான வடிவங்களிலும், வண்ணங்களிலும் அமைகின்றன. இந்த ஓவியங்களின் வடிவம் மற்றும் இந்த ஓவியங்களில் இடம் பெறுகின்ற உருவங்களை வைத்து அவற்றை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
முதல் நிலை
தொகுமுதல் நிலை ஓவியங்கள் தொல்பழங்காலத்தைச் சேர்ந்த மிகத் தொன்மையான ஓவியங்களாகும். இவற்றில் விலங்கின வடிவங்கள் மிகுதியும் இடம் பெற்றிருக்கும். இத்தகைய ஓவியங்கள் தமிழகத்தில் குறைவாகவே காணப்படுகின்றன.
இரண்டாம் நிலை
தொகுஇரண்டாம் நிலை ஓவியங்களில் மிகுதியாக வேட்டைக் காட்சிகளே இடம் பெறும். இந்தியப் பாறை ஓவியங்களில், காண்டா மிருகம், சிங்கம், புலி போன்ற விலங்கினங்கள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும். மான், ஆடு, பன்றி, மாடு முதலிய வேட்டைக்குரிய விலங்குகள் அதிகமாக இடம் பெறும்.
மூன்றாம் நிலை
தொகுஇவ்வகை ஓவியங்களில் மனித வடிவங்கள் அதிகமாக இடம் பெறும். போர்க் காட்சிகள் சிறப்பாக இடம் பெற்றிருக்கும். வேட்டைக் காட்சிகளாக இருப்பினும் மனித உருவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கும். சடங்கு மற்றும் நடன நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருக்கும்.
பயன்படுத்திய வண்ணங்கள்
தொகுமுதல் நிலை ஓவியங்களில் கோடுகளாலான அமைப்பு மட்டுமின்றி அடர்த்தியான வண்ணப் பூச்சு அமைப்புக் காணப்படும். செந்நிறம் அதிக அளவில் பயன்படுத்தப் பட்டிருக்கும். இரண்டாம் நிலை ஓவியங்களில் செந்நிறம், வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்கள் இடம் பெறும்.
காலத்தைக் கணித்தல்
தொகுபாறை ஓவியங்களில் பயன்படுத்தப் பட்ட வண்ணக் கலவையினை இரசாயனச் சோதனை செய்து அவற்றின் காலத்தைக் கணிக்கலாம். மேலும் ஓவியங்களின் வரைவு முறையினை வைத்தும் அவற்றின் வடிவமைப்பைக் கொண்டும் காலம் கணிக்கப்படுகிறது. எடுத்துக் காட்டாக வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பாறை ஓவியங்கள் அடர்த்தியான வண்ணப் பூச்சு முறையில் வரையப்பட்டிருக்கும். இவைகளில் சிவப்பு நிறமோ அல்லது வெள்ளை நிறமோ அதிக அளவில் பயன்படுத்தப் பட்டிருக்கும். ஆனால் இரண்டு நிறங்கள் பயன்படுத்தப்பட்டிருக்காது.
அடர்த்தியான வண்ணப் பூச்சு முறையைத் தொடர்ந்து வரும் வளர்ச்சி நிலை கோட்டோவியம் எனப்படும் சுற்று வரை கோட்டு முறை ஆகும். இரு வண்ண ஓவியங்கள் எனப்படுபவை மேற்கண்டவற்றுள் பிந்தைய காலத்தைச் சேர்ந்த ஓவியங்களாகக் கருதப்படுகின்றன.
உருவம், வண்ணம், ஆகியவற்றைக் கொண்டு ஓவியத்தின் காலம் கணிக்கப்படுவதுடன் அவ்வோவியம் கிடைத்த இடத்தினருகில் கிடைக்கும் தொல்லியல் சான்றுகளை வைத்தும் காலம் கணிக்கப்படுகிறது. அவ்வகையில் தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்ட பாறை ஓவியங்களைத் தொல்பழங் காலத்தவை என்று கூற இயலாது. இவை மூன்றாம் நிலை எனக் கூறப்படும் பெருங் கற்காலத்தின் இறுதிக் காலத்தையும், வரலாற்றுக் காலத்தின் தொடக்கத்தினையும் சார்ந்தவையாகும். சுருங்கச் சொன்னால் சங்க காலத்தை ஒட்டியவை எனலாம்.
வடிவ அமைப்பு
தொகுஓவியங்களின் வடிவ அமைப்பைக் கொண்டு அவற்றை மூன்று வகையாகப் பிரிப்பர். அவை:
பக்கவாட்டு முறை
தொகுபக்கவாட்டு முறை என்பது ஓவியத்தில் முகம் மற்றும் உடல் ஆகியவற்றின் ஒரு பக்கம் தெரியும்படி வரைவதாகும். வரலாற்றுக் காலத்திற்கு முன்னர் வரையப்பட்ட பாறை ஓவியங்கள் பக்க வாட்டு முறையில் அடர்த்தியான வண்ணக் கலவையால் வரையப்பட்டிருக்கும்.
நேர் வடிவ முறை
தொகுநேர்வடிவ முறை என்பது ஓவியம் நம்மை நேராகப் பார்ப்பது போல அமைந்திருப்பதாகும். நேர் வடிவ முறை முக அமைப்பைச் சிறப்பாகக் காட்டும். உதாரணமாக மனித உருவங்களைக் கூறலாம்.
திரும்பிக் காணும் முறை
தொகுஉடலைப் பக்கவாட்டு முறையில் அமைத்து முகத்தை மட்டும் திருப்பிக் கொண்டிருப்பது போல் அமைந்திருப்பதைத் திரும்பிக் காணும் முறை என்பர். மிகத் தொன்மையான ஓவியங்களில் பசு, மான் முதலியவை திரும்பிக் காணும் முறையில் வரையப்பட்டிருக்கும்.
சுட்டுகள்
தொகு- ↑ http://www.wordwebonline.com/search.pl?w=petroglyph
- ↑ 2.0 2.1 Peratt, A. L., ‘Characteristics for the Occurrence of a High-current, Z-pinch Aurora as Recorded in Antiquity’, IEEE Transactions on Plasma Science, 31. 6 (December 2003), 1192-1214
- ↑ 3.0 3.1 Peratt, A. L., J. McGovern, A. H. Qöyawayma, M. A. van der Sluijs & M. G. Peratt, ‘Characteristics for the Occurrence of a High-Current Z-Pinch Aurora as Recorded in Antiquity Part II: Directionality and Source’, IEEE Transactions on Plasma Science, 35. 4 (2007), 778-807
- ↑ J. Collingwood Bruce (1868; cited in Beckensall, S., Northumberland's Prehistoric Rock Carvings: A Mystery Explained. Pendulum Publications, Rothbury, Northumberland. 1983:19)
- ↑ Ancient Indians made 'rock music', BBC News Friday, 19 March, 2004
- ↑ Ronald Morris, The Prehistoric Rock Art of Galloway and The Isle of Man (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7137-0974-2 , Blandford Press 1979
- ↑ H.D. Sankalia. Prehistoric Art in India. Carolina Academic Pr. பன்னாட்டுத் தரப்புத்தக எண் [[Special:BookSources/பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0890890919 (0-89089-091-9)|[[பன்னாட்டுத் தரப்புத்தக எண்]] [[Special:BookSources/0890890919|0890890919]] (0-89089-091-9)]].
{{cite book}}
: Check|isbn=
value: invalid character (help) - ↑ Glya Daniel (1972). One hundred years of old world prehistory., one Hundred Years of Anthropiolgy. Londan.: J.O.Brew (Ed). pp. P.61.
{{cite book}}
:|pages=
has extra text (help) - ↑ Prehistory and Protohistory of India and Pakistan. Poona. 1974. pp. P.07.
{{cite book}}
:|pages=
has extra text (help); Check date values in:|year=
(help) - ↑ முனைவர் லோ. மணிவண்ணன். "பாறை ஓவியங்கள்". Tamil virtual University. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 27, 2012.
- ↑ see Lewis-Williams, D. 2002. A Cosmos in Stone: Interpreting Religion and Society through Rock Art. Altamira Press, Walnut Creek, Ca.