கறுப்புச் சட்டம்

கறுப்புச் சட்டம் அல்லது கருப்புச் சட்டம் (Black Act) என்பது, அத்துமீறிக் காட்டு விலங்குகளை வேட்டையாடும் "கறுப்பர்" என அழைக்கப்பட்ட இரண்டு குழுக்களின் தொடர்த் தாக்குதல்களின் விளைவாக 1723 ஆம் ஆண்டு பெரிய பிரித்தானிய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம் ஆகும். தென்கடல் பொருளாதாரப் பெருக்கம் தகர்ந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக இக்குழுக்கள் உருவாகின. தாக்குதலின் போது தமது முகத்தைக் கறுப்பாக்கிக் கொள்ளும் வழக்கம் காரணமாகவே அவர்களுக்குக் "கறுப்பர்" என்னும் பெயர் ஏற்பட்டது. இவர்கள் விரைவாகவே "ஒரு திட்டமிட்ட செயற்பாட்டையும், சமூக எதிர்ப்பையும் வெளிக்காட்டினர்".[1] இவர்களின் நடவடிக்கைகள் 1723 ஏப்ரல் 26 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் கருப்புச் சட்டம் கொண்டுவருவதற்கு வித்திட்டன. அதே ஆண்டு மே 27 ஆம் திகதி இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. மாறு வேடத்தில் காட்டில் காணப்படுவது உள்ளிட்ட 50 குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க இச்சட்டம் வழிசமைத்தது. 18 ஆம் நூற்றாண்டில் கொண்டுவரப்பட்ட எந்தவொரு சட்டமும் இவ்வளவு கடுமையாக இருந்ததில்லை. பல வழக்குகளில் மரண தண்டனையும் விதிக்கப்பட்டதில்லை.[2] 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், உருவான குற்றவியற் சட்டச் சீர்திருத்தத்துக்கான இயக்கத்தைத் தொடர்ந்து, 1823 யூலை 8 ஆம் தேதி ராபர்ட் பீல் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தச் சட்டம் "கருப்புச் சட்டத்தைப்" பெருமளவுக்கு இல்லாமல் ஆக்கியது.

கறுப்புச் சட்டம்
நீளமான தலைப்புமாறுவேடத்தில் ஆயுதங்களுடன் சென்று பாதிப்புக்களை ஏற்படுத்துவதுடன், மேன்மைதங்கிய அரசரின் குடிமக்கள் மீதும் அவர்களின் சொத்துக்கள் மீதும் வன்முறையைப் பயன்படுத்தும் கெட்ட, கொடியவர்களை கூடுதல் பயனுள்ள வகையில் தண்டிப்பதற்கும், குற்றவாளிகளை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்துவதற்குமான சட்டம்.
அதிகாரம்9 Geo. 1 c. 22
நாட்கள்
அமலாக்கம்27 மே 1723
நிலை:

வெளிப்புற அலங்காரங்களில் கட்டுப்பாடுகளை விதித்த, 1774 இன் இலண்டன் கட்டிடச் சட்டமும் "கறுப்புச் சட்டம் என அழைக்கப்படுவது உண்டு.[3][4]

பின்னணி

தொகு

1720 இல் தென்கடல் பொருளாதாரப் பெருக்கம் சீர்குலைந்ததைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, சமூக இறுக்கங்கள் உயர்வடைவதற்கு வழிவகுத்தது. இதன் ஒரு சிறிய கூறே அம்ப்சயரையும், வின்சர் காட்டையும் தளமாகக் கொண்ட இரண்டு சட்டத்துக்குப் புறம்பான வேட்டைக் குழுக்களின் நடவடிக்கைகள் ஆகும்.[5] இவற்றுள் முதல் செயற்பாடு 1721 அக்டோபரில் அம்ப்சயர் குழுவினால் மேற்கொள்ளப்பட்டது. 16 சட்டவிரோத வேட்டைக்காரர்கள் ஃபார்ண்காம் (Farnham) என்னும் இடத்தில் கூடி வின்செசுட்டர் ஆயரின் பூங்காப் பகுதிக்குள் நுழைந்து இரண்டு மான்களைக் கொன்றதுடன், மூன்றைப் பிடித்தும் சென்றனர். பின்னர் இவர்களுள் நால்வர் பிடிபட்டனர். ஆனாலும், இருவருக்கு எதிராகச் சான்றுகள் போதாமையால் விடுதலையாக இருவருக்கு ஓராண்டும் ஒரு நாளும் சிறைத் தண்டனை கிடைத்தது. இத்தண்டனைக்குப் பதிலடியாகச் சட்டவிரோத வேட்டைக்காரர் மீண்டும் ஆயரின் சொத்தின் மீதே தாக்குதல் நடத்தத் தீர்மானித்தனர். வழமையான சட்டவிரோத வேட்டைக்காரரின் நடவடிக்கைகளிலிருந்து வேறுபட்டுக் காணப்பட்ட இது, திட்டமிடப்பட்ட செயற்பாட்டையும் சமூக எதிப்புணர்வையும் வெளிக்காட்டும் ஒன்றாக அமைந்தது. இப்பதிலடியின்போது 11 மான்கள் எடுத்துச் செல்லப்பட்டதுடன், பல கொல்லப்பட்டன. இதைத் தொடர்ந்து இக்கும்பலைப் பிடிப்பதற்கான தகவல் தருவோருக்கு £100 சன்மானம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.[1] இதைத் தொடர்ந்து தொடர்ச்சியான பல தாக்குதல்கள் இடம்பெற்றதானது, நேரடியான வகுப்புசார்ந்த வெறுப்புணர்வை எடுத்துக்காட்டியது. இதன் உச்சக் கட்டமாக வேல்சு இளவரசர் பிரெடெரிக்குக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வைன் கொள்ளையிடப்பட்டது. இதன் விளைவாக கடுபோக்கு நீதிபதியான சர் பிரான்சிசு பேஜ் என்பவர் வின்செசுட்டருக்கு அனுப்பப்பட்டார். இதனால், அம்சயர் கறுப்பர்கள் தலைமறைவானார்கள்.[6]

இதன் பின்னர் அம்சயர் குழுவைப் பின்பற்றி வின்ட்சர் கறுப்பர் தமது நடவடிக்கைகளைத் தொடங்கினர். கடொகனின் ஏர்ளுக்குச் சொந்தமான கவர்சாம் பூங்காவே இவர்களது முக்கிய இலக்காக அமைந்தது. 1722 இலும் 1723 இலும் தொடரான பல தாக்குதல்கள் இடம்பெற்றன. ஒரு தாக்குதலில் பூங்காப் பணியாளரொருவரின் மகன் உயிரிழக்க நேரிட்டது.[7] இதன் விளைவாகவே அரசாங்கம் 1723 ஏப்ரல் 26 இல் கறுப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, மே 27 இல் நடைமுறைக்குக் கொண்டு வந்தது.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Rogers 1974, ப. 468.
  2. Radzinowicz 1945, ப. 56.
  3. Santo, Philip (2013). Inspections and Reports on Dwellings: Assessing Age. Taylor & Francis. p. 83. {{cite book}}: |access-date= requires |url= (help)
  4. Street, Emma (2011). Architectural Design and Regulation. John Wiley & Sons. {{cite book}}: |access-date= requires |url= (help)
  5. Rogers 1974, ப. 467.
  6. Rogers 1974, ப. 470.
  7. Rogers 1974, ப. 471.
  8. Broad 1988, ப. 70.

உசாத்துணைகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கறுப்புச்_சட்டம்&oldid=2718514" இலிருந்து மீள்விக்கப்பட்டது