சைமன் பிமேந்தா

(கர்தினால் சைமன் பிமேந்தா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கர்தினால் சைமன் பிமேந்தா (Simon Ignatius Cardinal Pimenta 1 மார்ச் 1920 - 19 ஜூலை 2013) கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்த ஓர் இந்தியக் கர்தினால் ஆவார்[1]. இவர் மும்பை மாநகரில் அந்தேரி பகுதியைச் சார்ந்த மரோல் என்னும் இடத்தில் 1920ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் முதல் நாள் பிறந்தார். மும்பை உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றி 1996இல் ஓய்வுபெற்றார்.

மேதகு

கர்தினால் சைமன் பிமேந்தா
மும்பை உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர்
சபைகத்தோலிக்க திருச்சபை
ஆட்சி பீடம்மும்பை உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர்
முன்னிருந்தவர்கர்தினால் வலேரியன் கிராசியாஸ்
பின்வந்தவர்கர்தினால் ஐவன் டீயாஸ்
பிற பதவிகள்-
  • மும்பை துணை ஆயர் (1971-1977)
  • மும்பை இணை ஆயர் (1977-1978)
  • மும்பை பேராயர் (1978-1996)
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடுதிசம்பர் 21, 1949
ஆயர்நிலை திருப்பொழிவுசூன் 5, 1971
கர்தினால் வலேரியன் கிராசியாஸ்-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டதுசூன் 28, 1988
கர்தினால் குழாம் அணிகுருக்கள் அணி
பிற தகவல்கள்
பிறப்பு(1920-03-01)மார்ச்சு 1, 1920
மரோல், மும்பை, இந்தியா
இறப்புசூலை 19, 2013(2013-07-19) (அகவை 93)
குடியுரிமைஇந்தியா
சமயம்கத்தோலிக்க திருச்சபை
குறிக்கோளுரைஅன்பே ஆணிவேரும் அடித்தளமுமாய் - Rooted and Grounded in Love (எபேசியர் 3:17)

இளமைப் பருவமும் குருத்துவப் பணியும்

தொகு

ஜோசப் அந்தோனி பிமேந்தா என்பவருக்கும் ரோசி பிமேந்தா என்பவருக்கும் மகனாகப் பிறந்த சைமன் பிமேந்தா மரோல் மராத்தி பள்ளியிலும் திருமுழுக்கு யோவான் பள்ளியிலும், புனித சேவியர் பள்ளியிலும் பயின்றார். கத்தோலிக்க குருவாகப் பணிபுரிய ஆர்வம் கொண்டு மும்பையில் உள்ள புனித பத்தாம் பயஸ் குருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மெய்யியலும் இறையியலும் கற்றார். மும்பை பல்கலைக்கழகத்தில் கல்வியியலும் கணிதமும் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார்.

அவர் 1949ஆம் ஆண்டு திசம்பர் 21ஆம் நாள் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். மேற்படிப்புக்காக உரோமை சென்று, திருத்தந்தை அர்பன் பல்கலைக்கழகத்தில் திருச்சபைச் சட்டத்துறையில் தேர்ச்சிபெற்று 1954இல் முனைவர் பட்டம் பெற்றார். நாடு திரும்பி துணைப் பங்குத்தந்தையாகவும் கர்தினால் வலேரியன் கிராசியாசுக்குச் செயலராகவும், மறைமாவட்ட துணைச் செயலராகவும், திருமண நீதிமன்ற அலுவலராகவும் பணிபுரிந்தார்.

1959-1968 காலகட்டத்தில் சைமன் பிமேந்தா மும்பை உயர்மறைமாவட்ட முதன்மைக் கோவிலில் பங்குத்தந்தையாகவும், குருத்துவக் கல்லூரியில் திருவழிபாட்டுப் பேராசிரியராகவும், இளம் குருக்களின் பயிற்சித் தலைவராகவும், புனித பத்தாம் பயஸ் குருத்துவக் கல்லூரித் தலைவராகவும் பல பணிகள் ஆற்றினார். சில நூல்களும் வெளியிட்டார்.

ஆயராக நியமனம்

தொகு

1971ஆம் ஆண்டு சூன் மாதம் 5ஆம் நாள் சைமன் பிமேந்தா மும்பை உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமிக்கப்பட்டார். அதே மாதம் 29ஆம் நாள் மும்பைப் பேராயர் கர்தினால் வலேரியன் கிராசியாஸ் சைமன் பிமேந்தாவுக்கு பந்த்ராவில் அமைந்துள்ள புனித பேதுரு கோவிலில் ஆயர் திருப்பொழிவு அளித்தார்.

திருத்தந்தை ஆறாம் பவுல் ஆயர் சைமன் பிமேந்தாவை மும்பை உயர்மறைமாவட்டத்தின் இணை ஆயராக 1977, பெப்ருவரி 26ஆம் நாள் நியமித்தார். 1978, செப்டம்பர் 11ஆம் நாள் பிமேந்தா மும்பை உயர்மறைமாவட்டத்தின் பேராயர் ஆனார்.

ஈராண்டுகள் பேராயர் பதவி வகித்த நிலையில் பிமேந்தா மும்பை உயர்மறைமாவட்ட மன்றத்தைக் கூட்டி, கிறித்தவ வாழ்வின் மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தார்.

1982ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி புனித பவுல் குருத்துவக் கல்லூரியில் நிகழ்ந்த இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவைக் கூட்டத்தில் சைமன் பிமேந்தா பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து நாகபுரி கூட்டத்திலும் (1984), கோவா (1986) கூட்டத்திலும் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1988 வரை அத்தகுதியில் பணியாற்றினார்.

1990 செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தில் நிகழ்ந்த ஆயர் மன்றத்தின் எட்டாம் பொதுக்கூட்டத்திற்குத் தலைமைதாங்கினார்.

கர்தினால் பதவி

தொகு

திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் பேராயர் சைமன் பிமேந்தாவை 1988, சூன் 28ஆம் நாள் கர்தினால் நிலைக்கு உயர்த்தினார். அப்போது தோர்ரே ஸ்பக்காத்தாவில் அமைந்த உலக அரசி அன்னை மரியா என்னும் கோவில் கர்தினால்-குரு என்னும் பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது.

தம் 75ஆம் அகவை நிறைந்ததும் கர்தினால் சைமன் பிமேந்தா பணி ஓய்வுக் கடிதம் சமர்ப்பித்தார். 1996, நவம்பர் 8ஆம் நாளில் ஓய்வு பெற்றார்.

2000ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் முதல் நாள் கர்தினால் சைமன் பிமேந்தா தம் 80ஆம் அகவை நிறைவுற்றபோது திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால் குழுக்கூட்டத்தில் கலந்து வாக்களிக்கும் உரிமையை இழந்தார்.

ஆதாரங்கள்

தொகு

மேலும் அறிய

தொகு

கர்தினால் பிமேந்தா பரணிடப்பட்டது 2006-10-27 at the வந்தவழி இயந்திரம்
கர்தினால் பிமேந்தா வாழ்க்கை பரணிடப்பட்டது 2013-12-31 at the வந்தவழி இயந்திரம்
கர்தினால் பிமேந்தா வாழ்க்கைக் குறிப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைமன்_பிமேந்தா&oldid=3357897" இலிருந்து மீள்விக்கப்பட்டது