கருநாடக இசைச் சொற்கள் விளக்கம்

பொதுவான சொற்கள்

தொகு
  • காந்தர்வ வேதம் : இது 4 உபவேதங்களில் ஒன்று. சங்கீதத்தைப் பற்றிய வேதம்.
  • காத்ர வீணை : மனிதனின் குரல். மிடற்றுக் கருவி என்றும் சொல்லப்படும்.[1][2]
  • வாக்கேயக்காரர் : உருப்படிகளை இயற்றிய இசைப் புலவர்கள். இசை, சாகித்தியம் என்னும் இரண்டையும் இயற்றியவரையே வாக்கேயக்காரர் என்பர்.
  • கல்பித சங்கீதம் : பெரியோர்கள் ஆக்கியுள்ள உருப்படிகள் கல்பித சங்கீதம் ஆகும். இதற்கு எதிர்ப்பதம் மனோதர்ம சங்கீதம் ஆகும்.
  • பூர்வக்கிரந்தம் : முற்காலத்தில் ஆக்கப்பட்ட நூல்கள்.

உதாரணம்: சங்கீத ரத்னாகரம்.

தொழிற்நுட்பமான சொற்கள்

தொகு
  • அபூர்வ இராகம் : அதிகமாகப் பழக்கத்தில் இல்லாத இராகம்.

உதாரணம்: நாததரங்கிணி, செஞ்சு காம்போஜி

  • திரிஸ்தாயி இராகம் : மந்திர ஸ்தாயி, மத்திய ஸ்தாயி, தாரஸ்தாயி என்னும் மூன்று ஸ்தாயிகளிலும் சஞ்சாரம் செய்யக்கூடிய ராகம்.

உதாரணம்: மோகனம்.

  • அஷ்டகம் : ஸ ரி க ம ப த நி ஸ் என்னும் எட்டு ஸ்வரங்கள் அடங்கிய கோர்வை.
  • கடபஜாதி சங்க்யை : மேளகர்த்தாக்களின் பெயர்களை இந்த சூத்திரச் சக்கரத்தின் உதவியுடனேயே வைக்கப்பட்டுள்ளது. மேளகர்த்தாக்களில் முதல் இரண்டு எழுத்துக்களுக்கும் உரிய இலக்கங்கள் இச்சூத்திரத்தினால் பார்க்கப்படும். இதில் 0 - 9 வரை இலக்கங்கள் உண்டு. பின்பு அந்த எண்ணை முன் பின்னாக மாற்றும் பொழுது அப்பெயலுக்குரிய மேள்கர்த்தா இலக்கம் பெறப்படும். உதாரணமாக, தீரசங்கராபரணம் என்னும் பொழுது தீ - 9, ர - 2, எனவே 92. இதைத் திருப்பினால் 29. இந்த நோக்கத்துடனேயே சங்கராபரணம் தீரசங்கராபரணம் எனப்பட்டது.
  • கானகாலம் : இராகத்தைப் பாடுவதற்குத் தகுதியான காலம். சில இராகங்களைக் குறிப்பிட்ட வேளைகளிலும், இன்னும் சிலவற்றை எல்லா வேளைகளிலும் பாடலாம் என்னும் நியமம் உண்டு. அவற்றுக்கு ஏற்பட்ட கானகாலங்களில் கேட்டால் மிக இனிமையாக இருக்கும்.

உதாரணம்: கல்யாணி - மாலை நேரம்.

  • ஜதி : சொற்கட்டு.

தகதிமி, தகஜொனு, ததிங்கிணதொம் போன்ற தாள சம்பந்தமான சொற்கட்டுக்கள்.

  • தாட்டுப் பிரயோகம் : வக்ரப் பிரயோகங்களைக் கொண்ட தொடர். ஒவ்வொரு இராகத்திலும் இன்ன தாட்டுப் பிரயோகங்கள் வரலாமென நிபந்தனை உண்டு. உ+ம்: சங்கராபரணத்தில் ரி நிஸ்த நிப தம பக மரி கஸ
  • ஜீவ ஸ்வரம் : இராகத்திற்கு உயிர் நிலையான ஸ்வரம். ஒரு இராகத்தின் களையை தெற்றென விளக்குவது அதன் ஜீவ ஸ்வரங்களாகும்.

உதாரணம்: சிம்மேந்திரமத்திமம் ராகத்தில் ரி, க, ம, நி

  • இராகச் சாயா ஸ்வரம் : குறிப்பிட்ட இராகத்தின் ஸ்வரூபத்தை வெளிப்படுத்தக் கூடிய ஸ்வரங்கள்.

உதாரணம்: பிலகரி இராகத்தில் ரி, த, நி.

  • தீர்க்க ஸ்வரம் : நெடில் ஸ்வரம். நீண்ட ஒலியை உடைய ஸ்வரங்கள்.

உதாரணம்: ரீகாமா

  • தீவிர ஸ்வரம் : கோமள ஸ்வரத்தை விட சுருதியில் கூடிய ஸ்வரம். சுத்த ரிஷபம் கோமள ஸ்வரமும், சதுஸ்ருதி ரிஷபம் தீவிர ஸ்வரமும் ஆகும்.
  • தீர்க்க கம்பித ஸ்வரம் : நீண்ட அசைவுடன் ஒலிக்கப்படும் ஸ்வரம்.

உதாரணம்: ஆனந்தபைரவியில் காந்தாரம், நிஷாதம்.

  • துர்பல ஸ்வரம் : பலமற்ற ஸ்வரம். ஒரு இராகத்தில் துர்பல ஸ்வரம் அடிக்கடி வரலாம். ஆனால் அதைத் தீர்க்கமாகவோ, அழுத்தமாகவோ, ஜ்அண்டையாகவோ பிடிக்கக் கூடாது.

உதாரணம்: ஆரபியில் காந்தாரம்.

  • நியாஸ ஸ்வரம் : பிரயோகங்களின் முடிவில் வரக்கூடிய ஸ்வரம்.

உதாரணம்: சங்கராபரணத்தில் காந்தாரம்.

  • நிலை ஸ்வரம் : அம்ச ஸ்வரம் ஒரு இராகத்தில் நின்று சஞ்சாரம் செய்யக் கூடிய ஸ்வரம்.

உதாரணம்: சங்கராபரணத்தில் காந்தாரம்.

  • ஸ்வகீய ஸ்வரம் : அன்னிய ஸ்வரத்தின் எதிர்ப்பதம். ஒரு பாஷாங்கராகத்தில் அதன் கர்த்தாவைச் சேர்ந்த ஸ்வரத்தை ஸ்வகீயஸ்வரம் அல்லது சொந்தஸ்வரம் என்றும், கர்த்தாவுக்குப் புறம்பான ஸ்வரத்தை அன்னிய ஸ்வரம் என்றும் சொல்வர்.

உதாரணம்: பிலகரி இராகத்தில் காகலிநிஷாதம் ஸ்வகீய ஸ்வரமாகவும் கைசிகிநிஷாதம் அன்னிய ஸ்வரமாகவும் கருதப்படும்.

  • பிரயோகம் : சஞ்சாரம் ஒரு இராகத்தில் பொருத்தமாக வரக்கூடிய ஸ்வரக் கோர்வை.
  • ரஸம் : இது கானரஸம் என்றும் நவரஸம் என்றும் இரு வகைப்படும். வெறும் இசையின் மூலமாக ஏற்படும் உணர்ச்சி கானரஸமாகும். நவரஸங்களாவன சிருங்காரம், வீரம், கருணை, அற்புதம், ஹாஸ்யம், பயம், அருவருப்பு, கோபம், சாந்தம் என்பவை.
  • விசேட சஞ்சாரம் : இராகத்தின் ஆரோகண அவரோகணக் கிரமத்திற்குப் புறம்பான சஞ்சாரமாயிருந்து, இராகத்தின் ரஞ்சனையின் பொருட்டு உரிமையுடன் வருகின்ற பிரயோகம்.

உதாரணம்: சங்கராபரணத்தில் ஸ்தாபா

  • ஸர்வ ஸ்வர கமக வரிக ரக்தி இராகம் : எல்லா ஸ்வரங்களும் கமகத்துடன் அதாவது அசைவுடன் ஆலாபனையுடன் செய்யக்கூடிய இராகமாகும்.

உதாரணம்: மோகனம்.

  • ஸர்வ காலிக இராகம் : எல்லா வேளைகளிலும் பாடுவதற்குத் தகுதியான இராகம்.

உதாரணம்: சங்கராபரணம்

  • புராதன இராகம் : பழைய காலத்திலிருந்தே வழக்கிலிருந்து வரும் இராகம்.

உதாரணம்: மோகனம்.

  • மூர்ச்சனாகாரக இராகம் : கிரக பேதத்தினால் புதிய இராகங்களை உண்டாக்கக் கூடியது.

உதாரணம்: மோகனத்தின் ரிஷபத்தை ஷட்ஜமாக வைத்துக் கொண்டால் மத்தியமாவதியையும், காந்தாரம் இந்தோளத்தையும், பஞ்சமம் சுத்தசாவேரியையும், தைவதம் உதயரவிச்சந்திரிக்காவையும் கொடுக்கும்.

  • கமகம் என்பது இசையொலிகளுக்கு அழகூட்டும் ஒலி அசைவுகள் அல்லது அலைவுகள் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Prof. P Sambamoorthy (2005), South Indian Music - Vol I, Chennai, India: The Indian Music Publishing House, pp. 51–62
  2. "Chinmaya Swaranjali |".